திருக்கருப்பறியலூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கருப்பறியலூர்

(1)
சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடும் அடியார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன் இருப்பது கருப்பறியலூரே
(2)
வண்டணை செய் கொன்றையது வார்சடைகண் மேலே
கொண்டணை செய் கோலமது கோள்அரவினோடும்
விண்டணை செய் மும்மதிலும் வீழ்தர ஓர்அம்பால்
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே
(3)
வேதமொடு வேதியர்கள் வேள்வி முதலாகப்
போதினொடு போதுமலர் கொண்டு புனைகின்ற
நாதன்என நள்ளிருள் முனாடு, குழை தாழும்
காதவன் இருப்பது கருப்பறியலூரே
(4)
மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலஒரு காலால்
கடந்தவன் இருப்பது கருப்பறியலூரே
(5)
ஒருத்தி உ மையோடும் ஒரு பாகமதுவாய
நிருத்தனவன் நீதியவன், நித்த நெறியாய
விருத்தனவன், வேதமென அங்கம் அவையோதும்
கருத்தவன் இருப்பது கருப்பறியலூரே
(6)
விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியினாளை அணைவிப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவ எரிகாலும்
கண்ணவன் இருப்பது கருப்பறியலூரே
(7)
ஆதிஅடியைப் பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்
காதினன் இருப்பது கருப்பறியலூரே
(8)
வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்தமர் செயும்தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவன் இருப்பது கருப்பறியலூரே
(9)
பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர் சடைமேல் மிசை உகந்தவளை வைத்து
நிரந்தர நிரந்திருவர் நேடி அறியாமல்
கரந்தவன் இருப்பது கருப்பறியலூரே
(10)
அற்ற மறையா அமணர், ஆதமிலி புத்தர்
சொற்றம் அறியாதவர்கள் சொன்ன சொலை விட்டுக்
குற்றமறியாத பெருமான் கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறியலூரே
(11)
நலந்தரு புனற்புகலி ஞானசம்பந்தன்
கலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்ளைப்
பலந்தரு தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று
வலந்தரும் அவர்க்குவினை வாடல் எளிதாமே

 

திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும் – சம்பந்தர் தேவாரம்:

<– திருவேள்விக்குடி

<– திருத்துருத்தி

(1)
ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல் கங்கையை ஒருசடைமேல்
தாங்கினார், இடுபலி தலைகலனாக் கொண்ட தம்அடிகள்
பாங்கினால் உமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(2)
தூறுசேர் சுடலையில் சுடரெரி ஆடுவர், துளங்கொளி சேர்
நீறு சாந்தென உகந்தணிவர், வெண்பிறை புல்கு சடைமுடியார்
நாறு சாந்திளமுலை அரிவையோடொரு பகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(3)
மழைவளர் இளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டஎம் கண்ணுதல் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்குல் அரிவையோடொரு பகல் அமர்ந்த பிரான்
விழைவளர் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(4)
கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க் கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை அரிவையொடொரு பகல் அமர்ந்த பிரான்
விரும்பிடம் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(5)
வளங்கிளர் மதியமும், பொன்மலர்க் கொன்றையும், வாளரவும்
களங்கொளச் சடையிடை வைத்தஎம் கண்ணுதல் கபாலியார்தாம்
துளங்குநூல் மார்பினர், அரிவையொடொரு பகல் அமர்ந்த பிரான்
விளங்குநீர்த் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(6)
பொறியுலாம் அடுபுலி உரிவையர், வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளும் நீர்மையர், சீர்மையை நினைப்பரியார்
மறியுலாம் கையினர், மங்கையொடொரு பகல் அமர்ந்த பிரான்
வெறியுலாம் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(7)
புரிதரு சடையினர், புலியுரி அரையினர், பொடியணிந்து
திரிதரும் இயல்பினர், திரிபுர மூன்றையும் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொடொரு பகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(8)
நீண்டிலங்கவிரொளி நெடுமுடி அரக்கன் இந்நீள்வரையைக்
கீண்டிடந்திடுவன் என்றெழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்டநூல் மார்பினர், அரிவையொடொரு பகல் அமர்ந்த பிரான்
வேண்டிடம் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(9)
கரைகடல் அரவணைக் கடவுளும், தாமரை நான்முகனும்
குரைகழல் அடிதொழக் கூரெரி என நிறங்கொண்ட பிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(10)
அயமுக வெயில்நிலை அமணரும், குண்டரும், சாக்கியரும்
நயமுக உரையினர் நகுவன சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங்கண்ணியொடு ஒருபகல் அமர்ந்த பிரான்
வியன்நகர்த் துருத்தியார், இரவிடத்துறைவர் வேள்விக்குடியே
(11)
விண்ணுலாம் விரிபொழில் விரைமணல் துருத்தி வேள்விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார், அரிவையொடுறை பதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன
பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார் பழியிலரே

 

திருக்கழிப்பாலை – அப்பர் தேவாரம் (2):

