திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும் – சுந்தரர் தேவாரம்:

<– திருவேள்விக்குடி

<– திருத்துருத்தி

(1)
மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை, இறப்பதில்லை
சேர்ப்பது காட்டகத்தூரினுமாகச் சிந்திக்கினல்லால்
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி, எங்கோன் அரைமேல்
ஆர்ப்பது நாகம், அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(2)
கட்டக்காட்டில் நடமாடுவர், யாவர்க்கும் காட்சியொண்ணார்
சுட்ட வெண்ணீறணிந்தாடுவர், பாடுவர், தூய நெய்யால்
வட்டக் குண்டத்தில் எரிவளர்த்தோம்பி மறை பயில்வார்
அட்டக் கொண்டுண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(3)
பேருமோர் ஆயிரம் பேருடையார், பெண்ணோடு ஆணுமல்லர்
ஊருமது ஒற்றியூர், மற்றையூர் பெற்றவா நாமறியோம்
காரும் கருங்கடல் நஞ்சமுதுண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பாவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(4)
ஏனக்கொம்பும் இள ஆமையும் பூண்டங்கோர் ஏறுமேறிக்
கானக்காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே
மானைத்தோல் ஒன்றுடுத்துப் புலித்தோல் பியற்கும்இட்டு
யானைத்தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(5)
ஊட்டிக் கொண்டுண்பதோர் ஊணிலர் ஊரிடு பிச்சையல்லால்
பூட்டிக்கொண்றேற்றினை ஏறுவர், ஏறியொர் பூதம் தம்பால்
பாட்டிக் கொண்டுண்பவர், பாழிதொறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக் கொண்டுண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(6)
குறவனார் தம்மகள் தம்மகனார் மணவாட்டி, கொல்லை
மறவனாராய் அங்கோர் பன்றிப்பின் போவது மாயங்கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியாராய் அங்கோர் சோர்வுபடா
அறவனாராவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(7)
பித்தரை ஒத்தொரு பெற்றியர், நற்றவை, என்னைப்பெற்ற
முற்றவை, தம்மனை தந்தைக்கு தவ்வைக்கும் தம்பிரானார்
செத்தவர்தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகி
அத்தவமாவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(8)
உம்பரான், ஊழியான், ஆழியான், ஓங்கி மலர்உறைவான்
தம்பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்றறுப்பார்
எம்பரமல்லவர் என்னெஞ்சத்துள்ளும் இருப்பதாகி
அம்பரமாவது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(9)
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர், மாமறை பாடுவர், மான்மறியர்
சிந்துரக் கண்ணனும் நான்முகனும் உடனாய்த் தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்காட்படோமே
(10)
கூடலர் மன்னன் குல நாவலூர்க்கோன் நலத்தமிழைப்
பாடவல்ல, பரமன் அடியார்க்கடிமை வழுவா
நாடவல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படுமாறு சொல்லிப்
பாடவல்லார் பரலோகத்திருப்பது பண்டமன்றே

 

திருக்கண்ணார்கோயில்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ்புனல் சூடிப்
பெண்ஆணாய பேரருளாளன் பிரியாத
கண்ணார் கோயில் கை தொழுவோர்கட்கு, இடர்பாவம்
நண்ணாவாகும், நல்வினையாய நணுகும்மே
(2)
கந்தமர் சந்தும், காரகிலும், தண் கதிர்முத்தும்
வந்தமர் தெண்ணீர் மண்ணி வளஞ்சேர் வயல்மண்டிக்
கொந்தலர் சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு
செந்திசைபாடும் சீர்திகழ் கண்ணார் கோயிலே
(3)
பல்லியல் பாணிப் பாரிடமேத்தப் படுகானில்
எல்லிநடஞ்செய் ஈசன் எம்மான்தன் இடமென்பர்
கொல்லையில் முல்லை மல்லிகை மௌவல் கொடிபின்னிக்
கல்லியல்இஞ்சி மஞ்சமர் கண்ணார் கோயிலே
(4)
தருவளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
மருவளர் கோதை அஞ்சஉரித்து, மறைநால்வர்க்கு
உருவளர் ஆலநீழல் அமர்ந்தீங்குரை செய்தார்
கருவளர் கண்ணார் கோயில் அடைந்தோர் கற்றோரே
(5)
மறுமாண் உருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறுமாவலி பால்சென்று உலகெல்லாம் அளவிட்ட
குறுமாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
கறுமா கண்டன் மேயது கண்ணார் கோயிலே
(6)
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத், தேவர்க்கமுதீந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனைக், கண்ணார் திகழ்கோயில் கனிதன்னை
நண்ண வல்லோர்கட்கில்லை நமன்பால் நடலையே
(7)
முன்னொரு காலத்து இந்திரனுற்ற முனிசாபம்
பின்னொரு நாள்அவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்
தன்னருளால் கண்ணாயிரம் ஈந்தோன் சார்பென்பர்
கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே
(8)
பெருக்கெண்ணாத பேதைஅரக்கன் வரைக்கீழால்
நெருக்குண்ணாத் தன்னீள் கழல் நெஞ்சில் நினைந்தேத்த
முருக்குண்ணாதோர் மொய்கதிர் வாள்தேர் முன்ஈந்த
திருக்கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே
(9)
செங்கமலப்போதில் திகழ் செல்வன், திருமாலும்
அங்கமலக்கண் நோக்கரும் வண்ணத் தழலானான்
தங்கமலக் கண்ணார் திகழ் கோயில் தமதுள்ளம்
அங்கமலத்தோடேத்திட அண்டத்தமர்வாரே
(10)
தாறிடு பெண்ணைத் தட்டுடையாரும், தாமுண்ணும்
சோறுடையார் சொல் தேறல்மின், வெண்ணூல்சேர் மார்பன்
ஏறுடையன், பரன், என்பணிவான், நீள் சடைமேலோர்
ஆறுடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே
(11)
காமரு கண்ணார் கோயில்உளானைக், கடல்சூழ்ந்த
பூமரு சோலைப் பொன்னியல் மாடப் புகலிக்கோன்
நாமரு தொன்மைத் தன்மையுண் ஞானசம்பந்தன்
பாமருபாடல் பத்தும் வல்லார் மேல் பழிபோமே

