திருநெய்த்தானம் – அப்பர் தேவாரம் (3):

<– திருநெய்த்தானம்

(1)
கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான்
புல்லியார் புரம் மூன்றெரி செய்தவன்
நெல்லியான், நிலையான நெய்த்தானனைச்
சொல்லி மெய்தொழுவார் சுடர் வாணரே
(2)
இரவனை, இடு வெண்தலை ஏந்தியைப்
பரவனைப், படையார் மதில் மூன்றையும்
நிரவனை, நிலையான நெய்த்தானனைக்
குரவனைத் தொழுவார் கொடிவாணரே
(3)
ஆனிடை ஐந்தும் ஆடுவர், ஆரிருள்
கானிடை நடம் ஆடுவர் காண்மினோ
தேனிடை மலர் பாயும் நெய்த்தானனை
வானிடைத் தொழுவார் வலி வாணரே
(4)
விண்டவர் புரமூன்றும் வெண்ணீறெழக்
கண்டவன், கடிதாகிய நஞ்சினை
உண்டவன், ஒளியான நெய்த்தானனைத்
தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே
(5)
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே
சங்கியாது சமுத்திர நஞ்சுண்டான்
நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத்
தங்கையால் தொழுவார் தலைவாணரே
(6)
சுட்ட நீறு மெய்பூசிச் சுடலையுள்
நட்டமாடுவர் நள்ளிருள் பேயொடே
சிட்டர் வானவர் தேரு நெய்த்தானனை
இட்டமாய்த் தொழுவார் இன்பவாணரே
(7)
கொள்ளித் தீயெரி வீசிக் கொடியதோர்
கள்ளிக் காட்டிடை ஆடுவர் காண்மினோ
தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை
உள்ளத்தால் தொழுவார் உம்பர் வாணரே
(8)
உச்சி மேல் விளங்கும் இள வெண்பிறை
பற்றி ஆடரவோடும் சடைப் பெய்தான்
நெற்றி ஆரழல் கண்ட நெய்த்தானனைச்
சுற்றி மெய்தொழுவார் சுடர் வாணரே
(9)
மாலொடும் மறையோதிய நான்முகன்
காலொடும் முடி காண்பரிதாயினான்
சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை
மாலொடும் தொழுவார் வினை வாடுமே
(10)
வலிந்த தோள்வலி வாளரக்கன் தனை
நெருங்க நீள்வரை ஊன்று நெய்த்தானனார்
புரிந்து கைந்நரம்போடிசை பாடலும்
பரிந்தனைப் பணிவார் வினை பாறுமே

 

திருநெய்த்தானம் – அப்பர் தேவாரம் (2):

