திருப்பழனம் – அப்பர் தேவாரம் (5):

<– திருப்பழனம்

(1)
மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன அல்லலவைஅறுப்பான்
பாவித்த பாவனை நீஅறிவாய் பழனத்தரசே
கூவித்துக் கொள்ளும்தனை அடியேனைக் குறிக்கொள்வதே
(2)
சுற்றி நின்றார் புறங்காவல் அமரர் கடைத்தலையில்
மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றி நின்றார் பழனத்தரசே உன் பணியறிவான்
உற்று நின்றார், அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே
(3)
ஆடிநின்றாய் அண்டம்ஏழும் கடந்துபோய் மேலவையும்
கூடி நின்றாய், குவிமென் முலையாளையும் கொண்டுடனே
பாடி நின்றாய், பழனத்தரசே, அங்கொர் பால்மதியம்
சூடிநின்றாய், அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே
(4)
எரித்துவிட்டாய் அம்பினால் புரமூன்று முன்னே படவும்
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கெய்தஓர் குஞ்சரத்தைப்
பரித்துவிட்டாய் பழனத்தரசே கங்கை வார்சடை மேல்
தரித்துவிட்டாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(5)
முன்னியும் உன்னி முளைத்தன மூவெயிலும் உடனே
மன்னியும் அங்கும் இருந்தனை, மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறிவாய் பழனத்தரசே
முன்னியும் உன்னடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(6)
ஏய்ந்தறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையைக்
காய்ந்தறுத்தாய் கண்ணினால் அன்று காமனைக், காலனையும்
பாய்ந்தறுத்தாய், பழனத்தரசே என் பழவினை நோய்
ஆய்ந்தறுத்தாய், அடியேனைக் குறிக்கொண்டுருளுவதே
(7)
மற்று வைத்தாய் அங்கொர் மாலொரு பாகம் மகிழ்ந்துடனே
உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசெனவே
பற்றிவைத்தாய் பழனத்தரசே அங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத்தாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(8)
ஊரின் நின்றாய், ஒன்றி நின்று விண்டாரையும் ஒள்ளழலால்
போரில் நின்றாய், பொறையாய் உயிராவி சுமந்துகொண்டு
பாரில் நின்றாய் பழனத்தரசே, பணி செய்பவர்கட்கு
ஆரநின்றாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(9)
போகம் வைத்தாய் புரி புன்சடை மேலொர் புனலதனை
யாகம் வைத்தாய் மலையான் மடமங்கை மகிழ்ந்துடனே
பாகம் வைத்தாய், பழனத்தரசே உன் பணியருளால்
ஆகம் வைத்தாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே
(10)
அடுத்திருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந்தாய், கிளர்ந்தார் வலியைக் கிளையோடுடனே
படுத்திருந்தாய், பழனத்தரசே புலியின் உரிதோல்
உடுத்திருந்தாய், அடியேனைக் குறிக்கொண்டருளுவதே

 

திருநாரையூர்:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
1. உரையினில் வந்த பாவம்
2. காம்பினை வென்ற
3. கடலிடை வெங்கடு
அப்பர்  தேவாரம்:
1. வீறு தானுடை
2. சொல்லானைப் பொருளானை

 

திருநின்றியூர் – சுந்தரர் தேவாரம் (1):

<– திருநின்றியூர்

(1)
திருவும் வண்மையும் திண்திறல் அரசும்
    சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்கணான் தனக்களித்த
    வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னி வந்துந்து பன்மணியைப்
    பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றித்
    திரட்டும் தென்திரு நின்றியூரானே
(2)
அணிகொள் ஆடையம், பூணணி மாலை
    அமுது செய்து அமுதம்பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல்
    ஈன்றவன் திருநாவினுக்கு அரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற
    காதல் இன்னருள் ஆதரித்தடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும்
    செல்வத் தென்திரு நின்றியூரானே
.
(3)
மொய்த்த சீர் முந்நூற்றறுபது வேலி
    மூன்று நூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
    ஓங்கு நின்றியூர் என்றுனக்கு அளிப்பப்
பத்தி செய் தவப் பரசுராமற்குப்
    பாதம் காட்டிய நீதிகண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும்
    செல்வத் தென்திரு நின்றியூ ரானே
(4)
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம்
    எழுந்து தன்முலைக் கலசங்களேந்திச்
சுரபி பால் சொரிந்தாட்டி நின் பாதம்
    தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்
பரவி உள்கி வன்பாசத்தை அறுத்துப்
    பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன்
    அளிக்கும் தென்திரு நின்றியூரானே
(5)
வந்தொர் இந்திரன் வழிபட மகிழ்ந்து
    வான நாடுநீ ஆள்கென அருளிச்
சந்தி மூன்றிலும் தாபர நிறுத்திச்
    சகளி செய்திறைஞ்சு அகத்தியன் தனக்குச்
சிந்து மாமணியணி திருப்பொதியில்
    சேர்வு நல்கிய செல்வம்கண்டு அடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவும்
    செல்வத் தென்திரு நின்றியூரானே
(6)
காது பொத்தரைக் கின்னரர், உழுவை
    கடிக்கும் பன்னகம், பிடிப்பரும் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
    கோல ஆல்நிழல் கீழ்அறம் பகர
வேதம் செய்தவர் எய்திய இன்பம்
    யானும் கேட்டுநின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறைபுகழ் உலகில்
    நிலவு தென்திரு நின்றியூரானே
(7)
கோடு நான்குடைக் குஞ்சரம் குலுங்க
    நலங்கொள் பாதம் நின்றேத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
    பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும்
    பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறு
    நிலவு தென்திரு நின்றியூரானே