 

திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (4):

<– திருவையாறு

(1)
திருத்திகழ் மலைச் சிறுமியோடு மிகுதேசர்
உருத்திகழ் எழில்கயிலை வெற்பில் உறைதற்கே
விருப்புடைய அற்புதர் இருக்கும் இடம், ஏரார்
மருத்திகழ் பொழில்குலவு வண் திருவையாறே
(2)
கந்தமர உந்துபுகை உந்தலில் விளக்கேர்
இந்திரன் உணர்ந்துபணி எந்தைஇடம், எங்கும்
சந்தமலியும் தருமிடைந்த பொழில் சார
வந்தவளி நந்தணவு வண் திருவையாறே
(3)
கட்டுவடம் எட்டுமுறு வட்ட முழவத்தில்
கொட்டு கரமிட்டஒலி தட்டும்வகை நந்திக்கு
இட்டமிக நட்டமவை இட்டவர் இடம், சீர்
வட்டமதிலுள் திகழும் வண் திருவையாறே
(4)
நண்ணியொர் வடத்தின்நிழல் நால்வர் முனிவர்க்கன்று
எண்ணிலி மறைப்பொருள் விரித்தவர் இடம், சீர்த்
தண்ணின்மலி சந்தகிலொடு உந்திவரு பொன்னி
மண்ணின்மிசை வந்தணவு வண் திருவையாறே
(5)
வென்றிமிகு தாருகனது ஆருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவ
நின்று நடமாடியிட நீடுமலர் மேலால்
மன்றல் மலியும் பொழில்கொள் வண் திருவையாறே
(6)
பூதமொடு பேய்கள்பல பாட நடமாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதையர் இடும்பலி கொளும் பரன்இடம், பூ
மாதவி மணங்கமழும் வண் திருவையாறே
(7)
துன்னுகுழல் மங்கைஉமை நங்கை சுளிவெய்தப்
பின்னொரு தவம் செய்துழல் பிஞ்ஞகனும் அங்கே
என்னசதி என்றுரைசெய் அங்கணன் இடம், சீர்
மன்னு கொடையாளர் பயில்வண் திருவையாறே
(8)
இரக்கமில் குணத்தொடு உலகெங்கும் நலி வெம்போர்
அரக்கன் முடியத்தலை புயத்தொடும் அடங்கத்
துரக்க விரலில் சிறிது வைத்தவர் இடம், சீர்
வரக் கருணையாளர் பயில் வண் திருவையாறே
(9)
பருத்துருவதாகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்
பெருத்துருவதாய் உலகிடந்தவனும் என்றும்
கருத்துருவொணா வகை நிமிர்ந்தவன் இடம், கார்
வருத்துவகை தீர்கொள் பொழில் வண் திருவையாறே
(10)
பாக்கியமது ஒன்றுமில் சமண்பதகர் புத்தர்
சாக்கியர்கள் என்றுடல் பொதிந்து திரிவார் தம்
நோக்கரிய தத்துவன் இடம், படியின் மேலால்
மாக்கமுற நீடுபொழில் வண் திருவையாறே
(11)
வாசமலியும் பொழில்கொள் வண் திருவையாற்றுள்
ஈசனை எழில்புகலி மன்னவன் மெய்ஞ்ஞானப்
பூசுரன் உரைத்த தமிழ்பத்தும் இவைவல்லார்
நேசமலி பத்தரவர் நின்மலன் அடிக்கே

 

திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருவையாறு

(1)
பணிந்தவர் அருவினை பற்றறுத்தருள் செயத்
துணிந்தவன், தோலொடு நூல்துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேரெழில்ஆமை கொண்டு
அணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(2)
கீர்த்தி மிக்கவன், நகர் கிளரொளியுடன் அடப்
பார்த்தவன், பனிமதி படர்சடை வைத்துப்
போர்த்தவன் கரியுரி, புலியதள் அரவரை
ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(3)
வரிந்த வெஞ்சிலை பிடித்தவுணர்தம் வளநகர்
எரிந்தற எய்தவன், எழில்திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள
அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(4)
வாய்ந்த வல்லவுணர் தம் வளநகர் எரியிடை
மாய்ந்தற எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்தெழு சடையினன், தொல்மறை ஆறங்கம்
ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(5)
வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு
தேனமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்
மானன மென்விழி மங்கையொர் பாகமும்
ஆனவன் வளநகர்  அந்தண் ஐயாறே
(6)
முன்பனை, முனிவரோடமரர்கள் அடிதொழும்
இன்பனை, இணையில இறைவனை, எழில்திகழ்
என்பொனை, ஏதமில் வேதியர் தாந்தொழும்
அன்பன வளநகர்  அந்தண் ஐயாறே
(7)
வன்திறல் அவுணர்தம் வளநகர் எரியிடை
வெந்தற எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்தமர் மெல்விரல் பாகமதாகி தன்
அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே
(8)
விடைத்த வல்லரக்கன் நல்வெற்பினை எடுத்தலும்
அடித்தலத்தால் இறைஊன்றி, மற்றுஅவனது
முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை
அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே
(9)
விண்ணவர் தம்மொடு வெங்கதிரோன் நல்
எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபடக்
கண்ணனும் பிரமனும் காண்பரிதாகிய
அண்ணல்தன் வளநகர்  அந்தண் ஐயாறே
(10)
மருளுடை மனத்து வன்சமணர்கள், மாசறா
இருளுடை இணைத் துவர்ப் போர்வையினார்களும்
தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா
அருளுடை அடிகள்தம் அந்தண் ஐயாறே
(11)
நலமலி ஞானசம்பந்தன் தின்தமிழ்
அலைமலி புனல்மல்கும் அந்தண் ஐயாற்றினைக்
கலைமலி தமிழிவை கற்றுவல்லார் மிக
நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே

 

திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவையாறு

(1)
கலையார் மதியோடு உரநீரும்
நிலையார் சடையார் இடமாகும்
மலையாரமும் மாமணி சந்தோடு
அலையார் புனல்சேரும் ஐயாறே
(2)
மதியொன்றிய கொன்றை வடத்தான்
மதியொன்ற உதைத்தவர் வாழ்வு
மதியின்னொடு சேர் கொடிமாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே
(3)
கொக்கின் இறகின்னொடு வன்னி
புக்க சடையார்க்கிடமாகும்
திக்கின்இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையார் அது ஐயாறே
(4)
சிறை கொண்ட புரமவை சிந்தக்
கறை கொண்டவர் காதல்செய் கோயில்
மறை கொண்ட நல்வானவர் தம்மில்
அறையும் ஒலிசேரும் ஐயாறே
(5)
உமையாள் ஒருபாகமதாகச்
சமைவார் அவர் சார்விடமாகும்
அமையார் உடல் சோர்தர முத்தம்
அமையா வரும் அந்தண் ஐயாறே
(6)
தலையில் தொடை மாலை அணிந்து
கலை கொண்டதொர் கையினர் சேர்வாம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர்கொண்டு வணங்கும் ஐயாறே
(7)
வரமொன்றிய மாமலரோன் தன்
சிரமொன்றை அறுத்தவர் சேர்வாம்
வரை நின்றிழிவார் தருபொன்னி
அரவம் கொடுசேரும் ஐயாறே
(8)
வரை ஒன்றதெடுத்த அரக்கன்
சிரமங்கம் நெரித்தவர் சேர்வாம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே
(9)
சங்கக் கயனும் அறியாமைப்
பொங்கும் சுடரானவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கெதிர் காட்டும் ஐயாறே
(10)
துவராடையர் தோல் உடையார்கள்
கவர்வாய் மொழி காதல் செய்யாதே
தவ ராசர்கள் தாமரையானோடு
அவர்தாம்அணை அந்தண் ஐயாறே
(11)
கலையார் கலிக்காழியர் மன்னன்
நலமார்தரு ஞான சம்பந்தன்
அலையார் புனல்சூழும் ஐயாற்றைச்
சொலுமாலை வல்லார் துயர் வீடே

 

திருவையாறு – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருவையாறு

 

(1)
புலனைந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கி, அறிவழிந்திட்டைம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென்றருள் செய்வான் அமரும் கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன்றஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவையாறே
(2)
விடலேறு படநாகம் அரைக்கசைத்து, வெற்பரையன் பாவையோடும்
அடலேறு ஒன்றதேறி, அஞ்சொலீர் பலி என்னும் அடிகள் கோயில்
கடலேறித் திரைமோதிக் காவிரியின் உடன்வந்து கங்குல்வைகித்
திடலேறிச் சுரிசங்கம் செழுமுத்தம் ஈன்றலைக்கும் திருவையாறே
(3)
கங்காளர், கயிலாய மலையாளர், கானப்பேராளர், மங்கை
பங்காளர், திரிசூலப் படையாளர், விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து, கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கிச்
செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே
(4)
ஊன்பாயும் முடைதலை கொண்டூருரின் பலிக்குழல்வார், உமையாள் பங்கர்
தான்பாயும் விடையேறும் சங்கரனார், தழல்உருவர் தங்கும் கோயில்
மான்பாய வயலருகே, மரமேறி மந்திபாய் மடுக்கள் தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல மொட்டலரும் திருவையாறே
(5)
நீரோடு கூவிளமும் நிலாமதியும், வெள்ளெருக்கு நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்கும் கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார் வீதித்
தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலும் திருவையாறே
(6)
வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென்று அரங்கேறிச் சேயிழையார் நடமாடும் திருவையாறே
(7)
நின்றுலா நெடுவிசும்பு நெருக்கிவரு புரமூன்று நீள்வாய் அம்பு
சென்றுலாம்படி தொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாம் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடிவருடச் செழுங்கரும்பு கண்வளரும் திருவையாறே
(8)
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும்
மஞ்சாடு தோள்நெரிய அடர்த்து,அவனுக்கருள் புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியும் திருவையாறே
(9)
மேலோடி விசும்பணவி, வியன்நிலத்தை மிகஅகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடும் திருவையாறே
(10)
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணமொன்றில்லா
மிண்டாடு மிண்டர்உரை கேளாதே, ஆளாமின் மேவித்தொண்டீர்
எண்தோளர் முக்கண்ணர் எம்ஈசர் இறைவர் இனிதமரும் கோயில்
செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்கும் திருவையாறே
(11)
அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையால் இவைபத்தும் இசையுங்கால் ஈசனடி ஏத்துவார்கள்
தன்னிசையோடமருலகில் தவநெறி சென்றெய்துவார் தாழாதன்றே

 

திருக்கடைமுடி:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை அல்லதிங்குலகமேத்தும்
கருத்தவன் வளநகர் கடைமுடியே
(2)
திரைபொரு திருமுடி திங்கள் விம்மும்
அரைபொரு புலியதள் அடிகள்இடம்
திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்
கரைபொரு வளநகர் கடைமுடியே
(3)
ஆலிள மதியினொடரவு கங்கை
கோல வெண்ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே
(4)
கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவன்ஊர்
பையணி அரவொடு மான்மழு வாள்
கைஅணிபவன் இடம் கடைமுடியே
(5)
மறையவன் உலகவன் மாயமவன்
பிறையவன் புனலவன் அனலுமவன்
இறையவன் என உலகேத்தும், கண்டம்
கறையவன் வளநகர் கடைமுடியே
(6)
படஅரவேர் அல்குல் பல்வளைக் கை
மடவரலாளை ஓர் பாகம்வைத்துக்
குடதிசை மதியது சூடுசென்னிக்
கடவுள்தன் வளநகர் கடைமுடியே
(7)
பொடிபுல்கு மார்பினில் புரிபுல்கு நூல்
அடிபுல்கு பைங்கழல் அடிகள்இடம்
கொடிபுல்கு மலரொடு குளிர் சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே
(8)
நோதல் செய்த அரக்கனை நோக்கழியச்
சாதல் செய்தவன், அடி சரண் எனலும்
ஆதரவருள் செய்த அடிகள் அவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே
(9)
அடிமுடி காண்கிலர் ஓரிருவர்
புடைபுல்கி அருள் என்று போற்றிசைப்பச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன்இடம்
கடைமுடி அதனயல் காவிரியே
(10)
மண்ணுதல் பறித்தலும் மாயம்இவை
எண்ணியகால் அவை இன்பமல்ல
ஒண்ணுதல் உமையைஓர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே
(11)
பொன்திகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன
இன்தமிழ் இவைசொல இன்பமாமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page