திருக்கோகரணம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கோகரணம்

(1)
என்றும் அரியான் அயலவர்க்கு, இயலிசைப் பொருள்களாகி எனதுள்
நன்றும் ஒளியான், ஒளிசிறந்த பொன்முடிக் கடவுள் நண்ணும் இடமாம்
ஒன்றிய மனத்தடியர் கூடி இமையோர் பரவு நீடரவமார்
குன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே
(2)
பேதைமட மங்கையொரு பங்கு இட மிகுத்து, இடபமேறி, அமரர்
வாதைபட வண் கடலெழுந்த விடமுண்ட சிவன் வாழும் இடமாம்
மாதரொடு மாடவர்கள் வந்தடிஇறைஞ்சி, நிறை மாமலர்கள் தூய்க்
கோதைவரி வண்டிசைகொள் கீத முரல்கின்ற வளர் கோகரணமே
(3)
முறைத் திறமுறப் பொருள் தெரிந்து முனிவர்க்கருளி ஆலநிழல்வாய்
மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன்இடம்
துறைத்துறை மிகுத்தருவி தூமலர் சுமந்து, வரைஉந்தி, மதகைக்
குறைத்தறையிடக் கரி புரிந்திடறு சாரல்மலி கோகரணமே
(4)
இலைத்தலை மிகுத்தபடை எண்கரம் விளங்க, எரி வீசி, முடிமேல்
அலைத்தலை தொகுத்தபுனல் செஞ்சடையில் வைத்த அழகன் தன்இடமாம்
மலைத்தலை வகுத்த முழைதோறும் உழை வாளரிகள் கேழல்களிறு
கொலைத்தலை மடப்பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே
(5)
தொடைத்தலை மலைத்திதழி துன்னிய வெருக்கலரி வன்னிமுடியின்
சடைத்தலை மிலைச்சிய தபோதனன் எம்ஆதி பயில்கின்ற பதியாம்
படைத்தலை பிடித்து மறவாளரொடு வேடர்கள் பயின்று குழுமிக்
குடைத்தலை நதிப்படிய நின்று பழிதீர நல்கு கோகரணமே
(6)
நீறு திருமேனி மிசை ஆடி, நிறை வார்கழல் சிலம்பொலி செய
ஏறுவிளையாட விசை கொண்டு இடுபலிக்கு வரும் ஈசன்இடமாம்
ஆறு சமயங்களும் விரும்பி அடிபேணி, அரன்ஆகமம் மிகக்
கூறு, மனம் வேறிரதி வந்தடியர் கம்பம்வரு கோகரணமே
(7)
கல்லவட மொந்தைகுழல் தாளமலி கொக்கரையர், அக்கரை மிசை
பல்லபட நாகம்விரி கோவணவர் ஆளு நகரென்பர், அயலே
நல்லமட மாதரர் அரநாமமும் நவிற்றிய திருத்த முழுகக்
கொல்லவிட நோயகல் தரப்புகல் கொடுத்தருளும் கோகரணமே
(8)
வரைத்தல நெருக்கிய முருட்டிருள் நிறத்தவன் வாய்கள்அலற
விரல்தலை உகிர்ச்சிறிது வைத்த பெருமான் இனிது மேவும்இடமாம்
புரைத்தலை கெடுத்த முனிவாணர் பொலிவாகி வினைதீர அதன்மேல்
குரைத்தலை கழல்பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே
(9)
வில்லிமையினால் விறலரக்கன் உயிர் செற்றவனும், வேதமுதலோன்
இல்லை உளதென்றிகலி நேட எரியாகி உயர்கின்ற பரன்ஊர்
எல்லையில் வரைத்தகடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசமுருவக்
கொல்லையில் இளங்குறவர் தம்மயிர் புலர்த்திவளர் கோகரணமே
(10)
நேசமில் மனச்சமணர் தேரர்கள் நிரந்தமொழி பொய்கள் அகல்வித்து
ஆசை கொள் மனத்தை அடியாரவர் தமக்கருளும் அங்கணன்இடம்
பாசமதறுத்தவனியில் பெயர்கள் பத்துடைய மன்னவனைக்
கூசவகை கண்டுபின் அவற்கருள்கள் நல்கவல கோகரணமே
(11)
கோடல் அரவீனும் விரிசாரல் முன்நெருங்கி வளர் கோகரணமே
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி, அணிகாழி நகரான்
நாடிய தமிழ்க் கிளவியின் இசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள்
பாடவல பத்தரவர் எத்திசையும் ஆள்வர், பரலோகம் எளிதே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page