(1)
வண்டார்குழல் அரிவையொடு பிரியாவகை பாகம்
பெண்தான்மிக ஆனான், பிறைச்சென்னிப் பெருமான்ஊர்
தண்தாமரை மலராள்உறை தவளந்நெடுமாடம்
விண்தாங்குவ போலும்மிகு வேணுபுரம் அதுவே
(2)
படைப்புந்நிலை இறுதிப்பயன் பருமையொடு நேர்மை
கிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான் ஊர்
புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்
விடைத்தே வரு தென்றல்மிகு வேணுபுரம் அதுவே
(3)
கடந்தாங்கிய கரியை அவர்வெருவ உரிபோர்த்துப்
படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்
நடந்தாங்கிய நடையார் நல பவளத்துவர் வாய்மேல்
விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுரம் அதுவே
(4)
தக்கன்தன் சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு
மிக்கவ் வரமருள் செய்தஎம் விண்ணோர் பெருமான்ஊர்
பக்கம்பல மயிலாடிட மேகம் முழவதிர
மிக்கம் மது வண்டார்பொழில் வேணுபுரம் அதுவே
(5)
நானாவித உருவான், நமையாள்வான், அணுகாதார்
வானார் திரிபுர மூன்றெரி உண்ணச் சிலைதொட்டான்
தேனார்ந்தெழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி
மேல்நோக்கி நின்றிரங்கும் பொழில் வேணுபுரம் அதுவே
(6)
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிம் மிக அஞ்சக்
கண்ணார் சலமூடிக் கடலோங்க உயர்ந்தான்ஊர்
தண்ணார் நறுங்கமலம் மலர் சாய இளவாளை
விண்ணார் குதிகொள்ளும் வியன் வேணுபுரம் அதுவே
(7)
…
(8)
மலையான் மகள் அஞ்ச வரையெடுத்த வலிஅரக்கன்
தலைதோள்அவை நெரியச்சரண் உகிர் வைத்தவன் தன்னூர்
கலைஆறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்
விலையாயின சொல் தேர்தரு வேணுபுரம் அதுவே
(9)
வயமுண் தவமாலும் அடி காணாதலமாக்கும்
பயனாகிய பிரமன் படுதலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கம்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவி வந்துறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே
பயனாகிய பிரமன் படுதலையேந்திய பரனூர்
கயமேவிய சங்கம்தரு கழிவிட்டுயர் செந்நெல்
வியன்மேவி வந்துறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே
(10)
மாசேறிய உடலார்அமண் குழுக்கள்ளொடு தேரர்
தேசேறிய பாதம் வணங்காமைத் தெரியான்ஊர்
தூசேறிய அல்குல் துடியிடையார் துணைமுலையார்
வீசேறிய புருவத்தவர் வேணுபுரம் அதுவே
(11)
வேதத்தொலியாலும் மிகு வேணுபுரம் தன்னைப்
பாதத்தினில் மனம் வைத்தெழு பந்தன்தன் பாடல்
ஏதத்தினை இல்லா இவைபத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார், சிவ கெதியைப் பெறுவாரே