இன்னம்பர் – சம்பந்தர் தேவாரம்:

<-- இன்னம்பர்

(1)
எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக்கும் சடையீரே
வண்டிசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார்
தொண்டிசைக்கும் தொழிலோரே
(2)
யாழ் நரம்பின்இசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடியீரே
தாழ்தரு சடைமுடியீர் உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே
(3)
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வளமதி வளர்சடையீரே
வளமதி வளர்சடையீர் உமை வாழ்த்துவார்
உளமதி மிக உடையோரே
(4)
இடிகுரலிசை முரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடியீரே
கடிகமழ் சடைமுடியீர் உம கழல்தொழும்
அடியவர் அருவினை இலரே
(5)
இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடையீரே
உமையொரு கூறுடையீர் உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர் அன்பே
(6)
எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணரும் சடைமுடியீரே
தண்ணரும் சடைமுடியீர் உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடையோரே
(7)
எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியினீரே
நிழல்திகழ் மேனியினீர் உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே
(8)
ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவு செய்தீரே
தூர்த்தனைத் தொலைவு செய்தீர் உமைத் தொழுபவர்
கூர்த்தநல் குணமுடையோரே
(9)
இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனுமால் அறிவரியீரே
அயனுமால் அறிவரியீர் உமதடி தொழும்
இயலுளார் மறுபிறப்பிலரே
(10)
ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவு செய்தீரே
தேரமண் சிதைவு செய்தீர் உமைச் சேர்பவர்
ஆர்துயர் அருவினை இலரே
(11)
ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம்பந்தன்
நாடமர் ஞானசம்பந்தன நற்றமிழ்
பாட வல்லார் பழியிலரே

 

இன்னம்பர் – அப்பர் தேவாரம் (3):

<– இன்னம்பர்

(1)
என்னிலாரும் எனக்கினி யாரில்லை
என்னிலும் இனி யானொருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய்ப் புறம் போந்துபுக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே
(2)
மட்டுண்பார்கள் மடந்தையர் வாள்கண்ணால்
கட்டுண்பார்கள் கருதுவதென் கொலோ
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே
(3)
கனலும் கண்ணியும் தண்மதியோடுடன்
புனலும் கொன்றையும் சூடும் புரிசடை
அனலும் சூலமும் மான்மறிக் கையினர்
எனலும் என்மனத்து இன்னம்பர் ஈசனே
(4)
மழைக்கண் மாமயில்ஆலும் மகிழ்ச்சியால்
அழைக்கும் தன்னடியார்கள் தம்அன்பினைக்
குழைக்கும் தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும் என்மனத்து இன்னம்பர் ஈசனே
(5)
தென்னவன் எனையாளும் சிவனவன்
மன்னவன், மதியம் மறை ஓதியான்
முன்னமன் அவன், சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே
(6)
விளக்கும் வேறுபடப் பிறர் உள்ளத்தில்
அளக்கும் தன்னடியார் மனத்தன்பினைக்
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத்து இன்னம்பர் ஈசனே
(7)
சடைக்கணாள் புனலாள், அனல் கையதோர்
கடைக்கணால் மங்கை நோக்கு, இமவான்மகள்
படைக்கணால் பருகப் படுவான், நமக்கு
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே
(8)
தொழுது தூமலர் தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப்பாரையும்
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
(9)
விரியும் தண்ணிள வேனிலில் வெண்பிறை
புரியும் காமனை வேவப் புருவமும்
திரியும் எல்லையில் மும்மதில் தீயெழுந்து
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே
(10)
சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும்
முனிவனாய் முடி பத்துடையான் தனைக்
கனிய ஊன்றிய காரணமென் கொலோ
இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே

 

இன்னம்பர் – அப்பர் தேவாரம் (4):

