திருமணஞ்சேரி – அப்பர் தேவாரம்:

<– திருமணஞ்சேரி

(1)
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்ட நின்று நவில்பவர் நாள்தொறும்
சிட்டர்வாழ் திருவார் மணஞ்சேரிஎம்
வட்டவார் சடையார் வண்ணம் வாழ்த்துமே
(2)
துன்னு வார்குழலாள் உமையாளொடும்
பின்னு வார்சடை மேல்பிறை வைத்தவர்
மன்னுவார் மணஞ்சேரி மருந்தினை
உன்னுவார் வினையாயின ஓயுமே
(3)
புற்றில் ஆடரவாட்டும் புனிதனார்
தெற்றினார் புரம் தீயெழச் செற்றவர்
சுற்றினார் மதில்சூழ் மணஞ்சேரியார்
பற்றினாரவர் பற்றவர் காண்மினே
(4)
மத்தமும் மதியும் வளர் செஞ்சடை
முத்தர், முக்கணர், மூசரவம் அணி
சித்தர், தீவணர், சீர் மணஞ்சேரிஎம்
வித்தர், தாம் விருப்பாரை விருப்பரே
(5)
துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர் கரந்தார் சடைமேலவர்
அள்ளலார் வயல்சூழ் மணஞ்சேரிஎம்
வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வாவதே
(6)
நீர்பரந்த நிமிர்புன் சடையின் மேல்
ஊர்பரந்த உரகம் அணிபவர்
சீர்பரந்த திருமணஞ்சேரியார்
ஏர் பரந்தங்கிலங்கு சூலத்தரே
(7)
சுண்ணத்தர் சுடு நீறுகந்தாடலார்
விண்ணத்தம் மதி சூடிய வேதியர்
மண்ணத்தம் முழவார் மணஞ்சேரியார்
வண்ணத்தம் முலையாள் உமை வண்ணரே
(8)
துன்ன ஆடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடைமேல் பிறை வைத்தவர்
மன்னுவார் பொழில் சூழ் மணஞ்சேரிஎம்
மன்னனார் கழலே தொழ வாய்க்குமே
(9)
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேரமண் கையர் புகழவே
மத்தர் தாம்அறியார் மணஞ்சேரிஎம்
அத்தனார் அடியார்க்கல்லல் இல்லையே
(10)
கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்தவன் நெடுநீள்முடி பத்திறப்
படுத்தலும், மணஞ்சேரிஅருள் எனக்
கொடுத்தனன் கொற்ற வாளொடு நாமமே

திருமணஞ்சேரி – சம்பந்தர் தேவாரம்:

<– திருமணஞ்சேரி

(1)
அயிலாரும் அம்பதனால் புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழியாள் ஒருகூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றி நின்றார்க்கில்லை பாவமே
(2)
விதியானை, விண்ணவர் தாம் தொழுதேத்திய
நெதியானை, நீள்சடை மேல் நிகழ்வித்த வான்
மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல்லார் வினை பாறுமே
(3)
எய்ப்பானார்க்கு இன்புறு தேன் அளித்தூறிய
இப்பாலாய் எனையும் ஆள உரியானை
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை மேவி நின்றார் வினை வீடுமே
(4)
விடையானை, மேலுலகேழும் இப்பாரெலாம்
உடையானை, ஊழிதோறூழி உளதாய
படையானைப், பண்ணிசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடைய வல்லார்க்கில்லை அல்லலே
(5)
எறியார்பூங் கொன்றையினோடும் இளமத்தம்
வெறியாரும் செஞ்சடையார மிலைத்தானை
மறியாரும் கையுடையானை, மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல்லார்க்கிடர் சேராவே
(6)
மொழியானை முன்னொரு நான்மறை ஆறங்கம்
பழியாமைப் பண்ணிசையான பகர்வானை
வழியானை வானவரேத்து மணஞ்சேரி
இழியாமை ஏத்தவல்லார்க்கெய்தும் இன்பமே
(7)
எண்ணானை, எண்ணமர் சீர் இமையோர்கட்குக்
கண்ணானைக், கண்ணொரு மூன்றும் உடையானை
மண்ணானை, மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேச நின்றார் பெரியோர்களே
(8)
எடுத்தானை எழில்முடி எட்டும்இரண்டும் தோள்
கெடுத்தானைக், கேடிலாச் செம்மை உடையானை
மடுத்தார வண்டிசை பாடு மணஞ்சேரி
பிடித்தாரப் பேணவல்லார் பெரியோர்களே
(9)
சொல்லானைத், தோற்றம் கண்டானும் நெடுமாலும்
கல்லானைக், கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நன் மாதவரேத்து மணஞ்சேரி
எல்லாமாம் எம்பெருமான் கழலேத்துமே
(10)
சற்றேயும் தாமறிவில் சமண் சாக்கியர்
சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல் வினை பற்றாவே
(11)
கண்ணாரும் காழியர்கோன் கருத்தார்வித்த
தண்ணார்சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ணாரப் பாட வல்லார்க்கில்லை பாவமே

 

திருக்கழிப்பாலை – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருக்கழிப்பாலை

