திருக்கோடிக் குழகர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சுந்தரர் தேவாரம்:

(1)
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதான் அயலே இருந்தால் குற்றமாமோ
கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையா இருந்தீரே
(2)
முன்தான் கடல் நஞ்சமுண்ட அதனாலோ
பின்தான் பரவைக்குபகாரம் செய்தாயோ
குன்றாப் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
என்தான் தனியே இருந்தாய் எம்பிரானே
(3)
மத்தம் மலிசூழ் மறைக்காடதன் தென்பால்
பத்தர் பலர்பாட இருந்த பரமா
கொத்தார் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே
(4)
காடேல் மிக வாலிது காரிகை அஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
வேடித் தொண்டர் சாலவும் தீயர் சழக்கர்
கோடிக்குழகா இடம் கோயில் கொண் டாயே
(5)
மையார் தடங்கண்ணி பங்கா, கங்கையாளும்
மெய்ஆகத்து இருந்தனள் வேறிடமில்லை
கையார் வளைக் காடுகாளோடும் உடனாய்க்
கொய்யார் பொழில் கோடியே கோயில் கொண்டாயே
(6)
அரவேர் அல்குலாளைஒர் பாகம்அமர்ந்து
மரவம்கமழ் மாமறைக்காடதன் தென்பால்
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே
(7)
பறையும்  குழலும் ஒலி பாடல் இயம்ப
அறையும் கழலார்க்க நின்றாடும் அமுதே
குறையாப் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே
(8)
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அது தானோ
அற்றப்பட ஆரூர் அதென்றகன்றாயோ
முற்றா மதி சூடிய கோடிக்குழகா
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே
(9)
நெடியானொடு நான்முகனும் அறிவொண்ணாப்
படியான் பலிகொள்ளுமிடம் குடியில்லை
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரைமேல்
அடிகேள் அன்பதாய் இடம் கோயில் கொண்டாயே
(10)
பாரூர் மலிசூழ் மறைக்காடதன் தென்பால்
ஏரார் பொழில் சூழ்தரு கோடிக்குழகை
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
சீரூர் சிவலோகத்திருப்பவர் தாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page