<– திருநெய்த்தானம்

(1)
பாரிடம் சாடிய பல்லுயிர் வான் அமரர்க்கருளிக்
காரடைந்த கடல் வாயுமிழ் நஞ்சமுதாக உண்டான்
ஊரடைந்திவ்வுலகில் பலி கொள்வது நாமறியோம்
நீரடைந்த கரைநின்ற நெய்த்தானத்திருந்தவனே
(2)
தேய்ந்திலங்கும் சிறு வெண்மதியாய், நின் திருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப் புனல் பன்முகமாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங்கும் மழு வேலுடையாய், அடியேற்குரை நீ
ஏந்திள மங்கையும் நீயும் நெய்த்தானத்திருந்ததுவே
(3)
கொன்றடைந்தாடிக் குமைத்திடும் கூற்றமொன்னார் மதில்மேல்
சென்றடைந்தாடிப் பொருததும் தேசமெல்லாம் அறியும்
குன்றடைந்தாடும் குளிர்பொழில் காவிரியின் கரைமேல்
சென்றடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்திருந்தவனே
(4)
கொட்டு முழவரவத்தொடு கோலம் பலஅணிந்து
நட்டம் பல பயின்றாடுவர் நாகம் அரைக்கசைத்துச்
சிட்டர் திரிபுரம் தீயெழச் செற்ற சிலையுடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்திருந்தவனே
(5)
கொய்ம்மலர்க் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றை, விண்ணோர் பெருமான்
மைம்மலர் நீலநிறம் கருங்கண்ணியோர் பால் மகிழ்ந்தான்
நின்மலன் ஆடல்நிலய நெய்த்தானத்திருந்தவனே
(6)
பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை ஏறிப்பல் பூதப்படை நடுவே
போந்தார் புறவிசை பாடவும் ஆடவும் கேட்டருளிச்
சேர்ந்தார் உமையவளோடு நெய்த்தானத்திருந்தவனே
(7)
பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன், சூலமழு ஒருமான்
செற்றுநம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்திருந்தவனே
(8)
விரித்த சடையினன், விண்ணவர் கோன், விடமுண்ட கண்டன்
உரித்த கரியுரி மூடி ஒன்னார் மதில் மூன்றுடனே
எரித்த சிலையினன், ஈடழியாதென்னை ஆண்டு கொண்ட
தரித்த உமையவளோடு நெய்த்தானத்திருந்தவனே
(9)
தூங்கான், துளங்கான், துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளரவும் கங்கைதான் புனைந்தான்
தேங்கார் திரிபுரம் தீயெழ எய்து தியக்கறுத்து
நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்திருந்தவனே
(10)
ஊட்டி நின்றான் பொருவானில மும்மதி தீஅம்பினால்
மாட்டிநின்றான், அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான், கதமாக் கங்கை பாயவொர் வார்சடையை
நீட்டி நின்றான், திருநின்ற நெய்த்தானத்திருந்தவனே

 

திருவெண்காடு – அப்பர் தேவாரம் (1):

<– திருவெண்காடு

(1)
தூண்டு சுடர்மேனித் தூநீறாடிச்
    சூலங்கை ஏந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறிஅரவம் காதில் பெய்து
    பொற்சடைகள் அவைதாழப் புரிவெண்ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
    நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சம் கொண்டார்
வேண்டு நடை நடக்கும் வெள்ளேறேறி
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(2)
பாதம் தரிப்பார்மேல் வைத்த பாதர்
    பாதாளம் ஏழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம்படா வண்ணம் நின்ற பாதர்
    ஏழுலகுமாய் நின்ற ஏகபாதர்
ஓதத்தொலி மடங்கி ஊர்உண்டேறி
    ஒத்துலகம் எல்லாம் ஒடுங்கிய பின்
வேதத்தொலி கொண்டு வீணை கேட்பார்
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(3)
நென்னலைஓர் ஓடேந்திப் பிச்சைக்கென்று
    வந்தார்க்கு வந்தேனென்றில்லே புக்கேன்
அந்நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார்
    அருகே வருவார்போல் நோக்குகின்றார்
நுந்நிலைமை ஏதோ நும்மூர் தான்ஏதோ
    என்றேனுக்கொன்றாகச் சொல்ல மாட்டார்
மென்முலையார் கூடி விரும்பியாடும்
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(4)
ஆகத்துமையடக்கி, ஆறு சூடி
    ஐவாய் அரவசைத்தங்கு ஆனேறேறிப்
போகம் பலஉடைத்தாய்ப் பூதம்சூழப்
    புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்
பாகிடுவான் சென்றேனைப் பற்றி நோக்கிப்
    பரிசழித்தென் வளை கவர்ந்தார் பாவியேனை
மேக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(5)
கொள்ளைக் குழைக்காதில் குண்டைப் பூதம்
    கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல
    உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன்
கள்ள விழிவிழிப்பர் காணாக் கண்ணால்
    கண்ணுள்ளார் போலே கரந்து நிற்பர்
வெள்ளச் சடைமுடியர் வேத நாவர்
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(6)
தொட்டிலங்கு சூலத்தர் மழுவாளேந்திச்
    சுடர்க்கொன்றைத் தாரணிந்து சுவைகள் பேசிப்
பட்டி வெள்ளேறேறிப் பலியும் கொள்ளார்
    பார்ப்பாரைப் பரிசழிப்பார் ஒக்கின்றாரால்
கட்டிலங்கு வெண்ணீற்றர் கனலப் பேசிக்
    கருத்தழித்து வளைகவர்ந்தார் காலை மாலை
விட்டிலங்கு சடைமுடியர் வேத நாவர்
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(7)
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கைக்
    கோணாகம் பூண்பனவும் நாணாம் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய்
    உண்பதுவும் நஞ்சன்றேல் ஓவியுண்ணார்
பண்பால் விரிசடையர் பற்றி நோக்கிப்
    பாலைப் பரிசழியப் பேசுகின்றார்
விண்பால் மதிசூடி வேதம்ஓதி
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(8)
மருதங்களா மொழிவர் மங்கையோடு
    வானவரும் மாலயனும் கூடித் தங்கள்
சுருதங்களால் துதித்துத் தூநீராட்டித்
    தோத்திரங்கள் பலசொல்லித் தூபம் காட்டிக்
கருதுங்கொல் எம்பெருமான் செய் குற்றேவல்
    என்பார்க்கு வேண்டும் வரங்கொடுத்து
விகிர்தங்களா நடப்பர் வெள்ளேறேறி
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(9)
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும்
    காணார் பொறியழலாய் நின்றான் தன்னை
உள்ளானை ஒன்றலா உருவினானை
    உலகுக்கொரு விளக்காய் நின்றான் தன்னைக்
கள்ளேந்து கொன்றை தூய்க்காலை மூன்றும்
    ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரங்கொடுப்பார்
    வெண்காடு மேவிய விகிர்தனாரே
(10)
மாக்குன்று எடுத்தோன் தன் மைந்தனாகி
    மாவேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்கும் துணைத்தேவர் எல்லாம் நிற்க
    நொடிவரையில் நோவ விழித்தான் தன்னைக்
காக்கும் கடல்இலங்கைக் கோமான் தன்னைக்
    கதிர்முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம் தவிர்த்த விரலார் போலும்
    வெண்காடு மேவிய விகிர்தனாரே