<– இன்னம்பர்

(1)
அல்லிமலர் நாற்றத்துள்ளார் போலும்
    அன்புடையார் சிந்தை அகலார் போலும்
சொல்லின் அருமறைகள் தாமே போலும்
    தூநெறிக்கு வழிகாட்டும் தொழிலார் போலும்
வில்லில் புரமூன்றெரித்தார் போலும்
    வீங்கிருளும் நல்வெளியும் ஆனார் போலும்
எல்லி நடமாட வல்லார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(2)
கோழிக் கொடியோன் தன் தாதை போலும்
    கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும்
    உள்குவார் உள்ளத்தில் உள்ளார் போலும்
ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்
    அடைந்தவர்கட்கன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்கும் தாமே போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(3)
தொண்டர்கள் தந்தகவின் உள்ளார் போலும்
    தூநெறிக்கும் தூநெறியாய் நின்றார் போலும்
பண்டிருவர் காணாப் படியார் போலும்
    பத்தர்கள் தம் சித்தத்திருந்தார் போலும்
கண்டம் இறையே கறுத்தார் போலும்
    காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்
இண்டைச் சடைசேர் முடியார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(4)
வானத்திளம் திங்கள் கண்ணி தன்னை
    வளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்
ஊனொத்த வேலொன்றுடையார் போலும்
    ஒளிநீறு பூசும் ஒருவர் போலும்
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்
    தம்மில் பிறர்பெரியார் இல்லார் போலும்
ஏனத்தெயிறிலங்கப் பூண்டார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(5)
சூழும் துயரம் அறுப்பார் போலும்
    தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழும் கடல்நஞ்சை உண்டார் போலும்
    ஆடலுகந்த அழகர் போலும்
தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு
    தன்மையளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(6)
பாதத்தணையும் சிலம்பர் போலும்
    பாரூர் விடையொன்றுடையார் போலும்
பூதப் படையாள் புனிதர் போலும்
    பூம்புகலூர் மேய புராணர் போலும்
வேதப் பொருளாய் விளைவார் போலும்
    வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(7)
பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்
    பத்தர்கள்தம் சித்தத்திருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக்கரியார் போலும்
    கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்
பொல்லாத பூதப் படையார் போலும்
    பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்
எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(8)
மட்டு மலியும் சடையார் போலும்
    மாதைஓர் பாகம் உடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்
    காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்றாடும் நம்பர் போலும்
    ஞாலமெரி நீர்வெளிகால் ஆனார் போலும்
எட்டுத் திசைகளும் தாமே போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(9)
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
    கழற்போது தந்தளித்த கள்வர் போலும்
செருவில் புரமூன்றும் அட்டார் போலும்
    தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்
மருவிப் பிரியாத மைந்தர் போலும்
    மலரடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கொருவராய் நின்றார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே
(10)
அலங்கல் சடைதாழ ஐயமேற்று
    அரவம் அரையார்க்க வல்லார் போலும்
வலங்கை மழுவொன்றுடையார் போலும்
    வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்துகந்த வெற்றியானை
    விறலழித்து மெய்ந் நரம்பால் கீதம் கேட்டன்று
இலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்
    இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாரே

 

இன்னம்பர் – அப்பர் தேவாரம் (2):

<– இன்னம்பர்

(1)
மன்னு மலைமகள் கையால் வருடின, மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருளாயின, தூக்கமலத்து
அன்ன வடிவின, அன்புடைத் தொண்டர்க்கு அமுதரும்பி
இன்னல் களைவன, இன்னம்பரான்  தன் இணையடியே
(2)
பைதல் பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கரிய திருநடம் செய்தன, சீர்மறையோன்
உய்தற் பொருட்டு வெங்கூற்றை உதைத்தன, உம்பர்க்கெல்லாம்
எய்தற்கரியன, இன்னம்பரான் தன் இணையடியே
(3)
சுணங்கு நின்றார் கொங்கையாள் உமைசூடின, தூமலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின, மன்னு மறைகள் தம்மில்
பிணங்கிநின்று இன்னனவென்று அறியாதன, பேய்க்கணத்தோடு
இணங்கி நின்றாடின, இன்னம்பரான் தன் இணையடியே
(4)
ஆறொன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அப்பொருள்கள்
வேறொன்றிலாதன, விண்ணோர் மதிப்பன, மிக்குவமன்
மாறொன்றிலாதன, மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறொன்றிலாதன, இன்னம்பரான் தன் இணையடியே
(5)
அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றினால் அடல்அங்கியின் வாய்க்
கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன, கட்டுருவம்
பரக்க வெங்கானிடை வேடுருவாயின, பல்பதி தோறும்
இரக்க நடந்தன, இன்னம்பரான் தன் இணையடியே
(6)
கீண்டும் கிளர்ந்தும் பொற்கேழல் முன் தேடின, கேடுபடா
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின, வாரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்றாடின, மேவுசிலம்பு
ஈண்டும் கழலின, இன்னம்பரான் தன் இணையடியே
(7)
போற்றும் தகையன, பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன, ஆறு சமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன, தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன, இன்னம்பரான் தன் இணையடியே
(8)
பயம்புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன, பார்ப்பதி தன்
குயம்பொன்மை மாமலராகக் குலாவின, கூடவொண்ணாச்
சயம்பு என்றேதகு தாணு என்றே சதுர் வேதங்கள்நின்று
இயம்பும் கழலின, இன்னம்பரான் தன் இணையடியே
(9)
அயனொடு மால் இந்திரன் சந்த்ராதித்தர் அமரரெலாம்
சயசய என்று முப்போதும் பணிவன, தண்கடல்சூழ்
வியநிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியனகர்க்கும்
இயபரம் ஆவன, இன்னம்பரான் தன் இணையடியே
(10)
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன, தாமரைப்போது
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன, ஒண்கயிலை
நெருக்கிய வாளரக்கன் தலைபத்து நெரித்தவன் தன்
இருக்கியல்பாயின, இன்னம்பரான் தன் இணையடியே

