திருக்கடவூர் மயானம் – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கடவூர் மயானம்

(1)
மருவார் கொன்றை மதிசூடி
    மாணிக்கத்தின் மலைபோல
வருவார் விடைமேல், மாதோடு
    மகிழ்ந்து பூதப்படை சூழத்
திருமால் பிரமன் இந்திரற்கும்
    தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான், கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(2)
விண்ணோர் தலைவர், வெண்புரிநூல்
    மார்பர், வேத கீதத்தர்
கண்ணார் நுதலர், நகுதலையர்
    காலகாலர், கடவூரர்
எண்ணார் புரமூன்று எரிசெய்த
    இறைவர், உமையோர் ஒருபாகம்
பெண்ஆணாவர் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(3)
காயும் புலியின் அதளுடையர்
    கண்டர் எண்தோள் கடவூரர்
தாயும் தந்தை பல்லுயிர்க்கும்
    தாமேயாய தலைவனார்
பாயும் விடையொன்றது ஏறிப்
    பலிதேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(4)
நறைசேர் மலர் ஐங்கணையானை
    நயனத் தீயால் பொடிசெய்த
இறையார் ஆவார், எல்லார்க்கும்
    இல்லை என்னாது அருள் செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
    பயிலும் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார், மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(5)
கொத்தார் கொன்றை மதிசூடிக்
    கோணாகங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து
    மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
    பாடியாடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(6)
துணிவார் கீளும் கோவணமும்
    துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமேலிட்ட பாசுபதர்
    பஞ்சவடி மார்பினர், கடவூர்த்
திணிவார், குழையார், புரமூன்றும்
    தீவாய்ப்படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(7)
காரார் கடலின் நஞ்சுண்ட
    கண்டர், கடவூர்உறை வாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
    சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தான் ஆவது உலகேழும்
    உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர்
பேராயிரவர் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(8)
வாடா முலையாள் தன்னோடும்
    மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழல் பின்சென்று
    குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணம் செருச்செய்து
    ஆவநாழி நிலையருள் செய்
பீடார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(9)
வேழம் உரிப்பர், மழுவாளர்
    வேள்வி அழிப்பர், சிரம்அறுப்பர்
ஆழியளிப்பர், அரிதனக்கு
    ஆனஞ்சுகப்பர், அறம்உரைப்பர்
ஏழை தலைவர், கடவூரில்
    இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
    பெரிய பெருமான் அடிகளே
(10)
மாட மல்கு கடவூரின்
    மறையோர் ஏத்து மயானத்துப்
பீடை தீர அடியாருக்கு
    அருளும் பெருமான் அடிகள்சீர்
நாடி நாவலாரூரன்
    நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடும் அடியார் கேட்பார்மேல்
    பாவமான பறையுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page