 

திருவையாறு – அப்பர் தேவாரம் (4):

<– திருவையாறு

(1)
சிந்தை வாய்தல்உளான் வந்து, சீரியன்
பொந்துவார் புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல்பிடித்து
அந்தி வாயதோர் பாம்பர் ஐயாறரே
(2)
பாகம் மாலை மகிழ்ந்தனர், பால்மதி
போக ஆனையின் ஈருரி போர்த்தவர்
கோக மாலை குலாயதோர் கொன்றையும்
ஆக ஆன்நெய் அஞ்சாடும் ஐயாறரே
(3)
நெஞ்சம் என்பதோர் நீள்கயம் தன்னுளே
வஞ்சம் என்பதோர் வான் சுழிப்பட்டு நான்
துஞ்சும் போழ்து நின்நாமத் திருவெழுத்து
அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே
(4)
நினைக்கும் நெஞ்சின் உள்ளார், நெடு மாமதில்
அனைத்தும் ஒள்ளழல் வாயெரி ஊட்டினார்
பனைக்கை வேழத்துரி உடல் போர்த்தவர்
அனைத்து வாய்தல் உள்ளாரும் ஐயாறரே
(5)
பரியர் நுண்ணியர், பார்த்தற்கரியவர்
அரிய பாடலர், ஆடலர், அன்றியும்
கரிய கண்டத்தர், காட்சி பிறர்க்கெலாம்
அரியர், தொண்டர்க்கெளியர் ஐயாறரே
(6)
புலரும் போதும் இலாப்பட்ட பொற்சுடர்
மலரும் போதுகளால் பணியச் சிலர்
இலரும் போதும் இலாததும் அன்றியும்
அலரும் போதும் அணியும் ஐயாறரே
(7)
பங்க மாலைக் குழலியொர் பால்நிறக்
கங்கை மாலையர் காதன்மை செய்தவர்
மங்கை மாலை மதியமும் கண்ணியும்
அங்க மாலையும் சூடும் ஐயாறரே
(8)
முன்னையாறு முயன்றெழுவீர் எலாம்
பின்னையாறு பிரியெனும் பேதைகாள்
மன்ஐயாறு மருவிய மாதவன்
தன்னையாறு தொழத் தவமாகுமே
(9)
ஆனையாறென ஆடுகின்றான் முடி
வானையாறு வளாயது காண்மினோ
நான்ஐயாறு புக்கேற்கவன் இன்னருள்
தேனையாறு திறந்தாலே ஒக்குமே
(10)
அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன்
அரக்கின் சேவடியாள் அஞ்ச, அஞ்சலென்று
அரக்கன் ஈரைந்து வாயும் அலறவே
அரக்கினான் அடியாலும் ஐயாறனே

