திருஅரசிலி:

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
பாடல் வண்டறை கொன்றை, பால்மதி, பாய்புனல் கங்கை
கோடல் கூவிள மாலை மத்தமும் செஞ்சடைக் குலாவி
வாடல் வெண்தலை மாலை மருவிட, வல்லியம் தோள்மேல்
ஆடல் மாசுணம் அசைத்த அடிகளுக்கிடம் அரசிலியே
(2)
ஏறு பேணியதேறி, இளமதக் களிற்றினை எற்றி
வேறுசெய்து அதன் உரிவை வெண்புலால் கலக்க மெய்போர்த்த
ஊறு தேனவன், உம்பர்க்கொருவன், நல்லொளி கொள் ஒண்சுடராம்
ஆறு சேர்தரு சென்னி அடிகளுக்கிடம் அரசிலியே
(3)
கங்கை நீர்சடை மேலே கதமிகக், கதிரிள வனமென்
கொங்கையாள்ஒரு பாகம் மருவிய கொல்லை வெள்ளேற்றன்
சங்கையாய்த் திரியாமே தன்னடியார்க்கருள் செய்து
அங்கையால் அனலேந்தடிகளுக்கிடம் அரசிலியே
(4)
மிக்க காலனை வீட்டி, மெய்கெடக் காமனை விழித்துப்
புக்க ஊரிடு பிச்சை உண்பது, பொன்திகழ் கொன்றை
தக்க நூல்திகழ் மார்பில் தவள வெண்ணீறணிந்து, ஆமை
அக்கின்ஆரமும் பூண்ட அடிகளுக்கிடம் அரசிலியே
(5)
மானஞ்சும் மடநோக்கி மலைமகள் பாகமும் மருவித்
தானஞ்சா அரண் மூன்றும் தழலெழச் சரமது துரந்து
வானஞ்சும் பெருவிடத்தை உண்டவன், மாமறையோதி
ஆனஞ்சாடிய சென்னி அடிகளுக்கிடம் அரசிலியே
(6)
பரிய மாசுணம் கயிறாப் பருப்பதம் அதற்கு மத்தாகப்
பெரிய வேலையைக் கலங்கப் பேணிய வானவர் கடையக்
கரிய நஞ்சது தோன்றக் கலங்கிய அவர்தமைக் கண்டு
அரிய வாரமுதாக்கும் அடிகளுக்கிடம் அரசிலியே
(7)
—-
(8)
வண்ண மால்வரை தன்னை மறித்திடலுற்ற வல்லரக்கன்
கண்ணும் தோளுநல் வாயும் நெரிதரக் கால் விரலூன்றிப்
பண்ணின் பாடல் கைநரம்பால் பாடிய பாடலைக் கேட்டு
அண்ணலாய் அருள்செய்த அடிகளுக்கிடம் அரசிலியே
(9)
குறிய மாணுருவாகிக் குவலயம் அளந்தவன் தானும்
வெறிகொள் தாமரை மேலே விரும்பிய மெய்த் தவத்தோனும்
செறிவொணா வகை எங்கும் தேடியும் திருவடி காண
அறிவொணா உருவத்தெம் அடிகளுக்கிடம் அரசிலியே
(10)
குருளை எய்திய மடவார் நிற்பவே, குஞ்சியைப் பறித்துத்
திரளை கையில் உண்பவரும், தேரரும், சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக்கிடம் அரசிலியே
(11)
அல்லி நீள்வயல் சூழ்ந்த அரசிலி அடிகளைக் காழி
நல்ல ஞானசம்பந்தன் நற்றமிழ் பத்திவை நாளும்
சொல்ல வல்லவர் தம்மைச் சூழ்ந்தமரர் தொழுதேத்த
வல்ல வானுலகெய்தி வைகலும் மகிழ்ந்திருப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page