திருக்கொள்ளிக்காடு:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நிணம்படு சுடலையின் நீறு பூசிநின்று
இணங்குவர், பேய்களோடிடுவர் மாநடம்
உணங்கல் வெண்தலை தனில் உண்பராயினும்
குணம் பெரிதுடையர் நம் கொள்ளிக்காடரே
(2)
ஆற்றநல் அடியிணை அலர் கொண்டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றலனாகி முன்அடர்த்து வந்தணை
கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே
(3)
அத்தகு வானவர்க்காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத்தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக்காடரே
(4)
பாவண மேவுசொல் மாலையில்பல
நாவணம் கொள்கையில் நவின்ற செய்கையர்
ஆவணம் கொண்டெமை ஆள்வராயினும்
கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே
(5)
வாரணி வனமுலை மங்கையாளொடும்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுகலார் எயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக்காடரே
(6)
பஞ்சுதோய் மெல்லடிப் பாவையாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே
(7)
இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னியின் மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே
(8)
எடுத்தனன் கயிலையை இயல் வலியினால்
அடர்த்தனர் திருவிரலால் அலறிடப்
படுத்தனர் என்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக்காடரே
(9)
தேடினார் அயன்முடி மாலும் சேவடி
நாடினார் அவரென்று நணுககிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க்கருள் செய்வர் கொள்ளிக்காடரே
(10)
நாடிநின்று அறிவில் நாணிலிகள், சாக்கியர்
ஓடிமுன் ஓதிய உரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக்காடரே
(11)
நற்றவர் காழியுண் ஞானசம்பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமிழ் இன்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page