கீர்த்தித் திருஅகவல்

<– திருவாசகம்

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிரெல்லாம் பயின்றனனாகி
எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகுந்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்

என்னுடை இருளை ஏறத் துரந்தும்
அடியார் உள்ளத்தன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும்
மன்னு மாமலை மகேந்திரம் அதனிற்
சொன்ன ஆகமந் தோற்றுவித்தருளியும்

கல்லாடத்துக் கலந்தினிதருளி
நல்லாளோடு நயப்புறவெய்தியும்
பஞ்சப் பள்ளியிற் பான்மொழி தன்னொடும்
எஞ்சாதீண்டும் இன்னருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்

விராவு கொங்கை நற்றடம் படிந்தும்
கேவேடராகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்திருந்(து)
உற்றஐம் முகங்களாற் பணித்தருளியும்

நந்தம் பாடியில் நான்மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்தருளியும்
வேறு வேறுருவும் வேறு வேறியற்கையும்
நூறு நூறாயிரம் இயல்பினதாகி
ஏறுடை ஈசன் இப்புவனியை உய்யக்

கூறுடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குட நாடதன்மிசைச்
சதுர்படச் சாத்தாய்த் தானெழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்

தற்பணம் அதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற்கீந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கதாகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்களவறி ஒண்ணான்

நரியைக் குதிரையாக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்பத்

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணனாகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநன் மாநகர் இருந்து
குதிரைச் சேவகனாகிய கொள்கையும்

ஆங்கது தன்னில் அடியவட்காகப்
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தரகோச மங்கையுள் இருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவணம் அதனிற் பொலிந்திருந்தருளித்

தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாதவூரினில் வந்தினிதருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திருவார் பெருந்துறைச் செல்வனாகிக்
கருவார் சோதியிற் கரந்த கள்ளமும்

பூவலம் அதனிற் பொலிந்தினிதருளிப்
பாவ நாசமாக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நன்னீர்ச் சேவகனாகிய நன்மையும்
விருந்தினனாகி வெண்காடதனில்

குருந்தின் கீழ்அன்றிருந்த கொள்கையும்
பட்டமங்கையிற் பாங்காய் !இருந்தங்
கட்டமா சித்தி அருளிய அதுவும்
வேடுவனாகி வேண்டுருக் கொண்டு
காடது தன்னிற் கரந்த கள்ளமும்

மெய்க்காட்டிட்டு வேண்டுருக் கொண்டு
தக்கான் ஒருவனாகிய தன்மையும்
ஓரியூரின் உகந்தினிதருளிப்
பாரிரும் பாலகனாகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும்

தேவூர் தென்பால் திகழ்தரு தீவிற்
கோவார் கோலங் கொண்ட கொள்கையும்
தேனமர் சோலைத் திருவாரூரில்
ஞானந் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருததனில் ஈண்ட இருந்து

படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்
ஏகம்பத்தின் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடாயின பரிசும்
திருவாஞ்சியத்திற் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்

சேவகனாகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறதனிற் சைவனாகியும்

துருத்தி தன்னில் அருத்தியோடிருந்தும்
திருப்பனையூரில் விருப்பனாகியும்
கழுமலம் அதனிற் காட்சி கொடுத்தும்
கழுக்குன்றதனில் வழுக்காதிருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும்

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்
அந்தமில் பெருமை அழலுருக்கரந்து
சுந்தர வேடத்தொரு முதல் உருவு!கொண்
டிந்திர ஞாலம் போல வந்தருளி
எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத்

தானேயாகிய தயாபரன் எம்மிறை
சந்திர தீபத்துச் சாத்திரனாகி
அந்தரத்திழிந்து வந்தழகமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்திருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன்

அந்தமில் பெருமை அருளுடை அண்ணல்
எந்தமை ஆண்ட பரிசது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திருவுரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனந் தன்னை ஒருங்குடன் அறுக்கும்

ஆனந்தம்மே ஆறா அருளியும்
மாதிற் கூறுடை மாப்பெருங் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கடையாமல் ஆண்டு கொண்டருள்பவன்
கழுக்கடை தன்னைக் கைக்கொண்டருளியும்

மூலமாகிய மும்மலம் அறுக்குந்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதலனாகிக் கழுநீர் மாலை
ஏலுடைத்தாக எழில்பெற அணிந்தும்
அரியொடு பிரமற்களவறியாதவன்

பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாரா வழியருள் புரிபவன்
பாண்டி நாடே பழம் பதியாகவும்
பத்திசெய் அடியரைப் பரம்பரத்துய்ப்பவன்
உத்தரகோசமங்கை ஊராகவும்

ஆதிமூர்த்திகட்கருள் புரிந்தருளிய
தேவ தேவன் திருப்பெயராகவும்
இருள் கடிந்தருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருண் மலையாகவும்
எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்

அப்பரிசதனால் ஆண்டு கொண்டருளி
நாயினேனை நலமலி தில்லையுள்
கோலமார் தரு பொதுவினில் வருகென
ஏல என்னை ஈங்கொழித்தருளி
அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர்

ஒன்றவொன்ற உடன் கலந்தருளியும்
எய்த வந்திலாதார் எரியிற் பாயவும்
மாலதுவாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனிற் புரண்டு வீழ்ந்தலறியும்
கால்விசைத்தோடிக் கடல்புக மண்டி

நாத நாத என்றழுதரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக்கருளிய பரமநாடக !என்
றிதஞ் சலிப்பெய்த நின்றேங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்தியல்புடை அம்பொன்

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய் உமையொடு !காளிக்
கருளிய திருமுகத்தழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கினிதருளினன்

ஒலிதரு கயிலை உயர்கிழவோனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page