(குறிப்பு: சுந்தரரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
சுந்தரர் தேவாரம்:
(1)
மத்த யானையேறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆருமில்லை சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(2)
தோற்றமுண்டேல் மரணமுண்டு துயர மனைவாழ்க்கை
மாற்றமுண்டேல் வஞ்சமுண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீலகண்டர், நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(3)
செடிகொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழாமுன்
வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே
கொடிகொள் ஏற்றர், வெள்ளை நீற்றர், கோவண ஆடையுடை
அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(4)
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவராலும் இகழப்பட்டிங்கு அல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(5)
அரித்து நம்மேல் ஐவர் வந்திங்கு ஆறலைப்பான் பொருட்டால்
சிரித்த பல்வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன்
வரிக்கொடுத்து இவ்வாளரக்கர் வஞ்சமதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(6)
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்தடைப்பான் பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மொடாடி நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மையேத்த அம்மை நமக்கருளும்
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(7)
கூசம் நீக்கிக், குற்றம் நீக்கிச், செற்ற மனம்நீக்கி
வாசமல்கு குழலினார்கள் வஞ்ச மனைவாழ்க்கை
ஆசை நீக்கி, அன்பு சேர்த்தி, என்பணிந்து ஏறேறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(8)
இன்பமுண்டேல் துன்பமுண்டு ஏழை மனைவாழ்க்கை
முன்பு சொன்னால் மோழைமையாம் முட்டை மனத்தீரே
அன்பரல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடிசேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(9)
தந்தையாரும் தவ்வையாரும் எட்டனைச் சார்வாகார்
வந்து நம்மோடு உள்ளளாவி வான நெறிகாட்டும்
சிந்தையீரே நெஞ்சினீரே, திகழ்மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
(10)
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்
மருதுகீறி ஊடுபோன மாலயனும் அறியாச்
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணாச் சோதிஎம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பதடைவோமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...