திருக்களர்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
நீருளார் கயல் வாவி சூழ்பொழில் நீண்ட மாவயல் ஈண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊருளார்இடு பிச்சை பேணும் ஒருவனே, ஒளிர் செஞ்சடை மதி
ஆர நின்றவனே, அடைந்தார்க்கருளாயே
(2)
தோளின் மேலொளி நீறு தாங்கிய தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய
தாளினார், வளரும் தவமல்கு திருக்களருள்
வேளினேர் விசயற்ககருள் புரி வித்தகா, விரும்பும் அடியாரை
ஆளுகந்தவனே, அடைந்தார்க்கருளாயே
(3)
பாடவல்லநன் மைந்தரோடு பனிமலர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ் செழுமாடத் திருக்களருள்
நீடவல்ல நிமலனே, அடி நிரைகழல் சிலம்பார்க்க மாநடம்
ஆட வல்லவனே, அடைந்தார்க்கருளாயே
(4)
அம்பினேர் தடங்கண்ணினாருடன் ஆடவர் பயில் மாட மாளிகை
செம்பொனார் பொழில் சூழ்ந்தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி எம்இறைவா, இணையடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே, அடைந்தார்க்கருளாயே
(5)
கொங்குலா மலர்ச்சோலை வண்டினம் கெண்டி மாமது உண்டிசை செயத்
தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடும் கூடிய மணவாளனே, பிணை கொண்டொர் கைத்தலத்து
அங்கையில் படையாய், அடைந்தார்க்கருளாயே
(6)
கோல மாமயில் ஆலக் கொண்டல்கள் சேர்பொழில் குலவும் வயலிடைச்
சேலிளம் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்டனே, நிமிர் புன்சடைப் பெருமான் எனப்பொலி
ஆல நீழலுளாய், அடைந்தார்க்கருளாயே
(7)
தம் பலம் அறியாதவர் மதில் தாங்கு மால்வரையால் அழலெழத்
திண்பலம் கெடுத்தாய், திகழ்கின்ற திருக்களருள்
வம்பலர் மலர் தூவி நின்னடி வானவர் தொழக் கூத்துகந்து, பேர்
அம்பலத்துறைவாய், அடைந்தார்க்கருளாயே
(8)
குன்றடுத்தநன் மாளிகைக் கொடிமாட நீடுயர் கோபுரங்கள் மேல்
சென்றடுத்துயர்வான் மதிதோயும் திருக்களருள்
நின்றடுத்துயர் மால்வரைத் திரள் தோளினால் எடுத்தான்தன் நீள்முடி
அன்றடர்த்துகந்தாய், அடைந்தார்க்கருளாயே
(9)
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல்ஆடலொடார வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில் சேரும் திருக்களருள்
உண்ணிலாவிய ஒருவனே, இருவர்க்கு நின்கழல் காட்சி ஆரழல்
அண்ணலாய எம்மான், அடைந்தார்க்கருளாயே
(10)
பாக்கியம் பலசெய்த பத்தர்கள் பாட்டொடும் பலபணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாரும் திருக்களருள்
வாக்கின் நான்மறை ஓதினாய், அமண் தேரர் சொல்லிய சொற்களான பொய்
ஆக்கி நின்றவனே, அடைந்தார்க்குருளாயே
(11)
இந்து வந்தெழு மாடவீதி எழில்கொள் காழிநகர்க் கவுணியன்
செந்து நேர்மொழியார் அவர்சேரும் திருக்களருள்
அந்திஅன்னதொர் மேனியானை, அமரர் தம்பெருமானை, ஞானசம்
பந்தன் சொல்லிவை பத்தும் பாடத் தவமாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page