(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
எரிதர அனல் கையில்ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே
(2)
மையகண் மலைமகள் பாகமாய், இருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் இறைசெய்த கோயில் சேர்வரே
(3)
மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை எழில்வளர் இடமதென்பரே
(4)
இரவுமல்கு இளமதி சூடி ஈடுயர்
பரவமல்கு அருமறை பாடி ஆடுவர்
அரவமோடுயர் செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல்கு எழில்நகர் மருவி வாழ்வரே
(5)
சங்கணி குழையினர், சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே
(6)
கழல்வளர் காலினர், சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி ஆடுவர்
அழல்வளர் மறையவர், அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடமதென்பரே
(7)
இகலுறு சுடரெரி இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடியாடுவர்
அகலிட மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிட நெடுநகர் புகுவர் போலுமே
(8)
எரியன மணிமுடி இலங்கைக் கோன்தன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதம் சூழவே
(9)
வெறிகிளர் மலர்மிசை அவனும் வெந்தொழில்
பொறிகிளர் அரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர், அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த கோயில் சேர்வரே
(10)
வழிதலை பறிதலை அவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை ஒழிந்துளர் உமையும் தாமுமே
(11)
அழகரை அடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீலகண்டரை
உமிழ்திரை உலகினில் ஓதுவீர் கொள்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...