 

திருநின்றியூர் – சுந்தரர் தேவாரம் (2):

<– திருநின்றியூர்

(1)
அற்றவனார் அடியார் தமக்கு, ஆயிழை பங்கினராம்
பற்றவனார், எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார், குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(2)
வாசத்தினார், மலர்க் கொன்றை உள்ளார், வடிவார்ந்த நீறு
பூசத்தினார், புகலிந்நகர் போற்றும் எம் புண்ணியத்தார்
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார், நெடுமாகடல் சூழ்
தேசத்தினார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(3)
அங்கையில் மூவிலை வேலர், அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சமுண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த இடம், வளம் மல்குபுனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திருநின்றியூரே
(4)
ஆறுகந்தார், அங்கம் நான்மறையார், எங்குமாகி அடல்
ஏறுகந்தார், இசை ஏழுகந்தார், முடிக்கங்கை தன்னை
வேறுகந்தார், விரி நூலுகந்தார், பரி சாந்தமதா
நீறுகந்தார் உறையும் இடமாம் திருநின்றியூரே
(5)
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார், நறுநெய் தயிர்பால்
அஞ்சும் கொண்டாடிய வேட்கையினார், அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார், தமக்கென்றும் இருக்கை சரணடைந்தார்
நெஞ்சம் கொண்டார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(6)
ஆர்த்தவர் ஆடரவம், அரைமேல் புலி ஈருரிவை
போர்த்தவர், ஆனையின் தோலுடல் வெம்புலால் கையகலப்
பார்த்தவர், இன்னுயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சிலொன்றைச்
சேர்த்தவருக்குறையும் இடமாம் திருநின்றியூரே
(7)
தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்
மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார், கற்றுதைந்த நன்னீர்
அலையுடையார், சடை எட்டும் சுழல அருநடஞ்செய்
நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே
(8)
எட்டுகந்தார் திசை, ஏழுகந்தார் எழுத்தாறும், அன்பர்
இட்டுகந்தார் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர், முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து, பலிஇரந்தூண்
சிட்டுகந்தார்க்கிடமாவது நம்திரு நின்றியூரே
(9)
காலமும் ஞாயிறுமாகி நின்றார், கழல் பேணவல்லார்
சீலமும் செய்கையும் கண்டுகப்பார், அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீல நஞ்சுண்டவருக்கிடமாம் திருநின்றியூரே
(10)
வாயார் மனத்தால் நினைக்கும் அவருக்கு அருந்தவத்தில்
தூயார், சுடுபொடி ஆடிய மேனியர், வானில் என்றும்
மேயார், விடையுகந்தேறிய வித்தகர், பேர்ந்தவர்க்குச்
சேயார், அடியார்க்கணியவர் ஊர் திருநின்றியூரே
(11)
சேரும் புகழ்த்தொண்டர் செய்கையறாத் திருநின்றியூரில்
சீரும் சிவகதியாய் இருந்தானைத், திருநாவல்
ஆரூரன் உரைத்த உறுதமிழ் பத்தும் வல்லார் வினைபோய்ப்
பாரும் விசும்பும் தொழப் பரமன்அடி கூடுவரே

 