 

திருநெய்த்தானம் – அப்பர் தேவாரம் (1):

<– திருநெய்த்தானம்

(1)
காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென்
மேலவா இருக்கப் பெற்றேன், மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்தனைய கண்ட, நினைக்குமா நினைக்கின்றேனே
(2)
காமனை அன்று கண்ணால் கனலெரியாக நோக்கித்
தூமமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கருள்கள் செய்து
சேம நெய்த்தானம் என்னும் செறிபொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்தவாறே
(3)
பிறைதரு சடையின் மேலே பெய்புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழியாய
நிறைதரு பொழில்கள் சூழநின்ற நெய்த்தானமென்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடலாமே
(4)
வடிதரு மழுவொன்றேந்தி, வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே, புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ, நின்ற நெய்த்தான மேவி
அடிதரு கழல்கள்ஆர்ப்ப ஆடும்எம் அண்ணலாரே
(5)
காடிடமாக நின்று கனலெரி கையிலேந்திப்
பாடிய பூதம்சூழப் பண்ணுடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர் சீரார்ந்த நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரைக் கூடுமாறறிகிலேனே
(6)
வானவர் வணங்கியேத்தி வைகலும் மலர்க தூவத்
தானவர்க்கருள்கள் செய்யும் சங்கரன் செங்கண்ஏற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழு நெய்த்தான மேய
கூனிள மதியினானைக் கூடுமாறறிகிலேனே
(7)
காலதிர் கழல்கள்ஆர்ப்பக் கனலெரி கையில் வீசி
ஞாலமும் குழிய நின்று நட்டமதாடுகின்ற
மேலவர் முகடுதோய விரிசடை திசைகள் பாய
மாலொரு பாகமாக மகிழ்ந்த நெய்த்தானனாரே
(8)
பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து
அந்திப் போதனலும் ஆடி அடிகளை ஆறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயினுள்ளார்
சிந்திப்பார் சிந்தையுள்ளார் திருந்து நெய்த்தானனாரே
(9)
சோதியாய்ச் சுடரும் ஆனார், சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவாய் உலகமேத்த உகந்துதாம் அருள்கள் செய்வார்
ஆதியாய் அந்தமானார், யாவரும் இறைஞ்சி ஏத்த
நீதியாய் நியமமாகி நின்ற நெய்த்தானனாரே
(10)
இலையுடைப் படைகை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்
தலையுடன் அடர்த்து மீண்டே தானவற்கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுரம் எரியச் செற்ற
நிலையுடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே

 

திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (5):

