(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சுந்தரர் தேவாரம்):
(1)
குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவம் கண்டு
குறிப்பினொடும் சென்றவள்தன் குணத்தினை நன்கறிந்து
விரும்பும்வரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே
(2)
செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி
செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக்கருளி
இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி
இந்திரனைத் தோள்முரித்த இறையவன்ஊர் வினவில்
பெருமேதை மறையொலியும் பேரிமுழ ஒலியும்
பிள்ளையினம் துள்ளி விளையாட்டொலியும் பெருகக்
கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலம்
களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர் காணே
(3)
இண்டைமலர் கொண்டுமணல் இலிங்கமதியற்றி
இனத்தாவின் பாலாட்ட இடறிய தாதையைத் தாள்
துண்டமிடு சண்டியடி அண்டர் தொழுதேத்தத்
தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும்
மறைஒலியும் விழவொலியும் மறுகு நிறைவெய்திக்
கண்டவர்கள் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடும் கலயநல்லூர் காணே
(4)
மலைமடந்தை விளையாடி வளையாடு கரத்தால்
மகிழ்ந்தவள்கண் புதைத்தலுமே வல்லிருளாய் எல்லா
உலகுடன்தான் மூடஇருள் ஓடும்வகை நெற்றி
ஒற்றைக்கண் படைத்துகந்த உத்தமனூர் வினவில்
அலைஅடைந்த புனல்பெருகி ஆனை மருப்பிடறி
அகிலொடு சந்துந்தி வரும் அரிசிலின்தென் கரைமேல்
கலையடைந்து கலிகடி அந்தணர்ஓமப் புகையால்
கணமுகில்போன்று அணிகிளரும் கலயநல்லூர் காணே
(5)
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்தமரர் குறைந்திரப்ப நினைந்தருளி அவர்க்காய்
வெற்பார்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தனூர் வினவில்
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்திறை தன் திறத்தே
கற்பாரும் கேட்பாருமாய்எங்கும் நன்கார்
கலைபயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே
(6)
பெற்றிமை ஒன்றறியாத தக்கனது வேள்விப்
பெருந்தேவர் சிரந்தோள்பல் கரங்கள் பீடழியச்
செற்றுமதிக் கலைசிதையத் திருவிரலால் தேய்வித்து
அருள்பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்றுகொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும்
திரைபொருது வருபுனல்சேர் அரிசிலின்தென் கரைமேல்
கற்றினம்நல் கரும்பின்முளை கறிகற்கக் கறவை
கமழ்கழுநீர் கவர்கழனிக் கலயநல்லூர் காணே
(7)
இலங்கையர்கோன் சிரம் பத்தோடிருபது திண்தோளும்
இற்றலற ஒற்றைவிரல் வெற்பதன்மேல் ஊன்றி
நிலங்கிளர்நீர் நெருப்பொடு காற்றாகாசம் ஆகி
நிற்பனவும் நடப்பனவாம் நின்மலன்ஊர் வினவில்
பலங்கள்பல திரைஉந்திப் பருமணிபொன் கொழித்துப்
பாதிரி சந்தகிலினொடு கேதகையும் பருகிக்
கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின்தென் கரைமேல்
கயல்உகளும் வயல்புடைசூழ் கலயநல்லூர் காணே
(8)
மாலயனும் காண்பரிய மால்எரியாய் நிமிர்ந்தோன்
வன்னிமதி சென்னிமிசை வைத்தவன் மொய்த்தெழுந்த
வேலைவிடம் உண்ட மணிகண்டன், விடைஊரும்
விமலன் உமைஅவளோடு மேவியஊர் வினவில்
சோலைமலி குயில்கூவக் கோலமயில் ஆலச்
சுரும்பொடு வண்டிசை முரலப் பசுங்கிளி சொல்துதிக்கக்
காலையிலும் மாலையிலும் கடவுள்அடி பணிந்து
கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே
(9)
பொரும் பலமதுடை அசுரன் தாரகனைப் பொருது
பொன்றுவித்த பொருளினைமுன் படைத்துகந்த புனிதன்
கரும்புவிலின் மலர்வாளிக் காமன்உடல் வேவக்
கனல்விழித்த கண்ணுதலோன் கருதும்ஊர் வினவில்
இரும்புனல்வெண் திரைபெருகி ஏலம் இலவங்கம்
இருகரையும் பொருதலைக்கும் அரிசிலின் தென்கரைமேல்
கரும்புனைவெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக்
கவின்காட்டும் கடிபொழில்சூழ் கலயநல்லூர் காணே
(10)
தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்
தடங்கொள் பெருங்கோயில்தனில் தக்க வகையாலே
வண் கமலத்தயன் முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவியஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசம் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே
(11)
தண்புனலும் வெண்மதியும் தாங்கிய செஞ்சடையன்
தாமரையோன் தலைகலனாக் காமரமுன் பாடி
உண்பலி கொண்டுழல் பரமன் உறையும்ஊர், நிறைநீர்
ஒழுகுபுனல் அரிசிலின்தென் கலயநல்லூர் அதனை
நண்புடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
நாவலர்கோன் ஆரூரன் நாவின் நயந்துரைசெய்
பண்பயிலும் பத்தும் இவை பத்திசெய்து பாட
வல்லவர்கள் அல்லலொடு பாவம்இலர் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...