திருஈங்கோய்மலை:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
வானத்துயர் தண்மதிதோய் சடைமேல் மத்த மலர்சூடித்
தேனொத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடும் கடவுள், உலகேத்த
ஏனத்திரள் வந்திழியும் சாரல் ஈங்கோய் மலையாரே
(2)
சூலப்படை ஒன்றேந்தி, இரவில் சுடுகாடு இடமாகக்
கோலச்சடைகள் தாழக், குழல்யாழ் மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல்இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே
(3)
கண்கொள் நுதலார்; கறைகொள் மிடற்றார்; கரியின் உரி தோலார்
விண்கொள் மதிசேர் சடையார்; விடையார் கொடியார்; வெண்ணீறு
பெண்கொள் திருமார்பதனில் பூசும் பெம்மான், எமையாள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய் மலையாரே
(4)
மறையின் இசையார், நெறிமென் கூந்தல்  மலையான் மகளோடும்
குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன் சடைதாழப்
பறையும் குழலும் கழலும்ஆர்ப்ப படுகாட்டு எரியாடும்
இறைவர், சிறை வண்டறை பூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே
(5)
நொந்த சுடலைப்பொடி நீறணிவார், நுதல்சேர் கண்ணினார்
கந்தமலர்கள் பலவும் நிலவு கமழ்புன் சடைதாழப்
பந்தண் விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
எந்தம் அடிகள் கடிகொள் சாரல் ஈங்கோய் மலையாரே
(6)
நீறார் அகலமுடையார்; நிரையார் கொன்றை அரவோடும்
ஆறார் சடையார்; அயில் வெங்கணையால் அவுணர் புரமூன்றும்
சீறா எரிசெய் தேவர் பெருமான்; செங்கண் அடல் வெள்ளை
ஏறார் கொடியார், உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
(7)
வினையாயின தீர்த்தருளே புரியும் விகிர்தன்; விரிகொன்றை
நனையார் முடிமேல் மதியம் சூடு நம்பான்; நலமல்கு
தனையார் கமலமலர் மேலுறைவான் தலையோடு அனலேந்தும்
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
(8)
பரக்கும்பெருமை இலங்கைஎன்னும் பதியில் பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியும் தோளும் அணியார் விரல்தன்னால்
நெருக்கிஅடர்த்து நிமலாபோற்றி என்று நின்றேத்த
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
(9)
வரியார் புலியின் உரிதோலுடையான், மலையான் மகளோடும்
பிரியாது உடனாய் ஆடல்பேணும் பெம்மான், திருமேனி
அரியோடுஅயனும் அறியா வண்ணம் அளவில் பெருமையோடு
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய் மலையாரே
(10)
பிண்டிஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்
மண்டை கலனாக் கொண்டு திரியும் மதியில் தேரரும்
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடு உடனாகி
இண்டைச் சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய் மலையாரே
(11)
விழவார் ஒலியும், முழவும்ஓவா வேணுபுரம் தன்னுள்
அழலார் வண்ணத்தடிகள் அருள்சேர் அணிகொள் சம்பந்தன்
எழிலார் சுனையும் பொழிலும் புடைசூழ் ஈங்கோய் மலைஈசன்
கழல்சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page