திருக்கடைமுடி:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லதிங்கு உலகமேத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே
(2)
திரைபொரு திருமுடி திங்கள் விம்மும்
அரைபொரு புலியதள் அடிகள்இடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே
(3)
ஆலிள மதியினொடரவு கங்கை
கோல வெண்ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே
(4)
கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவன்ஊர்
பையணி அரவொடு மான்மழு வாள்
கைஅணிபவன் இடம் கடைமுடியே
(5)
மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் என உலகேத்தும், கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே
(6)
படஅரவேர் அல்குல் பல்வளைக் கை
மடவரலாளை ஓர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே
(7)
பொடிபுல்கு மார்பினில் புரிபுல்கு நூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகள்இடம்
கொடிபுல்கு மலரொடு குளிர் சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே
(8)
நோதல் செய்த அரக்கனை நோக்கழியச்
சாதல் செய்தவன், அடி சரண் எனலும்
ஆதரவருள் செய்த அடிகள் அவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே
(9)
அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி அருள் என்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன்இடம்
கடைமுடி அதனயல் காவிரியே
(10)
மண்ணுதல் பறித்தலும் மாயம்இவை
எண்ணிய கால்அவை இன்பமல்ல
ஒண்ணுதல் உமையைஓர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே
(11)
பொன்திகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவைசொல இன்பமாமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page