(1)
அவ்வினைக்கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கூனமன்றே
கைவினை செய்தெம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்
(2)
காவினை இட்டும், குளம்பல தொட்டும், கனிமனத்தால்
ஏவினையார் எயில் மூன்றெரித்தீர் என்றிரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்
(3)
முலைத்தடம் மூழ்கிய போகங்களும், மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமையாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
(4)
விண்ணுலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்றிரு போதும் தொழப்படும் புண்ணியரே
கண்இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்
(5)
மற்றிணையில்லா மலை திரண்டன்ன திண் தோளுடையீர்
கிற்றுஎமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துன் திருவடியே அடைந்தோம்
செற்றுஎமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
(6)
மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்து உமையேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப் பெறா திருநீலகண்டம்
(7)
…
(8)
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்து உமையேத்துதும் நாமடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே
திருஇலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
(9)
நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப் பெறா திருநீலகண்டம்
(10)
சாக்கியப் பட்டும் சமணுருவாகி உடையொழிந்தும்
பாக்கியமின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்
(11)
பிறந்த பிறவியில் பேணிஎம் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண்டாகில் இமையவர் கோன்அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே