கச்சிநெறிக் காரைக்காடு

<– தொண்டை நாடு

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

சம்பந்தர் தேவாரம்:

(1)
வாரணவு முலைமங்கை பங்கினராய் அங்கையினில்
போரணவு மழுவொன்றங்கேந்தி வெண் பொடியணிவர்
காரணவு மணிமாடம் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே
(2)
காரூரு மணிமிடற்றார், கரிகாடர், உடைதலை கொண்டு
ஊரூரன் பலிக்குழல்வார், உழைமானின் உரியதளர்
தேரூரும் நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரு மலர்ப் பொய்கை நெறிக்காரைக் காட்டாரே
(3)
கூறணிந்தார் கொடியிடையைக், குளிர்சடைமேல் இளமதியோடு
ஆறணிந்தார், ஆடரவம் பூண்டுகந்தார், ஆன்வெள்ளை
ஏறணிந்தார், கொடியதன் மேல் என்பணிந்தார், வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
(4)
பிறைநவின்ற செஞ்சடைகள் பின்தாழப், பூதங்கள்
மறைநவின்ற பாடலோடாடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
(5)
அன்றாலின் கீழ்இருந்தங்கறம் புரிந்த அருளாளர்
குன்றாத வெஞ்சிலையில் கோளரவ நாண் கொளுவி
ஒன்றாதார் புரமூன்றும் ஓங்கெரியில் வெந்தவிய
நின்றாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
(6)
பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்றும் ஒருநொடியில்
வில் மலையினால் கொளுவி வெங்கணையால் எய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
(7)
புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா அலை புனலோடிள மதியம் ஏந்துசடைப்
பெற்றுடையார், ஒருபாகம் பெண்ணுடையார், கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
(8)
ஏழ்கடல்சூழ் தென்இலங்கைக் கோமானை எழில் வரைவாய்த்
தாழ்விரலால் ஊன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்கும் சூழ்வயலும் மதில்புல்கி அழகமரும்
நீண்டமறுகில் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
(9)
ஊண்தானும் ஒலிகடல் நஞ்சு, உடைதலையில் பலிகொள்வர்
மாண்டார்தம் எலும்பணிவர், வரிஅரவோடெழிலாமை
பூண்டார், இருவர் அறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.
(10)
குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவார் உரைப்பனகள் மெய்யல்ல
வண்டாரும்  குழலாளை வரைஆகத்தொரு பாகம்
கண்டாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே
(11)
கண்ணாரும் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாரும் திருமேனிப் பெருமானதடி வாழ்த்தித்
தண்ணாரும் பொழில்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாரும் தமிழ்வல்லார் பரலோகத்திருப்பாரே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page