சென்னிப் பத்து

<– திருவாசகம்

(1)
தேவ தேவன், மெய்ச் சேவகன்
தென்பெருந்துறை நாயகன்
மூவராலும் அரியொணா !முத
லாய ஆனந்த மூர்த்தியான்
யாவராயினும் அன்பரன்றி
அறியொணா மலர்ச் சோதியான்
தூய மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னிச் சுடருமே

(2)
அட்டமூர்த்தி, அழகன், !இன்னமு
தாய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன், மெய்ச்சிவலோக நாயகன்
தென்பெருந்துறைச் சேவகன்
மட்டுவார் குழல் மங்கையாளைஓர்
பாகம் வைத்த அழகன் தன்
வட்ட மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே

(3)
நங்கைமீர் எனை நோக்குமின், நங்கள்
நாதன் – நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள்சூழ் பெருந்துறை
மேய சேவகன் – நாயகன்
மங்கைமார் கையில் வளையுங் கொண்டெம்
உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னிப் பொலியுமே

(4)
பத்தர் சூழப் பராபரன்
பாரில் வந்து பார்ப்பான் எனச்
சித்தர் சூழச் சிவபிரான்
தில்லை மூதூர் நடஞ்செய்வான்
எத்தனாகி வந்தில் புகுந்தெமை
ஆளுங்கொண்டெம் பணி கொள்வான்
வைத்த மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே

(5)
மாய வாழ்க்கையை மெய்யென்றெண்ணி
மதித்திடா வகை நல்கினான்
வேயதோள் உமைபங்கன் – எங்கள்
திருப்பெருந்துறை மேவினான்
காயத்துள் அமுதூறஊற நீ
கண்டு கொள்ளென்று காட்டிய
சேய மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னித் திகழுமே

(6)
சித்தமே புகுந்தெம்மை ஆட்கொண்டு
தீவினை கெடுத்துய்யலாம்
பத்தி தந்து தன் பொற்கழற்கணே
பன்மலர் கொய்து சேர்த்தலும்
முத்தி தந்திந்த மூவுலகுக்கும்
அப்புறத்தெமை வைத்திடு
மத்தன் மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே

(7)
பிறவி என்னும் இக்கடலை நீந்தத் தன்
பேரருள் தந்தருளினான்
அறவை என்றடியார்கள் தங்கள்
அருட்குழாம் புகவிட்டு, நல்
உறவு செய்தெனை உய்யக் கொண்ட
பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
திறமை காட்டிய சேவடிக்கண் நம்
சென்னி மன்னித் திகழுமே

(8)
புழுவினாற் பொதிந்திடு குரம்பையிற்
பொய்தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதியெம் ஈசன் எம்பிரான்
என்னுடை அப்பன் என்றென்று
தொழுத கையினராகித் தூய்மலர்க்
கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
வழுவிலா மலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னி மலருமே

(9)
வம்பனாய்த் திரிவேனை வாவென்று
வல்வினைப் பகை மாய்த்திடும்
உம்பரான் – உலகூடறுத்தப்
புறத்தனாய் நின்ற எம்பிரான்
அன்பர் ஆனவர்க்கருளி, !மெய்யடி
யார்கட்கின்பந் தழைத்திடுஞ்
செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண் நம்
சென்னி மன்னித் திகழுமே

(10)
முத்தனை, முதற்சோதியை, முக்கண்
அப்பனை, முதல் வித்தினைச்
சித்தனைச், சிவலோகனைத், திரு
நாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள் – இங்கே வம்மின் – நீர்உங்கள்
பாசந் தீரப் பணிமினோ
சித்தமார்தருஞ் சேவடிக்கண் நம்
சென்னி மன்னித் திகழுமே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page