தருமபுரம்:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னதோர்
    நடையுடை மலைமகள் துணையென மகிழ்வர்
பூதஇனப்படை நின்றிசை பாடவும் ஆடுவர்
    அவர் படர்சடை நெடுமுடியதொர் புனலர்
வேதமொடு ஏழிசை பாடுவர், ஆழ்கடல் வெண்திரை
    இரைநுரை கரைபொருது விம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
    எழில்பொழில் குயில்பயில் தருமபுரம் பதியே
(2)
பொங்கு நடைப்புகலில் விடையாம் அவரூர்தி, வெண்
    பொடியணி தடங்கொள் மார்பு பூணநூல் புரள
மங்குலிடைத் தவழும் மதி சூடுவர், ஆடுவர்
    வளங்கிளர் புனலரவம் வைகிய சடையர்
சங்குகடல் திரையால் உதையுண்டு சரிந்திரிந்து
    ஒசிந்தசைந்து இசைந்து சேரும் வெண்மணல் குவைமேல்
தங்குகதிர் மணிநித்தில மெல்லிருள் ஒல்கநின்று
    இலங்கொளி நலங்கெழில் தருமபுரம் பதியே
(3)
விண்ணுறு மால்வரை போல் விடையேறுவர், ஆறு
    சூடுவர், விரிசுரி ஒளிகொள் தோடு நின்றிலங்கக்
கண்ணுற நின்றொளிரும் கதிர் வெண்மதிக் கண்ணியர்
    கழிந்தவர் இழிந்திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர், தம்உருவம் அயன்மால் தொழ
    அரிவையைப் பிணைந்து இணைந்து அணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடு எண்இதழ் மௌவல் மருங்கலர்
    கருங்கழி நெருங்குநல் தருமபுரம் பதியே
(4)
வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொடுஆடுவர்
    வளங்கிளர் இளங்கு திங்கள் வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
    கடு விடைகொடி வெடிகொள் காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பரவப்படுவோரவர்
    படுதலைப் பலிகொளல் பரிபவம் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
    தழைபொழில் மழைநுழை தருமபுரம் பதியே
(5)
நேரும் அவர்க்குணரப் புகில் இல்லை, நெடுஞ்சடைக்
    கடும்புனல் படர்ந்திடம் படுவ்வதொர் நிலையர்
பேரும் அவர்க்கெனை ஆயிரம், முன்னைப் பிறப்பிறப்பு
    இலாதவர், உடற்தடர்த்த  பெற்றி ஆரறிவார்
ஆரம் அவர்க்கு அழல்வாயதொர் நாகம், அழகுற
    எழுகொழும் மலர்கொள் பொன்னிதழி நல்அலங்கல்
தாரம் அவர்க்கு இமவான் மகள், ஊர்வது போர்விடை
    கடிபடு செடிபொழில் தருமபுரம் பதியே
(6)
கூழையம் கோதை குலாய வடம்பிணை புல்க மல்கு
    மென்முலைப் பொறிகொள் பொற்கொடியிடைத் துவர்வாய்
மாழை ஒண்கண் மடவாளைஒர் பாகம் மகிழ்ந்தவர்
    வலம் மலிபடை, விடைகொடி, கொடும் மழுவாள்
யாழையும் எள்கிட ஏழிசை வண்டுமுரன்று, இனம்
    துவன்றி மென்சிறகு அறையுற நறவிரியும் நல்
தாழையும் ஞாழலும் நீடிய கானலின் அள்ளல்
    இசைபுள்ளினம் துயில்பயில் தருமபுரம் பதியே
(7)
தேமரு வார்குழல், அன்னநடைப் பெடை மான்விழித்
    திருந்திழை பொருந்து மேனி, செங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடையில் துதை வெண்மதி துன்றுகொன்றை
    தொல்புனல் சிரம் கரந்துரித்த தோலுடையர்
காமரு தண்கழி நீடிய கானல கண்டகம்
    கடல்அடை கழியிழிய முண்டகத்தயலே
தாமரை சேர் குவளைப் படுகில் கழு நீர்மலர்
    வெறி கமழ் செறிவயல் தருமபுரம் பதியே
(8)
தூவண நீறகலம் பொலிய விரைபுல்க மல்கு
    மென்மலர் வரைபுரை திரள்புயம் அணிவர்
கோவணமும் உழையின் அதளும் உடைஆடையர்
    கொலை மலி படையொர் சூலமேந்திய குழகர்
பாவணமா அலறத் தலை பத்துடைய அரக்கன்
    வலியொர் கவ்வை செய்தருள்புரி தலைவர்
தாவண வேறுடை எம்அடிகட்கிடம் வன்தடம்
    கடல்இடும் தடங்கரைத் தருமபுரம் பதியே
(9)
வார்மலி மென்முலை மாதொரு பாகமதாகுவர்
    வளங்கிளர் மதி அரவம் வைகிய சடையர்
கூர்மலி சூலமும், வெண் மழுவும் அவர் வெல்படை
    குனிசிலை தனி மலையது ஏந்திய குழகர்
ஆர்மலி ஆழிகொள் செல்வனும், அல்லிகொள் தாமரை
    மிசையவன் அடிமுடி அளவுதாம் அறியார்
தார்மலி கொன்றை அலங்கல் உகந்தவர் தங்கிடம்
    தடங்கடல் இடுந்திரைத் தருமபுரம் பதியே
(10)
புத்தர்கள், துவர் மொய்த்துறி புல்கிய கையர், பொய்
    மொழிந்தழிவில் பெற்றியுற்ற நற்றவர் புலவோர்
பத்தர்கள் அத்தவ மெய்ப் பயனாக உகந்தவர்
    நிகழ்ந்தவர் சிவந்தவர், சுடலைப்பொடி அணிவர்
முத்தன வெண்ணகைஒண் மலை மாதுமை பொன்னணி
    புணர் முலையிணை துணை அணைவதும் பிரியார்
தத்தருவித் திரளுந்திய மால்கடலோதம் வந்து
    அடர்ந்திடும் தடம்பொழில் தருமபுரம் பதியே
(11)
பொன்னெடு நன்மணி மாளிகைசூழ் விழவம்மலீ
    பொரூஉம் புனல் திரூஉஅமர் புகலி என்றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம்பந்தனது
    செந்தமிழ்த் தடங்கடல் தருமபுரம் பதியைப்
பின்னெடு வார்சடையில் பிறையும் அரவும் உடையவன்
    பிணை துணைகழல்கள் பேணுதல் உரியார்
இன்னெடு நன்னுலகெய்துவர், எய்திய போகமும்
    உறுவர்கள், இடர்பிணி துயர்அணைவிலரே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page