கடம்பந்துறை

<– சோழ நாடு (காவிரி தென்கரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
முற்றிலா முலையாள் இவளாகிலும்
அற்றம் தீர்க்கும் அறிவிலள்ஆகிலும்
கற்றைச் செஞ்சடையான் கடம்பந்துறைப்
பெற்றம் ஊர்தி என்றாள் எங்கள் பேதையே
(2)
தனகிருந்ததொர் தன்மையராகிலும்
முனகு தீரத் தொழுதெழுமின்களோ
கனகப் புன்சடையான் கடம்பந்துறை
நினைய வல்லவர் நீள் விசும்பாள்வரே
(3)
ஆரியம் தமிழோடு இசையானவன்
கூரிய குணத்தார் குறி நின்றவன்
காரிகை உடையான் கடம்பந்துறைச்
சீரியல் பத்தர் சென்றடைமின்களே
(4)
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை
வண்ண நன்மலரான், பல தேவரும்
கண்ணனும் அறியான் கடம்பந்துறை
நண்ண நம் வினையாயின நாசமே
(5)
மறை கொண்ட மனத்தானை மனத்துளே
நிறைகொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்மினோ
கறை கண்டன் உறையும் கடம்பந்துறை
சிறைகொண்ட வினைதீரத் தொழுமினே
(6)
நங்கை பாகம் வைத்த நறுஞ்சோதியைப்
பங்கமின்றிப் பணிந்தெழுமின்களோ
கங்கைச் செஞ்சடையான் கடம்பந்துறை
அங்கமோதி அரன் உறைகின்றதே
(7)
அரிய நான்மறை ஆறங்கமாய் ஐந்து
புரியன், தேவர்கள் ஏத்த நஞ்சுண்டவன்
கரிய கண்டத்தினான், கடம்பந்துறை
உரியவாறு நினை மட நெஞ்சமே
(8)
பூமென் கோதை உமையொரு பாகனை
ஓமம் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தால்
காமற்காய்ந்த பிரான் கடம்பந்துறை
நாமமேத்த நம் தீவினை நாசமே
(9)
பாரணங்கி வணங்கிப் பணிசெய
நாரணன் பிரமன் அறியாததோர்
காரணன், கடம்பந்துறை மேவிய
ஆரணங்கொரு பாலுடை மைந்தனே
(10)
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப்
பாலால் ஐந்துடனாடும் பரமனார்
காலால் ஊன்றுகந்தான் கடம்பந்துறை
மேலால் நாம்செய்த வல்வினை வீடுமே

 

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page