திருக்கோலக்கா – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கோலக்கா

(1)
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும், கீள்
உடையும் கொண்ட உருவம் என் கொலோ
(2)
பெண்தான் பாகமாகப் பிறைச்சென்னி
கொண்டான், கோலக்காவு கோயிலாக்
கண்டான், பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே
(3)
பூணல் பொறிகொள் அரவம் புன்சடை
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறை வல்லானையே
பேணப் பறையும் பிணிகளானவே
(4)
தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசேர் அங்கையான்
குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே
(5)
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே
(6)
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே
(7)
நிழலார் சோலை நீல வண்டினம்
குழலார் பண்செய் கோலக்கா உளான்
கழலான் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே
(8)
எறியார் கடல்சூழ் இலங்கைக்கோன் தனை
முறியார் தடக்கை அடர்த்த மூர்த்திதன்
குறியார் பண்செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே
(9)
நாற்ற மலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றலணை மேலவனும் காண்கிலாக்
கூற்றம் உதைத்த குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே
(10)
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர்தோய் உருவிலாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவப் பறையும் பாவமே
(11)
நலங்கொள் காழி ஞானசம்பந்தன்
குலங்கொள் கோலக்கா உளானையே
வலங்கொள் பாடல்வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே

 

திருக்குருகாவூர் (வெள்ளடை) – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்குருகாவூர்

(1)
சுண்ண வெண்ணீறணி மார்பில் தோல்புனைந்து
எண்ணரும் பல்கணம் ஏத்த நின்றாடுவர்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனிஎம் பிஞ்ஞகனாரே
(2)
திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமகளோடு உடனாடுதிர், மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளரவு ஆட்டுகந்தீரே
(3)
அடையலர் தொல்நகர் மூன்றெரித்து, அன்ன
நடை மட மங்கையொர் பாகம் நயந்து
விடை உகந்தேறுதிர், வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கரனீரே
(4)
வளங்கிளர் கங்கை மடவரலோடு
களம்பட ஆடுதிர் காடரங்காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை எம்பெருமானே
(5)
சுரிகுழல் நல்ல துடியிடையோடு
பொரிபுல்கு காட்டிடை ஆடுதிர், பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே
(6)
காவியங்கண் மடவாளொடும் காட்டிடைத்
தீயகல் ஏந்தி நின்றாடுதிர், தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டுகந்தீரே

 

திருக்குருகாவூர் (வெள்ளடை) – சுந்தரர் தேவாரம்:

<– திருக்குருகாவூர்

(1)
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே என்றுன்னைப் பேசுவார் பிறரெல்லாம்
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(2)
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
வாவியில் கயல்பாயக் குளத்திடை மடைதோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(3)
பாடுவார் பசிதீர்ப்பாய், பரவுவார் பிணி களைவாய்
ஓடுநன் கலனாக உண் பலிக்குழல்வானே
காடுநல் இடமாகக் கடுஇருள் நடமாடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(4)
வெப்பொடு பிணியெல்லாம் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை
அப்படி அழகாய அணிநடை மடஅன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(5)
வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய்
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ண வெண்ணீற்றானே
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(6)
பண்ணிடைத் தமிழொப்பாய், பழத்தினில் சுவைஒப்பாய்
கண்ணிடை மணியொப்பாய், கடுஇருள் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(7)
போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னலதறியேன் நான்
சாந்தனை வருமேலும் தவிர்த்தென்னை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(8)
மலக்கில் நின்அடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய்
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமர்என்னைக்
கலக்குவான் வந்தாலும் கடுந்துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(9)
படுவிப்பாய் உனக்கேஆள் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோல்உடுத்துழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார்க் கேடிலாப் பொன்னடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீயன்றே
(10)
வளங்கனி பொழில்மல்கு வயல் அணிந்தழகாய
விளங்கொளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளங்கிளை ஆரூரன் வனப்பகைஅவள் அப்பன்
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட்குரையாமே

 

திருவெண்காடு – அப்பர் தேவாரம் (2):