 

இன்னம்பர் – அப்பர் தேவாரம் (1):

<– இன்னம்பர்

(1)
விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும்
பெண்ணொரு பாகர் போலும், பேடலி ஆணர் போலும்
வண்ணமால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்
எண்ணுரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(2)
பன்னிய மறையர் போலும், பாம்பரை உடையர் போலும்
துன்னிய சடையர் போலும், தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும், மாதிட மகிழ்வர் போலும்
என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(3)
மறியொரு கையர் போலும், மாதுமை உடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்
செறிவுடை அங்க மாலை சேர்திரு உருவர் போலும்
எறிபுனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(4)
விடமலி கண்டர் போலும், வேள்வியை அழிப்பர் போலும்
கடவுநல் விடையர் போலும், காலனைக் காய்வர் போலும்
படமலி அரவர் போலும், பாய்புலித் தோலர் போலும்
இடர் களைந்தருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(5)
அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்
களிமயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்
வெளிவளர் உருவர் போலும், வெண்பொடி அணிவர் போலும்
எளியவர் அடியர்க்கென்றும் இன்னம்பர் ஈசனாரே
(6)
கணையமர் சிலையர் போலும், கரியுரி உடையர் போலும்
துணையமர் பெண்ணர் போலும், தூமணிக் குன்றர் போலும்
அணையுடை அடியர்கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணையடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(7)
பொருப்பமர் புயத்தர் போலும், புனலணி சடையர் போலும்
மருப்பிள ஆமை தாங்கு மார்பில் வெண்ணூலர் போலும்
உருத்திர மூர்த்தி போலும், உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(8)
காடிடம் உடையர் போலும், கடிகுரல் விளியர் போலும்
வேடுரு உடையர் போலும், வெண்மதிக் கொழுந்தர் போலும்
கோடலர் வன்னி தும்பை கொக்கிறகலர்ந்த கொன்றை
ஏடமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(9)
காறிடு விடத்தை உண்ட கண்டர் எண்தோளர் போலும்
நீறுடை உருவர் போலும், நினைப்பினை அரியர் போலும்
பாறுடைத் தலைகை ஏந்திப் பலி திரிந்துண்பர் போலும்
ஏறுடைக் கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே
(10)
ஆர்த்தெழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்
பார்த்தனோடமர் பொருது படை கொடுத்தருள்வர் போலும்
தீர்த்தமாம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்
ஏத்தஏழ் உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே

 

திருப்புறம்பயம் – அப்பர் தேவாரம்:

