(1)
கொம்பிரிய வண்டுலவு கொன்றை, புரிநூலொடு குலாவித்
தம் பரிசினோடு சுடுநீறு தட வந்து, இடபமேறிக்
கம்பரிய செம்பொன் நெடுமாடமதில் கல்வரைவிலாக
அம்பெரிய எய்தபெருமான் உறைவது அவளிவணலூரே
(2)
ஓமையன கள்ளியன வாகையன கூகை முரலோசை
ஈமமெரி சூழ்சுடலை வாச முதுகாடு நடமாடித்
தூய்மையுடை அக்கொடரவம் விரவி மிக்கொளி துலங்க
ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே
(3)
நீறுடைய மார்பில் இமவான் மகளொர் பாகநிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடி அழகாயதொரு கோலம்
ஏறுடையரேனும் இடுகாடு இரவினின்று நடமாடும்
ஆறுடைய வார்சடையினான் உறைவது அவளிவணலூரே
(4)
பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணிப்
பணியும் அடியார்களன பாவமற இன்னருள் பயந்து
துணியுடைய தோலும், உடை கோவணமும், நாகமுடல் தொங்க
அணியும் அழகாக உடையான் உறைவது அவளிவணலூரே
(5)
குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை இண்டை புனைவார் கடவுள் என்றமரர் கூடித்
தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலராவர்
அழலுமழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே
(6)
துஞ்சலிலராய அமரர் நின்று தொழுதேத்த அருள் செய்து
நஞ்சுமிடறுண்டு கரிதாய வெளிதாகியொரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்து உமைநடுங்க அகலத்தொடளாவி
அஞ்சமத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே
(7)
கூடரவ மொந்தைகுழல் யாழ் முழவினோடும் இசை செய்யப்
பீடரவம் ஆகுபடர் அம்புசெய்து பேரிடபமோடும்
காடரவமாகு கனல் கொண்டு இரவில் நின்று நடமாடி
ஆடரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே
(8)
ஒருவரையும் மேல்வலி கொடேன் எனஎழுந்த விறலோன்இப்
பெருவரையின் மேலொர் பெருமானும் உளனோ என வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலுமன்ன திறல்கைகள் உடையோனை
அருவரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே
(9)
பொறிவரிய நாகமுயர் பொங்கணை அணைந்த புகழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல் விழுமியோனும்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல் மிகநின்று சிறிதேயும்
அறிவரியனாய பெருமான் உறைவது அவளிவணலூரே
(10)
கழியருகு பள்ளியிடமாக வடு மீன்கள் கவர்வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசில் உள்கி வருவாரும்
பழியருகினார் ஒழிக, பான்மையொடு நின்று தொழுதேத்தும்
அழியருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே
(11)
ஆனமொழியான திறலோர் பரவும் அவளிவணலூர் மேல்
போனமொழி நன்மொழிகளாய புகழ் தோணிபுர ஊரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம்பந்தன்
தேனமொழி மாலைபுகழ்வார் துயர்கள் தீயதிலர் தாமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...