(1)
பொடிகொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள் கொன்றை கலந்த நீற்றர், கறைசேர் கண்டத்தர்
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடிய விடைமேல் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே
(2)
புரிகொள் சடையர், அடியர்க்கெளியார், கிளிசேர் மொழிமங்கை
தெரிய உருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரிய களிற்றை அரவுவிழுங்கி மழுங்க இருள் கூர்ந்த
கரிய மிடற்றர், செய்ய மேனிக் கயிலை மலையாரே
(3)
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன்மேல்
மேவு மதியும் நதியும் வைத்த இறைவர் கழல் உன்னும்
தேவர்தேவர், திரிசூலத்தர், திரங்கல் முகவன் சேர்
காவும் பொழிலும் கடுங்கற் சுனைசூழ் கயிலை மலையாரே
(4)
முந்நீர் சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர், மதனன் தன்
தென்னீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார்
மன்னீர் மடுவும் படு கல்லறையின் உழுவை சினம் கொண்டு
கன்னீர் வரைமேல் இரைமுன் தேடும் கயிலை மலையாரே
(5)
ஒன்றும் பலவுமாய வேடத்தொருவர், கழல் சேர்வார்
நன்று நினைந்து நாடற்குரியார், கூடித் திரண்டெங்கும்
தென்றி இருளில் திகைத்த கரி தண்சாரல் நெறியோடிக்
கன்றும் பிடியும் அடிவாரம்சேர் கயிலை மலையாரே
(6)
தாதார் கொன்றை தயங்கு முடியர், முயங்கு மடவாளைப்
போதார் பாகமாக வைத்த புனிதர், பனிமல்கும்
மூதார்உலகின் முனிவருடனாய் அற நான்கருள் செய்த
காதார் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே
(7)
…
(8)
தொடுத்தார் புரமூன்று எரியச் சிலைமேல் எரியொண் பகழியார்
எடுத்தான் திரள்தோள் முடிகள் பத்து மிடிய விரல்வைத்தார்
கொடுத்தார் படைகள் கொண்டார் ஆளாக், குறுகி வரும் கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே
(9)
ஊணாப் பலிகொண்டுலகில் ஏற்றார், இலகு மணிநாகம்
பூணான் ஆரமாகப் பூண்டார், புகழும் இருவர்தாம்
பேணாஓடி நேட எங்கும் பிறங்கும் எரியாகிக்
காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே
(10)
விருதுபகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர்
பொருது பகரும் மொழியைக் கொள்ளார், புகழ்வார்க்கணியராய்
எருதொன்றுகைத்திங்கு, இடுவார் தம்பால் இரந்துண்டு, இகழ்வார்கள்
கருதும் வண்ணம் உடையார் போலும் கயிலை மலையாரே
(11)
போரார் கடலில் புனல்சூழ் காழிப் புகழார் சம்பந்தன்
காரார் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார்மேல்
தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார்மேல்
வாரா பிணிகள் வானோர் உலகின் மருவு மனத்தாரே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...