<– திருக்கழிப்பாலை

(1)
நங்கையைப் பாகம் வைத்தார், ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார், ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையில் யாழும் வைத்தார், தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(2)
விண்ணினை விரும்ப வைத்தார், வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார், பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(3)
வாமனை வணங்க வைத்தார், வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார், சோதியுள் சோதி வைத்தார்
ஆமனெய் ஆட வைத்தார், அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(4)
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேரழல் உண்ண வைத்தார்
பரியதீ வண்ணராகிப் பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(5)
கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு பிறைபுனல் சடையில் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார், அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(6)
உட்டங்கு சிந்தை வைத்தார், உள்குவார்க்குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார், வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார், ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(7)
ஊனப்பேர் ஒழிய வைத்தார், ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார், ஞானமும் நடுவும் வைத்தார்
வானப் பேராறு வைத்தார், வைகுந்தற்காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(8)
கொங்கினும் அரும்பு வைத்தார், கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார், சாம்பரும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார், ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(9)
சதுர்முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு
எதிர்முகம் இன்றி நின்ற எரியுரு அதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிரவைத்தார்
கதிர்முகம் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே
(10)
மாலினாள் நங்கையஞ்ச மதிஇலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்
நூலினால் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

 

திருக்கழிப்பாலை – அப்பர் தேவாரம் (3):

<– திருக்கழிப்பாலை

(1)
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்
கண்ணுலாம் பொழில்சூழ் கழிப்பாலைஎம்
அண்ணலே அறிவான்இவள் தன்மையே
(2)
மருந்து வானவர் உய்ய நஞ்சுண்டுகந்து
இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்துரைக்கிலும் என்சொல் பழிக்குமே
(3)
மழலைதான் வரச் சொல் தெரிகின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழகனே கழிப்பாலைஎம் அண்ணலே
இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே
(4)
செய்ய மேனி வெண்ணீறணிவான் தனை
மையலாகி மதக்கிலர் ஆரையும்
கைகொள் வெண்மழுவன், கழிப்பாலைஎம்
ஐயனே அறிவான் இவள் தன்மையே
(5)
கருத்தனைக், கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை, உமையாள் ஒரு பங்கனை
அருத்தியால் சென்று கண்டிட வேண்டுமென்று
ஒருத்தியார் உளம் ஊசலதாடுமே
(6)
கங்கையைச் சடை வைத்து, மலைமகள்
நங்கையை உடனே வைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப்பாலையான்
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே
(7)
ஐயனே, அழகே, அனலேந்திய
கையனே, கறை சேர்தரு கண்டனே
மையுலாம் பொழில்சூழ் கழிப்பாலைஎம்
ஐயனே, விதியே அருள் என்னுமே
(8)
பத்தர்கட்கு அமுதாய பரத்தினை
முத்தனை, முடிவொன்றிலா மூர்த்தியை
அத்தனை, அணியார் கழிப்பாலைஎம்
சித்தனைச் சென்று சேருமா செப்புமே
(9)
(10)
பொன்செய் மாமுடி வாளரக்கன் தலை
அஞ்சு நான்கும் ஒன்றும் இறுத்தானவன்
என்செயான் கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும் போதும் துணை எனலாகுமே

 

திருக்கழிப்பாலை – அப்பர் தேவாரம் (1):

<– திருக்கழிப்பாலை

(1)
வனபவள வாய்திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால்
சினபவளத் திண்தோள் மேல் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின்றாளால்
அனபவள மேகலையொடு அப்பாலைக்கப்பாலான் என்கின்றாளால்
கனபவளம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(2)
வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே என்கின்றாளால்
விண்டலர்ந்து நாறுவதொர் வெள்ளெருக்க நாண்மலருண்டு என்கின்றாளால்
உண்டயலே தோன்றுவதொர் உத்தரியப் பட்டுடையன் என்கின்றாளால்
கண்டயலே தோன்றும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(3)
பிறந்திளைய திங்களெம் பெம்மான் முடிமேலது என்கின்றாளால்
நிறங்கிளரும் குங்குமத்தின் மேனி அவன்நிறமே என்கின்றாளால்
மறங்கிளர் வேல் கண்ணாள் மணிசேர் மிடற்றவனே என்கின்றாளால்
கறங்கோத மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(4)
இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியொர் வெண்மழுவன் என்கின்றாளால்
சுரும்பார் மலர்க்கொன்றைச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
பெரும்பாலனாகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால்
கரும்பானல் பூக்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(5)
பழியிலான் புகழுடையன் பால்நீற்றன் ஆனேற்றன் என்கின்றாளால்
விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல மூன்றுளவே என்கின்றாளால்
சுழியுலாம் வருகங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால்
கழியுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(6)
பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால்
எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின்றாளால்
பண்ணார் முழவதிரப் பாடலொடு ஆடலனே என்கின்றாளால்
கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(7)
முதிரும்  சடைமுடிமேல் மூழ்கும் இளநாகம் என்கின்றாளால்
அதுகண்டு அதனருகே தோன்றும் இளமதியம் என்கின்றாளால்
சதுர்வெண் பளிக்குக் குழைகாதில் மின்னிடுமே என்கின்றாளால்
கதிர்முத்தம் சிந்தும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(8)
ஓரோதம் ஓதி உலகம் பலிதிரிவான் என்கின்றாளால்
நீரோதம் ஏற நிமிர்புன் சடையானே என்கின்றாளால்
பாரோத மேனிப் பவளம் அவன்நிறமே என்கின்றாளால்
காரோத மல்கும் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(9)
வானுலாம் திங்கள் வளர்புன் சடையானே என்கின்றாளால்
ஊனுலாம் வெண்தலை கொண்டூரூர் பலிதிரிவான் என்கின்றாளால்
தேனுலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால்
கானுலாம் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ
(10)
அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ் அடர்த்தவனே என்கின்றாளால்
சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ண வெண்ணீற்றவனே என்கின்றாளால்
மடற்பெரிய ஆலின்கீழ் அறம் நால்வர்க்கன்றுரைத்தான் என்கின்றாளால்
கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page