ஓமாம்புலியூர் – சம்பந்தர் தேவாரம்:

<– ஓமாம்புலியூர்

(1)
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம், புரிதரு சடைமுடி அடிகள்
வீங்கிருள் நட்டமாடும்எம் விகிர்தர், விருப்பொடும் உறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(2)
சம்பரற்கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெருமானார், இமையவரேத்த இனிதின் அங்குறைவிடம் வினவில்
அம்பரமாகி அழலுமிழ் புகையின் ஆகுதியால் மழைபொழியும்
உம்பர்களேத்தும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(3)
பாங்குடைத் தவத்துப் பகீரதற்கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்துத் தராதலத்திழித்த தத்துவன் உறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துடனிருந்த அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(4)
புற்றரவு அணிந்து, நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர, ஊரூர்
பெற்றம்ஒன்றேறிப் பெய்பலி கொள்ளும் பிரான்அவன் உறைவிடம் வினவில்
கற்ற நால்வேதம் அங்கமோர் ஆறும் கருத்தினார், அருத்தியால் தெரியும்
உற்றபல் புகழார், ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(5)
நிலத்தவர், வானம் ஆள்பவர், கீழோர் துயர்கெட நெடியமாற்கருளால்
அலைத்த வல்லசுரர் ஆசற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில்
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க
உலப்பில்பல் புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(6)
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் மலியுமாறு, அங்கம் ஐவேள்வி
இணைந்த நால்வேத மூன்றெரி இரண்டு பிறப்பென ஒருமையால் உணரும்
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம்அற்றவை உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(7)
(8)
தலையொரு பத்தும் தடக்கையது இரட்டி தானுடை அரக்கன் ஒண்கயிலை
அலைவது செய்த அவன்திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்
மலையென ஓங்கு மாளிகை நிலவு மாமதில் மாற்றலர் என்றும்
உலவுபல் புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(9)
கள்ளவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன் என்றிவர் காண்பரிதாய
ஒள்ளெரி உருவர், உமையவளோடும் உகந்தினிது உறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலை சூழாலை
ஒள்ளிய புகழார் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(10)
தெள்ளியர் அல்லாத் தேரரோடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து, நலந்திகழ் மூன்றெரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
(11)
விளைதரு வயலுள் வெயில்செறி, பவள மேதிகண் மேய்புலத்திடறி
ஒளிதர மல்கும் ஓமாம்புலியூர் உடையவர் வடதளி அரனைக்
களிதரு நிவப்பில் காண்தகு செல்வக் காழியுண் ஞானசம்பந்தன்
அளிதரு பாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத்திருப்பாரே

 

