(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
நீரானே, நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே, தாமரைமேல் அயன்தான் தொழும்
சீரானே, சீர் திகழும் திருக்காறாயில்
ஊரானே என்பவர் ஊனமிலாதாரே
(2)
மதியானே, வரிஅரவோடுடன் மத்தஞ்சேர்
விதியானே, விதியுடை வேதியர் தாந்தொழும்
நெதியானே, நீர்வயல் சூழ் திருக்காறாயில்
பதியானே என்பவர் பாவம்இலாதாரே
(3)
விண்ணானே, விண்ணவர் ஏத்தி விரும்பும்சீர்
மண்ணானே, மண்ணிடை வாழும் உயிர்க்கெல்லாம்
கண்ணானே, கடிபொழில் சூழ் திருக்காறாயில்
எண்ணானே என்பவர் ஏதமிலாதாரே
(4)
தாயானே தந்தையுமாகிய தன்மைகள்
ஆயானே, ஆயநல் அன்பர்க்கணியானே
சேயானே, சீர்திகழும் திருக்காறாயில்
மேயானே என்பவர் மேல்வினை மேவாவே
(5)
கலையானே, கலைமலி செம்பொன் கயிலாய
மலையானே, மலைபவர் மும்மதில் மாய்வித்த
சிலையானே, சீர்திகழும் திருக்காறாயில்
நிலையானே என்பவர் மேல்வினை நில்லாவே
(6)
ஆற்றானே, ஆறணி செஞ்சடை ஆடரவு
ஏற்றானே, ஏழுலகும் இமையோர்களும்
போற்றானே, பொழில் திகழும் திருக்காறாயில்
நீற்றானே என்பவர் மேல்வினை மேவாவே
(7)
சேர்த்தானே, தீவினை தேய்ந்தறத் தேவர்கள்
ஏத்தானே, ஏத்துநன் மாமுனிவர்க்கு இடர்
காத்தானே, கார்வயல் சூழ் திருக்காறாயில்
ஆர்த்தானே என்பவர் மேல்வினை ஆடாவே
(8)
கடுத்தானே காலனைக் காலால், கயிலாயம்
எடுத்தானை ஏதமாக, முனிவர்க்கிடர்
கெடுத்தானே, கேழ் கிளரும் திருக்காறாயில்
அடுத்தானே என்பவர் மேல்வினை ஆடாவே
(9)
பிறையானே, பேணிய பாடலொடு இன்னிசை
மறையானே, மாலொடு நான்முகன் காணாத
இறையானே, எழில் திகழும் திருக்காறாயில்
உறைவானே என்பவர் மேல்வினை ஓடுமே
(10)
செடியாரும் புன்சமண் சீவரத்தார்களும்
படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை
கடியாரும் பூம்பொழில் சூழ் திருக்காறாயில்
குடியாரும் கொள்கையினார்க்கில்லை குற்றமே
(11)
ஏய்ந்த சீரெழில் திகழும் திருக்காறாயில்
ஆய்ந்த சீரான் அடியேத்தி அருள் பெற்ற
பாய்ந்தநீர்க் காழியுண் ஞானசம்பந்தன் சொல்
வாய்ந்தவாறேத்துவார் வானுலகாள்வாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...