திருப்பழுவூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 
(1)
முத்தன், மிகு மூவிலை நல்வேலன், விரிநூலன்
அத்தன், எமை ஆளுடைய அண்ணல்இடம் என்பர்
மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்
பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே
(2)
கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்த பெருமானது இடமென்பர்
மாடமலி சூளிகையிலேறி மடவார்கள்
பாடலொலி செய்ய மலிகின்ற பழுவூரே
(3)
வாலிய புரத்தில்அவர் வேவ விழிசெய்த
போலிய ஒருத்தர் புரிநூலர் இடமென்பர்
வேலியின் விரைக்கமலம் அன்னமுக மாதர்
பாலென மிழற்றி நடமாடு பழுவூரே
(4)
எண்ணுமொர் எழுத்தும் இசையின் கிளவி தேர்வார்
கண்ணும் முதலாய கடவுட்கு இடமதென்பர்
மண்ணின் மிசையாடி மலையாளர் தொழுதேத்திப்
பண்ணினொலி கொண்டு பயில்கின்ற பழுவூரே
(5)
சாதல் புரிவார் சுடலை தன்னில் நடமாடும்
நாதன், நமை ஆளுடைய நம்பன் இடமென்பர்
வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன் தன்
பாதமவை ஓத நிகழ்கின்ற பழுவூரே
(6)
மேவயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாஅயர அன்றுரிசெய் மைந்தன்இடம் என்பர்
பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே
(7)
மந்தணம் இருந்துபுரி மாமடி தன் வேள்வி
சிந்த விளையாடு சிவலோகன் இடமென்பர்
அந்தணர்கள் ஆகுதியில் இட்டஅகில் மட்டார்
பைந்தொடி நன்மாதர் சுவடொற்று பழுவூரே
(8)
உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்று
அரக்கனை அடர்த்தருளும் அப்பன்இடம் என்பர்
குரக்கினம் விரைப்பொழிலின் மீது கனியுண்டு
பரக்குறு புனல்செய் விளையாடு பழுவூரே
(9)
நின்ற நெடுமாலும், ஒரு நான்முகனும் நேட
அன்று தழலாய் நிமிரும் ஆதி இடம் என்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு நாலும்உணர்வார்கள்
மன்றினில் இருந்துடன் மகிழ்ந்த பழுவூரே
(10)
மொட்டை அமணாதர், துகில் மூடுவிரி தேரர்
முட்டை கண்மொழிந்த முனிவான் தனிடம் இன்பர்
மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம்
பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே
(11)
அந்தணர்களான மலையாளர்அவர் ஏத்தும்
பந்த மலிகின்ற பழுவூர்அரனை ஆரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்தவணம் ஏத்துமவர் வானம் உடையாரே

 

திருக்கலிக்காமூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மடல் வரையின் மதுவிம்மு சோலை வயல் சூழ்ந்தழகாரும்
கடல்வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர்
உடல் வரையின் உயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த
இடர் தொடரா, வினையான சிந்தும், இறைவன் அருளாமே
(2)
மைவரை போல் திரையோடு கூடிப் புடையே மலிந்தோதம்
கைவரையால் வளர் சங்கமெங்கும் மிகுக்கும் கலிக்காமூர்
மெய்வரையான் மகள் பாகன் தன்னை விரும்ப, உடல்வாழும்
ஐவரை ஆசறுத்தாளும் என்பர் அதுவும் சரதமே
(3)
தூவிய நீர்மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுதேத்தக்
காவியின் நேர்விழி மாதர் என்றும்  கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே
(4)
குன்றுகள் போல்திரை உந்தி அந்தண் மணியார்தர, மேதி
கன்றுடன் புல்கி ஆயம் மனைசூழ் கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடியேத்தி
நின்றுணர்வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே
(5)
வானிடை வாண்மதி மாடந்தீண்ட, மருங்கே கடலோதம்
கானிடை நீழலில் கண்டல் வாழும் கழிசூழ் கலிக்காமூர்
ஆனிடை ஐந்துகந்தாடினானை அமரர் தொழுதேத்த
நானடைவாம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே
(6)
துறைவளர் கேதகைமீது வாசம்சூழ் வான்மலி தென்றல்
கறை வளரும் கடலோதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர்
மறை வளரும் பொருளாயினானை மனத்தால் நினைந்தேத்த
நிறை வளரும், புகழ் எய்தும், வாதை நினையா, வினைபோமே
(7)
கோலநன் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில்
காலமும் பொய்க்கினும் தாம்வழுவாது இயற்றும் கலிக்காமூர்
ஞாலமும் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி
ஓலமிடாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே
(8)
ஊரரவம் தலை நீள்முடியான், ஒலிநீர் உலகாண்டு
காரரவக் கடல்சூழ வாழும் பதியாம் கலிக்காமூர்
தேரர அல்குலம் பேதை அஞ்சத் திருந்து வரை பேர்த்தான்
ஆரரவம் பட வைத்த பாதம் உடையான் இடமாமே
(9)
அருவரை ஏந்திய மாலும், மற்றை அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரையான் மகள் பாகன் தன்னை உணர்வால் தொழுதேத்தத்
திருமருவும், சிதைவில்லைச், செம்மைத் தேசுண்டு அவர்பாலே
(10)
மாசு பிறக்கிய மேனியாரும், மருவும் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர்
ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினைபோமே
(11)
ஆழியுள் நஞ்சமுதார உண்டு அன்றமரர்க்கமுதுண்ண
ஊழிதொறும் உளரா அளித்தான், உலகத்துயர்கின்ற
காழியுண் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர்
வாழி எம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே

 

ஓமாம்புலியூர் – அப்பர் தேவாரம்:

<– ஓமாம்புலியூர்

(1)
ஆராரும் மூவிலைவேல் அங்கையானை
    அலைகடல் நஞ்சயின்றானை, அமரர் ஏத்தும்
ஏராரும் மதிபொதியும் சடையினானை
    எழுபிறப்பும் எனைஆளா உடையான் தன்னை
ஊராரும் படநாகம் ஆட்டுவானை
    உயர்புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீராரும் வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(2)
ஆதியான் அரிஅயன் என்றறியஒண்ணா
    அமரர்தொழும் கழலானை, அமலன் தன்னைச்
சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன்
    சுடர்இரவி அயிலெயிறு தொலைவித்தானை
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன்றோம்பும்
    உயர்புகழார் தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீதில்திரு வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(3)
வருமிக்க மதயானை உரித்தான் தன்னை
    வானவர்கோன் தோளனைத்தும் மடிவித்தானைத்
தருமிக்க குழலுமையாள் பாகன் தன்னைச்
    சங்கரன்எம் பெருமானைத், தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
    உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
திருமிக்க வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(4)
அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
    அழல்விழித்த கண்ணானை, அமரர் கோனை
வென்றிமிகு காலனுயிர் பொன்றி வீழ
    விளங்கு திருவடி எடுத்த விகிர்தன் தன்னை
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீயோம்பும்
    உயர்புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும்
தென்றல்மலி வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(5)
பாங்குடைய எழிலங்கி அருச்சனைமுன் விரும்பப்
    பரிந்தவனுக்கருள் செய்த பரமன் தன்னைப்
பாங்கிலா நரகதனைத் தொண்டரானார்
    பாராத வகை பண்ண வல்லான் தன்னை
ஓங்குமதில் புடைதழுவும் எழில் ஓமாம்புலியூர்
    உயர்புகழ் அந்தணரேத்த, உலகர்க்கென்றும்
தீங்கில்திரு வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(6)
அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை
    ஆராத இன்னமுதை, அடியார் தம்மேல்
வருந்துயரம் தவிர்ப்பானை, உமையாள் நங்கை
    மணவாள நம்பியை, என்மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்
    பொழில்கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும்
திருந்துதிரு வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(7)
மலையானை, வருமலை ஒன்றுரி செய்தானை
    மறையானை, மறையாலும் அறியவொண்ணாக்
கலையானைக், கலையாரும் கையினானைக்
    கடிவானை அடியார்கள் துயரமெல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்
    புலியூர்எம் உத்தமனைப், புரம் மூன்றெய்த
சிலையானை, வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(8)
சேர்ந்தோடு மணிக்கங்கை சூடினானைச்
    செழுமதியும் படஅரவும் உடன் வைத்தானைச்
சார்ந்தோர்கட்கு இனியானைத், தன்னொப்பில்லாத்
    தழலுருவைத், தலைமகனைத், தகை நால்வேதம்
ஓர்ந்தோதிப் பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர்
    உள்ளானைக், கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை, வடதளிஎம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே
(9)
(10)
வார்கெழுவு முலைஉமையாள் வெருவ அன்று
    மலையெடுத்த வாளரக்கன் தோளும் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து மீண்டே
    இன்னிசை கேட்டிருந்தானை, இமையோர் கோனைப்
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
    பைம்பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர்கெழுவு வடதளியெம் செல்வன் தன்னைச்
    சேராதே திகைத்துநாள் செலுத்தினேனே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page