சக்கரப்பள்ளி:

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
படையினார் வெண்மழுப், பாய்புலித்தோல் அரை
உடையினார், உமையொரு கூறனார், ஊர்வதோர்
விடையினார், வெண்பொடிப் பூசியார், விரிபுனல்
சடையினார் உறைவிடம் சக்கரப் பள்ளியே
(2)
பாடினார் அருமறை, பனிமதி சடைமிசைச்
சூடினார், படுதலை துன்எருக்கு அதனொடும்
நாடினார் இடுபலி, நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே
(3)
மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே
(4)
நலமலி கொள்கையார், நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும்ஊர், வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே
(5)
வெந்தவெண் பொடியணி வேதியர், விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோடமரும் ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடணை புனல் சக்கரப் பள்ளியே
(6)
பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார், வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார், உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார், உறைவிடம் சக்கரப் பள்ளியே
(7)
பாரினார் தொழுதெழு பரவு பல்லாயிரம்
பேரினார், பெண்ணொரு கூறனார், பேரொலி
நீரினார் சடைமுடி, நிரைமலர்க் கொன்றையம்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே
(8)
முதிரிலா வெண்பிறை சூடினார், முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார், வரை தனால்
அதிரிலா வல்லரக்கன் வலி வாட்டிய
சதிரினார், வளநகர் சக்கரப் பள்ளியே
(9)
துணிபடு கோவணம், சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர், பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசையானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே
(10)
உடம்புபோர் சீவரர், ஊண்தொழில் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே
(11)
தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
கண்ணுதல் அவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல்
பண்ணிய இவைசொலப் பறையும் மெய்ப்பாவமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page