திருமாந்துறை:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
செம்பொனார் தரு வேங்கையும், ஞாழலும், செருந்தி, செண்பகம், ஆனைக்
கொம்பும், ஆரமும், மாதவி சுரபுனை குருந்தலர் பரந்துந்தி
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைகின்ற
எம்பிரான், இமையோர்தொழு பைங்கழல் ஏத்துதல் செய்வோமே
(2)
விளவு தேனொடு சாதியின் பலங்களும், வேய்மணி நிரந்துந்தி
அளவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைத்
துளவ மால்மகன் ஐங்கணைக் காமனைச் சுடவிழித்தவன், நெற்றி
அளக வாள்நுதல் அரிவைதன் பங்கனைஅன்றி மற்றறியோமே
(3)
கோடு தேன்சொரி குன்றிடைப் பூகமும், கூந்தலின் குலைவாரி
ஓடு நீர்வரு காவிரி வடகரை மாந்துறைஉறை நம்பன்
வாடினார் தலையில் பலிகொள்பவன், வானவர் மகிழ்ந்தேத்தும்
கேடிலா மணியைத் தொழல்அல்லது கெழுமுதல் அறியோமே
(4)
இலவ ஞாழலும் ஈஞ்சொடு சுரபுன்னை இளமருது இலவங்கம்
கலவி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைகண்டன்
அலைகொள் வார்புனல் அம்புலி மத்தமும் ஆடரவுடன் வைத்த
மலையை, வானவர் கொழுந்தினை அல்லது வணங்குதல் அறியோமே
(5)
கோங்கு செண்பகம் குருந்தொடு பாதிரி குரவிடை மலர்உந்தி
ஓங்கி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானைப்
பாங்கினால் இடும் தூபமும் தீபமும் பாட்டவி மலர்சேர்த்தித்
தாங்குவார்அவர் நாமங்கள் நாவினில் தலைப்படும் தவத்தோரே
(6)
பெருகு சந்தனம் காரகில் பீலியும், பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப் புனிதனெம் பெருமானைப்
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி வணங்குதல் செய்வோமே
(7)
நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாண்மலர் அவைவாரி
இறவில் வந்தெறி காவிரி வடகரை மாந்துறைஇறை, அன்றங்கு
அறவனாகிய கூற்றினைச் சாடிய அந்தணன், வரைவில்லால்
நிறைய வாங்கி வலித்து எயிலெய்தவன் நிரைகழல் பணிவோமே
(8)
மந்தமார் பொழில் மாங்கனி மாந்திட மந்திகள், மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை உறைவானை
நிந்தியா எடுத்தார்த்த வல்லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தியா மனத்தார்அவர் சேர்வது தீநெறி அதுதானே
(9)
நீலமாமணி நித்திலத் தொத்தொடு நிரைமலர் நிரந்துந்தி
ஆலியா வரு காவிரி வடகரை மாந்துறை அமர்வானை
மாலும் நான்முகன் தேடியும் காண்கிலா மலரடியிணை நாளும்
கோலமேத்தி நின்றாடுமின் பாடுமின் கூற்றுவன் நலியானே
(10)
நின்றுணும் சமண் தேரரும் நிலையிலர், நெடுங்கழை நறவேலம்
நன்று மாங்கனி கதலியின் பலங்களும் நாணலின் நுரைவாரி
ஒன்றி நேர்வரு காவிரி வடகரை மாந்துறை, ஒருகாலம்
அன்றி உள்ளழிந்தெழும் பரிசழகிது அதுஅவர்க்கிடமாமே
(11)
வரை வளங்கவர் காவிரி வடகரை மாந்துறை உறைவானைச்
சிரபுரம் பதியுடையவன் கவுணியன், செழுமறை நிறைநாவன்
அரவெனும் பணி வல்லவன் ஞானசம்பந்தன் அன்புறுமாலை
பரவிடும் தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே

 

திருவெண்காடு – சுந்தரர் தேவாரம்:

<– திருவெண்காடு

(1)
படங்கொள் நாகம் சென்னி சேர்த்திப்
    பாய்புலித்தோல் அரையில் வீக்கி
அடங்கலார் ஊர்எரியச் சீறி
    அன்று மூவர்க்கருள் புரிந்தீர்
மடங்கலானைச் செற்றுகந்தீர்
    மனைகள் தோறும் தலைகை ஏந்தி
விடங்கராகித் திரிவதென்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(2)
இழித்துகந்தீர் முன்னை வேடம்
    இமையவர்க்கும் உரைகள் பேணாது
ஒழித்துகந்தீர், நீர்முன் கொண்ட
    உயர் தவத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காமவேளை
    அவனுடைய தாதை காண
விழித்துகந்த வெற்றி என்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(3)
படைகளேந்திப் பாரிடம்மும்
    பாதம் போற்ற மாதும் நீரும்
உடையோர் கோவணத்தராகி
    உண்மை சொல்லீர் உம்மையன்றே
சடைகள் தாழக் கரணமிட்டுத்
    தன்மை பேசி இல்பலிக்கு
விடையதேறித் திரிவதென்னே
    வேலை சூழ்வெண்காடனீரே
(4)
பண்ணுளீராய்ப் பாட்டுமானீர்
    பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்
கண்ணுளீராய்க் கருத்தில் உம்மைக்
    கருதுவார்கள் காணும் வண்ணம்
மண்ணுளீராய் மதியம் வைத்தீர்
    வான நாடர் மருவி ஏத்த
விண்ணுளீராய் நிற்பதென்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(5)
குடமெடுத்து நீரும் பூவும்
    கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடமெடுத்தொன்றாடிப் பாடி
    நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்
வடமெடுத்த கொங்கை மாதோர்
    பாகமாக, வார்கடல் வாய்
விடம் மிடற்றில் வைத்ததென்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(6)
மாறுபட்ட வனத்தகத்தின்
    மருவ வந்த வன்களிற்றைப்
பீறி இட்டமாகப் போர்த்தீர்
    பெய் பலிக்கென்றில்லம் தோறும்
கூறு பட்ட கொடியும் நீரும்
    குலாவி ஏற்றை அடர ஏறி
வேறுபட்டுத் திரிவதென்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(7)
காதலாலே கருதும் தொண்டர்
    காரணத்தராகி நின்றே
பூதம் பாடப் புரிந்து நட்டம்
    புவனியேத்த ஆட வல்லீர்
நீதியாக ஏழிலோசை
    நித்தராகிச் சித்தர் சூழ
வேதமோதித் திரிவதென்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(8)
குரவு கொன்றை மதியம் மத்தம்
    கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவுகின்ற சடையுடையீர்
    விருத்தரானீர், கருத்தில் உம்மைப்
பரவும் என்மேல் பழிகள் போக்கீர்
    பாகமாய மங்கை அஞ்சி
வெருவ வேழம் செற்றதென்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(9)
மாடம் காட்டும் கச்சியுள்ளீர்
    நிச்சயத்தால் நினைப்புளார் பால்
பாடும் காட்டில் ஆடலுள்ளீர்
    பரவும் வண்ணம் எங்ஙனே தான்
நாடும் காட்டில் அயனும் மாலும்
    நணுகா வண்ணம் அனலுமாய
வேடம் காட்டித் திரிவதென்னே
    வேலை சூழ் வெண்காடனீரே
(10)
விரித்த வேதம் ஓத வல்லார்
    வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தனாய வேதன் தன்னை
    விரிபொழில் திருநாவலூரன்
அருத்தியால் ஆரூரன் தொண்டன்
    அடியன் கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார்
    செம்மையாளர் வானுளாரே

