(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(சம்பந்தர் தேவாரம்):
(1)
வாடிய வெண்தலை மாலைசூடி, மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான், அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே
(2)
துன்னம்கொண்ட உடையான், துதைந்த வெண்ணீற்றினான்
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான், மாநகர்
அன்னம்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினையோடுமே
(3)
உடுத்ததுவும் புலித்தோல், பலி திரிந்துண்பதும்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையும் காலினால்
அடுத்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே
(4)
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவும் கழற்காலனைப், பண்ணினால் மறை
ஆய்ந்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகளொரு பாகமே
(5)
போர்த்ததுவும் கரியின் உரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழுவேந்திக் கோளரவம் அரைக்கு
ஆர்த்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படர்எரி மூழ்கவே
(6)
தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன்
எரிந்ததுவும், முன்எழிலார் மலர்உறைவான் தலை
அரிந்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே
(7)
ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொருளாகி, மெய்ச்
சோதியென்று தொழுவாரவர் துயர் தீர்த்திடும்
ஆதி, எங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர்வினை நீங்குமே
(8)
செறுத்ததுவும் தக்கன் வேள்வியைத், திருந்தார்புரம்
ஒறுத்ததுவும், ஒளிமாமலர் உறைவான் சிரம்
அறுத்ததுவும், பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே
(9)
சிரமும்நல்ல மதிமத்தமும் திகழ் கொன்றையும்
அரவுமல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே
(10)
செந்துவர் ஆடையினாரும், வெற்றரையே திரி
புந்தியிலார்களும் பேசும் பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும் வினையானவை சிதைந்தோடுமே
(11)
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன், மாமயில்
ஆலும்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்ல படையான் அடிதொழுதேத்திய
மாலைவல்லார் அவர்தங்கள் மேல்வினை மாயுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...