(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
அரியும் நம்வினை உள்ளன ஆசற
வரிகொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்தெம்
பெரியவன் கழல் பேணவே
(2)
தங்குமோ வினை தாழ்சடை மேலவன்
திங்களோடுடன் சூடிய
கங்கையான் திகழும் கரவீரத்தெம்
சங்கரன் கழல் சாரவே
(3)
ஏதம் வந்தடையா இனி நல்லன
பூதம் பல்படை ஆக்கிய
காதலான் திகழும் கரவீரத்தெம்
நாதன் பாதம் நணுகவே
(4)
பறையும் நம்வினை உள்ளன பாழ்பட
மறையும் மாமணி போல் கண்டம்
கறையவன், திகழும் கரவீரத்தெம்
இறையவன் கழலேத்தவே
(5)
பண்ணினார் மறை பாடலன் ஆடலன்
விண்ணினார் மதிலெய்த முக்
கண்ணினான், உறையும் கரவீரத்தை
நண்ணுவார் வினை நாசமே
(6)
நிழலினார் மதி சூடிய நீள்சடை
அழலினார் அழலேந்திய
கழலினார் உறையும் கரவீரத்தைத்
தொழ வல்லார்க்கு இல்லை துக்கமே
(7)
வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்
அண்டனார், அழல் போல்ஒளிர்
கண்டனார், உறையும் கரவீரத்துத்
தொண்டர் மேல் துயர் தூரமே
(8)
புனல் இலங்கையர்கோன் முடி பத்திறச்
சினவல் ஆண்மை செகுத்தவன்
கனலவன் உறைகின்ற கரவீரம்
என வல்லார்க்கிடர் இல்லையே
(9)
வெள்ளத் தாமரையானொடு மாலுமாய்த்
தெள்ளத் தீத்திரளாகிய
கள்ளத்தான் உறையும் கரவீரத்தை
உள்ளத்தான் வினை ஓயுமே
(10)
செடிய மண்ணொடு சீவரத்தார்அவர்
கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின்
கடியவன் உறைகின்ற கரவீரத்து
அடியவர்க்கு இல்லை அல்லலே
(11)
வீடிலான் விளங்கும் கரவீரத்தெம்
சேடன் மேல் கசிவால் தமிழ்
நாடு ஞானசம்பந்தன் சொல்லிவை
பாடுவார்க்கில்லை பாவமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...