<– திருவையாறு

(1)
கோடல், கோங்கம், குளிர் கூவிள மாலை, குலாயசீர்
ஓடுகங்கை ஒளி வெண்பிறை சூடும் ஒருவனார்
பாடல் வீணை முழவம் குழல் மொந்தை பண்ணாகவே
ஆடுமாறு வல்லானும் ஐயாறுடை ஐயனே
(2)
தன்மை யாரும் அறிவாரிலை, தாம் பிறர் எள்கவே
பின்னு முன்னும் சில பேய்க்கணம் சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை உடுப்பர், சுடலைப் பொடி பூசுவர்
அன்னம் ஆலும் துறையானும் ஐயாறுடை ஐயனே
(3)
கூறு பெண், உடை கோவணம், உண்பது வெண்தலை
மாறிலாரும் கொள்வாரிலை, மார்பில் அணிகலம்
ஏறுமேறித் திரிவர், இமையோர் தொழுதேத்தவே
ஆறு நான்கும் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
(4)
பண்ணில் நல்ல மொழியார், பவளத்துவர் வாயினார்
எண்ணில் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார்
வண்ணம்பாடி வலிபாடித் தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந்தானும் ஐயாறுடை ஐயனே
(5)
வேனல்ஆனை வெருவ உரி போர்த்துமை அஞ்சவே
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேனெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும்பின் தெளி
ஆனஞ்சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே
(6)
எங்குமாகி நின்றானும், இயல்பு அறியப்படா
மங்கை பாகம் கொண்டானும், மதிசூடு மைந்தனும்
பங்கமில் பதினெட்டொடு நான்குக்குணர்வுமாய்
அங்கம்ஆறும் சொன்னானும் ஐயாறுடை ஐயனே
(7)
ஓதியாரும் அறிவாரிலை ஓதி உலகெலாம்
சோதியாய் நிறைந்தான், சுடர்ச் சோதியுள் சோதியான்
வேதியாகி விண்ணாகி மண்ணோடுஎரி காற்றுமாய்
ஆதியாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே
(8)
குரவ நாண்மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய்
விரவு நீறணிவார் சில தொண்டர் வியப்பவே
பரவி நாள்தொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவம் ஆர்த்துகந்தானும் ஐயாறுடை ஐயனே
(9)
உரைசெய் தொல்வழி செய்தறியா இலங்கைக்கு மன்
வரைசெய் தோளடர்த்து மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரியின் வடபாலது காதலால்
அரைசெய் மேகலையானும் ஐயாறுடை ஐயனே
(10)
மாலும் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலம் காம்பு வயிரம் கடிகையன் பொற்கழல்
கோலமாய்க் கொழுந்தீன்று பவளம் திரண்டதோர்
ஆல நீழல்உளானும் ஐயாறுடை ஐயனே
(11)
கையிலுண்டுழல்வாரும், கமழ்துவர் ஆடையான்
மெய்யைப் போர்த்துழல்வாரும்  உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத்தெண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே
ஐயம் தேர்ந்தளிப்பானும் ஐயாறுடை ஐயனே
(12)
பலிதிரிந்துழல் பண்டங்கன் மேய ஐயாற்றினைக்
கலிகடிந்த கையான் கடற்காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்தமிழ் பத்தும் வல்லார்கள் போய்
மலிகொள் விண்ணிடை மன்னியசீர் பெறுவார்களே

 

திருவெண்காடு – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவெண்காடு

(1)
மந்திர மறையவை வானவரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்இறை
வெந்த வெண்ணீற்றர், வெண்காடு மேவிய
அந்தமும் முதலுடை அடிகள் அல்லரே
(2)
படையுடை மழுவினர், பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம் உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர், வெண்காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுரர் அல்லரே
(3)
பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவு வெண்காடு மேவிய
ஆலமதமர்ந்த எம்அடிகள் அல்லரே
(4)
ஞாழலும் செருந்தியும், நறுமலர்ப் புன்னையும்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழமதுரித்த வெண்காடு மேவிய
யாழினது இசையுடை இறைவர் அல்லரே
(5)
பூதங்கள் பலவுடைப் புனிதர், புண்ணியர்
ஏதங்கள் பலஇடர் தீர்க்கும் எம்இறை
வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரமர் அல்லரே
(6)
மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்இறை
விண்ணமர் பொழில்கொள் வெண்காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே
(7)
நயந்தவர்க்கருள் பல நல்கி, இந்திரன்
கயந்திரம் வழிபட நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவு வெண்காடு மேவிய
பயந்தரு மழுவுடைப் பரமர் அல்லரே
(8)
மலையுடன் எடுத்த வல்லரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர், வெண்காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே
(9)
ஏடவிழ் நறுமலர் அயனும் மாலுமாய்த்
தேடவும் தெரிந்தவர் தேரகிற்கிலார்
வேடமதுடைய வெண்காடு மேவிய
ஆடலை அமர்ந்த எம்அடிகள் அல்லரே
(10)
போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார்
வேதியர் பரவு வெண்காடு மேவிய
ஆதியை அடிதொழ அல்லல் இல்லையே
(11)
நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண்காட்டின் மேல்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோடருவினை அறுதல் ஆணையே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page