 

திருப்புறம்பயம் – சுந்தரர் தேவாரம்:

(1)
அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி நின்றும் போந்து வந்து, இன்னம்பர்த்
தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனார், எழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர் தாந்தொழும்
பொங்கு மால்விடை ஏறி செல்வப் புறம்பயம் தொழப் போதுமே
(2)
பதியும், சுற்றமும், பெற்ற மக்களும் பண்டையாரலர், பெண்டிரும்
நிதியில் இம்மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பொழி மட நெஞ்சமே
மதியஞ்சேர் சடைக் கங்கையான் இடம் மகிழும், மல்லிகை செண்பகம்
புதிய பூமலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழப் போதுமே
(3)
புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்து நீஉரையால் தளர்ந்து
அறம்புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண், இஃது அறிதியேல்
திறம்பியாதெழு நெஞ்சமே, சிறுகாலை நாமுறு வாணியம்
புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயம் தொழப் போதுமே
(4)
குற்றொருவரைக் கூறை கொண்டு, கொலைகள் சூழ்ந்த களவெலாம்
செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே
மற்றொருவரைப் பற்றிலேன் மறவாதெழு மட நெஞ்சமே
புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயம் தொழப் போதுமே
(5)
கள்ளி நீசெய்த தீமையுள்ளன பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு நெஞ்சமே, செங்கண் சேவுடைச் சிவலோகன்ஊர்
துள்ளி வெள்ளிள வாளைபாய் வயல் தோன்று தாமரைப் பூக்கள்மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளி கொள்ளும் புறம்பயம் தொழப் போதுமே
(6)
படையெலாம் பகடார ஆளிலும், பௌவம் சூழ்ந்து அரசாளிலும்
கடையெலாம் பிணைத் தேரைவால், கவலாதெழு மடநெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து மருங்கெலாம் கரும்பாடத் தேன்
புடையெலா மணம்நாறு சோலைப் புறம்பயம் தொழப் போதுமே
(7)
முன்னைச் செய்வினை இம்மையில்வந்து மூடுமாதலின் முன்னமே
என்னை நீ தியக்காதெழு மட நெஞ்சமே, எந்தை தந்தையூர்
அன்னச் சேவலோடு ஊடிப் பேடைகள் கூடிச் சேரும் அணிபொழில்
புன்னைக் கன்னி களக்கரும்பு புறம்பயம் தொழப் போதுமே
(8)
மலமெலாம் அறும், இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா
சலமெலாம் ஒழி நெஞ்சமே, எங்கள் சங்கரன் வந்து தங்கும்ஊர்
கலமெலாம் கடல் மண்டு காவிரி நங்கையாடிய கங்கைநீர்
புலமெலா மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயம் தொழப் போதுமே
(9)
பண்டரீயன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டரீயன கேட்டியேல் கவலாதெழு மட நெஞ்சமே
தொண்டரீயன பாடித் துள்ளி நின்றாடி வானவர் தாந்தொழும்
புண்டரீக மலரும் பொய்கைப் புறம்பயம் தொழப் போதுமே
(10)
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கறாத மயக்கிவை
அஞ்சி ஊரன் திருப்புறம்பயத்தப்பனைத் தமிழ்ச் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயம் தொழுதுய்தும் என்று நினைத்தன
வஞ்சியாதுரை செய்ய வல்லவர் வல்ல வானுலகாள்வரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page