<– திருப்புறம்பயம்

(1)
கொடிமாட நீள்தெருவு கூடல் கோட்டூர்
    கொடுங்கோளூர் தண்வளவி கண்டியூரும்
நடமாடு நன்மருகல் வைகி நாளும்
    நலமாகும் ஒற்றியூர் ஒற்றியாகப்
படுமாலை வண்டறையும் பழனம் பாசூர்
    பழையாறும் பாற்குளமும் கைவிட்டிந்நாள்
பொடியேறு மேனியராய்ப் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(2)
முற்றொருவர் போல முழுநீறாடி
    முளைத்திங்கள் சூடி முந்நூலும் பூண்டு
ஒற்றொருவர் போல உறங்குவேன் கை
    ஒளிவளையை ஒன்றொன்றா எண்ணுகின்றார்
மற்றொருவர் இல்லைத் துணையெனக்கு
    மால்கொண்டால் போல மயங்குவேற்குப்
புற்றரவக் கச்சார்த்துப் பூதம்சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(3)
ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
    ஐந்தலைய மாசுணம் கொண்டம்பொன் தோள்மேல்
ஏகாசமா விட்டு, ஓடொன்றேந்தி வந்து
    இடுதிருவே பலியென்றார்க்கில்லே புக்கேன்
பாகேதும் கொள்ளார், பலியும் கொள்ளார்
    பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(4)
பன்மலிந்த வெண்தலை கையிலேந்திப்
    பனிமுகில் போல் மேனிப்ப வந்த நாதர்
நெல்மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை
    நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில்
கல் மலிந்தோங்கு கழுநீர்க் குன்றம்
    கடல்நாகைக் காரோணம் கைவிட்டிந்நாள்
பொன்மலிந்த கோதையரும் தாமும் எல்லாம்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(5)
செத்தவர்தம் தலைமாலை கையிலேந்திச்
    சிரமாலை சூடிச் சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி
    மடவாள் அவளோடு மானொன்றேந்தி
அத்தவத்த தேவர் அறுபதின்மர்
    ஆறு நூறாயிரவர்க்காடல் காட்டிப்
புத்தகம் கைக்கொண்டு புலித்தோல் வீக்கிப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(6)
நஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீறாடி
    நல்ல புலியதள் மேல் நாகம்கட்டிப்
பஞ்சடைந்த மெல்விரலாள் பாகமாகப்
    பராய்த்துறையேன் என்றார் பவள வண்ணர்
துஞ்சிடையே வந்து துடியும் கொட்டத்
    துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்
புன்சடையின் மேலோர் புனலும் சூடிப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(7)
மறியிலங்கு கையர் மழுவொன்றேந்தி
    மறைக்காட்டேன் என்றோர் மழலை பேசிச்
செறியிலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு
    திருமுண்டமா இட்ட திலக நெற்றி
நெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று
    நெடுங்கண் பனிசோர நின்று நோக்கிப்
பொறியிலங்கு பாம்பார்த்துப் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(8)
நில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி
    நிரைவளையார் பலிபெய்ய நிறையும் கொண்டு
கொல்லேறும் கொக்கரையும் கொடுகொட்டியும்
    குடமூக்கில் அங்கொழியக் குளிர்தண் பொய்கை
நல்லாளை நல்லூரே தவிரேன் என்று
    நறையூரில் தாமும் தவிர்வார் போலப்
பொல்லாத வேடத்தர் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(9)
விரையேறு நீறணிந்தோர் ஆமை பூண்டு
    வெண்தோடு பெய்திடங்கை வீணையேந்தித்
திரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்
    திசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்
அரையேறு மேகலையாள் பாகமாக
    ஆரிடத்தில் ஆடல்அமர்ந்த ஐயன்
புரையேறு தாமேறிப் பூதம் சூழப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே
(10)
கோவாய இந்திரன் உள்ளிட்டாராகக்
    குமரனும் விக்கின விநாயகன்னும்
பூவாய பீடத்து மேல் அயன்னும்
    பூமி அளந்தானும் போற்றிசைப்பப்
பாவாய இன்னிசைகள் பாடியாடிப்
    பாரிடமும் தாமும் பரந்து பற்றிப்
பூவார்ந்த கொன்றை பொறி வண்டார்க்கப்
    புறம்பயம் நம்மூரென்று போயினாரே

 

திருப்புறம்பயம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்புறம்பயம்

(1)
மறம்பய மலைந்தவர் மதில் பரிசறுத்தனை
நிறம் பசுமை செம்மையொடிசைந்துனது நீர்மை
திறம் பயனுறும் பொருள் தெரிந்துணரு நால்வர்க்கு
அறம் பயன் உரைத்தனை, புறம்பயம் அமர்ந்தோய்
(2)
விரித்தனை திருச்சடை, அரித்தொழுகு வெள்ளம்
தரித்தனை, அதன்றியும் மிகப்பெரிய காலன்
எருத்திற உதைத்தனை, இலங்கிழையொர் பாகம்
பொருத்துதல் கருத்தினை, புறம்பயம் அமர்ந்தோய்
(3)
விரிந்தனை குவிந்தனை, விழுங்குயிர் உமிழ்ந்தனை
திரிந்தனை, குருந்தொசி பெருந்தகையும் நீயும்
பிரிந்தனை புணர்ந்தனை, பிணம்புகு மயானம்
புரிந்தனை மகிழ்ந்தனை, புறம்பயம் அமர்ந்தோய்.
(4)
வளங்கெழு கடும்புனலொடும் சடையொடுங்கத்
துளங்கமர் இளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை, புறம்பயம் அமர்ந்தோய்
(5)
பெரும்பிணி பிறப்பினொடு இறப்பிலை, ஒர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை, புறம்பயம் அமர்ந்த இறையோனே
(6)
அனற்படு தடக்கையவர் எத்தொழிலரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனற்படு சுடர்ச்சடை தனிப் பிறையொடொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
(7)
மறத்துறை மறுத்தவர் தவத்தடியர் உள்ளம்
அறத்துறை ஒறுத்துனதருட் கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய்
(8)
இலங்கையர் இறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைகள் அடர்த்திடலும் அஞ்சி
வலங்கொள எழுந்தவன் அலங்கவின அஞ்சு
புலங்களை விலங்கினை, புறம்பயம் அமர்ந்தோய்
(9)
வடங்கெட நுடங்குள இடந்த இடையல்லிக்
கிடந்தவன் இருந்தவன் அளந்துணரலாகார்
தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள் செய்தொன்றினை புறம்பயம் அமர்ந்தோய்
(10)
விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவர், உடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்து, உமையொர் பாகம்
அடக்கினை, புறம்பயம் அமர்ந்த உரவோனே
(11)
கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தம்
தரும் கழுமலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பயம் அமர்ந்த தமிழ் வல்லார்
பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page