(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திரள் உந்திச்
சினமார்தரு திறல் வாளெயிற்றரக்கன் மிகுகுன்றில்
இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே
(2)
மலையார்தரு மடவாளொரு பாகம் மகிழ்வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலையார்தரு புலவோர்அவர் காவல்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே
(3)
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே
(4)
பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்
தொழிலால்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே
(5)
பந்தார்விரல் உமையாள்ஒரு பங்கா, கங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயல் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவம்கமழ் குன்றில்
எந்தாய்என இருந்தான்இடம் இடும்பாவனம் இதுவே
(6)
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையும் நினைவாகி
அறிநீர்மையில் எய்தும் அவர்க்க்கறியும் அறிவருளிக்
குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவனம் இதுவே
(7)
நீறேறிய திருமேனியர் நிலவும் உலகெல்லாம்
பாறேறிய படுவெண்தலை கையில்பலி வாங்காக்
கூறேறிய மடவாளொரு பாகம் மகிழ்வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே
(8)
தேரார்தரு திகழ்வாள் எயிற்றரக்கன் சிவன் மலையை
ஓராதெடுத்தார்த்தான், முடி ஒருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலை வாளொடு குணநாமமும் கொடுத்த
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவனம் இதுவே
(9)
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்
மருளார்தரு மாயன்அயன் காணார் மயலெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவனம் இதுவே
(10)
தடுக்கையுடன் இடுக்கித் தலைபறித்துச் சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல்வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர் செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவான்இடம் இடும்பாவனம் இதுவே
(11)
கொடியார் நெடுமாடக் குன்றளூரில் கரைக்கோல
இடியார்கடல் அடிவீழ்தரும் இடும்பாவனத்திறையை
அடிஆயும் அந்தணர்காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல்சொலப் பறையும் வினை தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...