(1)
புனலாடிய புன்சடையாய், அரணம்
அனலாக விழித்தவனே, அழகார்
கனல்ஆடலினாய், கழிப்பாலை உளாய்
உனவார் கழல்கை தொழுதுள்குதுமே
(2)
துணையாகஓர் தூவள மாதினையும்
இணையாக உகந்தவனே, இறைவா
கணையால் எயிலெய் கழிப்பாலை உளாய்
இணையார் கழலேத்த இடர் கெடுமே
(3)
நெடியாய், குறியாய், நிமிர்புன் சடையின்
முடியாய், சுடுவெண் பொடி முற்றணிவாய்
கடியார் பொழில்சூழ் கழிப்பாலை உளாய்
அடியார்க்கடையா அவலம் அவையே
(4)
எளியாய் அரியாய் நிலம் நீரொடுதீ
வளிஆகாயமென வெளிமன்னிய !தூ
ஒளியாய், உனையே தொழுதுன்னும் அவர்க்கு
எளியாய், கழிப்பாலை அமர்ந்தவனே
(5)
நட நண்ணியொர் நாகம் அசைத்தவனே
விட நண்ணிய தூமிடறா, விகிர்தா
கடல் நண்ணு கழிப்பதி காவலனே
உடல் நண்ணி வணங்குவன் உன்அடியே
(6)
பிறையார் சடையாய் பெரியாய், பெரிய
மறையார்தரு வாய்மையினாய், உலகில்
கறையார் பொழில்சூழ் கழிப்பாலை உளாய்
இறையார் கழலேத்த இடர் கெடுமே
(7)
முதிரும் சடையின் முடிமேல் விளங்கும்
கதிர்வெண் பிறையாய், கழிப்பாலை உளாய்
எதிர்கொள் மொழியால் இரந்தேத்தும் அவர்க்கு
அதிரும் வினையாயின ஆசறுமே
(8)
எரியார் கணையால் எயிலெய்தவனே
விரியார் தருவீழ் சடையாய், இரவில்
கரிகாடலினாய், கழிப்பாலை உளாய்
உரிதாகி வணங்குவன் உன்அடியே
(9)
நல நாரணன் நான்முகன் நண்ணலுறக்
கனலானவனே, கழிப்பாலை உளாய்
உனவார் கழலே தொழுதுன்னும்அவர்க்கு
இலதாம் வினைதான் எயிலெய்தவனே
(10)
தவர் கொண்ட தொழில் சமண் வேடரொடும்
துவர் கொணடனர் நுண்துகில் ஆடையரும்
அவர்கொண்டன விட்டடடிகள் உறையும்
உவர் கொண்ட கழிப்பதி உள்குதுமே
(11)
கழியார் பதி காவலனைப், புகலிப்
பழியா மறைஞான சம்பந்தன சொல்
வழிபாடிவை கொண்டடி வாழ்த்த வல்லார்
கெழியார் இமையோரொடு கேடிலரே

 

திருப்பைஞ்ஞீலி – சுந்தரர் தேவாரம்:

<– திருப்பைஞ்ஞீலி

(1)
காருலாவிய நஞ்சை உண்டிருள் கண்டர், வெண்தலைஓடு கொண்டு
ஊரெலாம் திரிந்தென் செய்வீர், பலி ஓரிடத்திலே கொள்ளும் நீர்
பாரெலாம் பணிந்தும்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரமாவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே
(2)
சிலைத்து நோக்கும் வெள்ளேறு, செந்தழல்வாய பாம்பது மூசெனும்
பலிக்கு நீர்வரும் போது, நுங்கையில் பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு காரகில் சண்பகம்
அலைக்கும் பைம்புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
(3)
தூயவர் கண்ணும் வாயும் மேனியும், துன்ன ஆடை, சுடலையில்
பேயொடு ஆடலைத் தவிரும், நீரொரு பித்தரோ எம்பிரானிரே
பாயும் நீர்க்கிடங்கார் கமலமும் பைந்தண் மாதவி புன்னையும்
ஆய பைம்பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
(4)
செந்தமிழ்த் திறம் வல்லிரோ, செங்கண் அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்கும் இதென்கொலோ, பலி மாற்ற மாட்டோம் இடகிலோம்
பைந்தண் மாமலர் உந்து சோலைகள் கந்தநாறு பைஞ்ஞீலியீர்
அந்தி வானமும் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே
(5)
நீறு நும் திருமேனி நித்திலம் நீல்நெடுங் கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்திடகிலோம், பலி நடமினோ
பாறு வெண்தலை கையிலேந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள்நீர்
ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே
(6)
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழிலாகிநீர்
இரவும் இம்மனை அறிதிரே, இங்கே நடந்து போகவும் வல்லிரே
பரவி நாள்தொறும் பாடுவார் வினை பற்றறுக்கும் பைஞ்ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
(7)
ஏடுலா மலர்க் கொன்றை சூடுதிர், என்பெலாம் அணிந்தென் செய்வீர்
காடு நும்பதி, ஓடு கையது, காதல் செய்பவர் பெறுவதென்
பாடல் வண்டிசை ஆலும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
(8)
மத்த மாமலர்க் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்
மொய்த்த வெண்தலை கொக்கிறகொடு வெள்ளெருக்கமும் சடையதாம்
பத்தர் சித்தர்கள் பாடியாடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அத்தி ஈருரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே
(9)
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்கரை குட முழவினோடு இசைகூடிப் பாடி நின்றாடுவீர்
பக்கமே குயில்பாடும் சோலைப் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே
(10)
கையொர் பாம்பு, அரை ஆர்த்தொர் பாம்பு, கழுத்தொர் பாம்பவை பின்புதாழ்
மெய்யெலாம் பொடிக் கொண்டு பூசுதிர், வேதம் ஓதுதிர் கீதமும்
பையவே விடங்காக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள்நீர்
ஐயம் ஏற்கும் இதென்கொலோ சொலும் ஆரணீய விடங்கரே
(11)
அன்னஞ்சேர் வயல்சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர் வேண்டிக் காதல் மொழிந்தசொல்
மன்னு தொல்புகழ் நாவலூரன் வன்தொண்டன் வாய்மொழி பாடல்பத்து
உன்னி இன்னிசை பாடுவார் உமைகேள்வன் சேவடி சேர்வரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page