<– திருவெண்காடு

(1)
பண்காட்டிப் படியாய தன் பத்தர்க்குக்
கண்காட்டிக் கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட்டிப் பிறைசென்னி வைத்தான்,திரு
வெண்காட்டை அடைந்துய் மடநெஞ்சமே
(2)
கொள்ளி வெந்தழல் வீசி நின்றாடுவார்
ஒள்ளிய கணஞ்சூழ் உமை பங்கனார்
வெள்ளியன் கரியன், பசுவேறிய
தெள்ளியன் திருவெண்காடுஅடை நெஞ்சே
(3)
ஊனோக்கு இன்பம் வேண்டி உழலாதே
வானோக்கும் வழியாவது நின்மினோ
தானோக்கும் தன்அடியவர் நாவினில்
தேனோக்கும் திருவெண்காடுஅடை நெஞ்சே
(4)
பருவெண் கோட்டுப் பைங்கண் மதவேழத்தின்
உருவம் காட்டிநின்றான் உமைஅஞ்சவே
பெருவெண்காட்டிறைவன் உறையும்இடம்
திருவெண்காடு அடைந்துய் மடநெஞ்சமே
(5)
பற்றவன், கங்கை பாம்பு மதியுடன்
உற்றவன், சடையான், உயர் ஞானங்கள்
கற்றவன், கயவர் புரமோர் அம்பால்
செற்றவன் திருவெண்காடுஅடை நெஞ்சே
(6)
கூடினான் உமையாள் ஒரு பாகமாய்
வேடனாய் விசயற்கருள் செய்தவன்
சேடனார் சிவனார் சிந்தைமேய !வெண்
காடனார் அடியேஅடை நெஞ்சமே
(7)
தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடையான், கயவர் புரம்
எரித்தவன், மறை நான்கினோடாறங்கம்
விரித்தவன் உறை வெண்காடுஅடை நெஞ்சே
(8)
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள்
சிட்டன் ஆதிஎன்று சிந்தை செய்யவே
நட்ட மூர்த்தி, ஞானச்சுடராய் நின்ற
அட்டமூர்த்தி தன் வெண்காடுஅடை நெஞ்சே
(9)
ஏன வேடத்தினானும் பிரமனும்
தான் அவேடமுன் தாழ்ந்தறிகின்றிலா
ஞான வேடன், விசயற்கருள் செயும்
கானவேடன் தன் வெண்காடுஅடை நெஞ்சே
(10)
பாலை ஆடுவர், பன்மறை ஓதுவர்
சேலையாடிய கண் உமை பங்கனார்
வேலையார் விடமுண்ட வெண்காடர்க்கு
மாலையாவது மாண்டவர் அங்கமே
(11)
இராவணஞ்செய மாமதி பற்று, !ஐ
யிராவணம் உடையான் தனை உ ள்குமின்
இராவணன் தனை ஊன்றி அருள்செய்த
இராவணன் திருவெண்காடு அடைமினே

 

திருக்கோலக்கா – சுந்தரர் தேவாரம்:

<– திருக்கோலக்கா

(1)
புற்றில் வாளரவார்த்த பிரானைப்
    பூத நாதனைப், பாதமே தொழுவார்
பற்றுவான் துணை, எனக்கெளி வந்த
    பாவ நாசனை, மேவரியானை
முற்றலார் திரிபுரம் ஒரு மூன்றும்
    பொன்ற வென்றி மால்வரை அரி அம்பாக்
கொற்றவில் அங்கை ஏந்திய கோனைக்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(2)
அங்கம்ஆறும், மாமறைஒரு நான்கும்
    ஆய நம்பனை, வேய்புரை தோளி
தங்கு மாதிரு உருவுடையானைத்
    தழல்மதி சடைமேல் புனைந்தானை
வெங்கண் ஆனையின் ஈருரியானை
    விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்குலாம் பொழில் குரவெறி கமழும்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(3)
பாட்டகத்திசையாகி நின்றானைப்
    பத்தர் சித்தம் பரிவினியானை
நாட்டகத் தேவர் செய்கையுளானை
    நட்டம் ஆடியை, நம்பெருமானைக்
காட்டகத்துறு புலிஉரியானைக்
    கண்ணொர் மூன்றுடை அண்ணலை, அடியேன்
கோட்டகப் புனலார் செழுங்கழனிக்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(4)
ஆத்தம் எந்தனை ஆள் உகந்தானை
    அமரர் நாதனைக், குமரனைப் பயந்த
வார்த் தயங்கிய முலைமட மானை
    வைத்து, வான்மிசைக் கங்கையைக் கரந்த
தீர்த்தனைச், சிவனைச், செழுந்தேனைத்
    தில்லை அம்பலத்துள் நிறைந்தாடும்
கூத்தனைக், குருமாமணி தன்னைக்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(5)
அன்று வந்தெனை அகலிடத்தவர் முன்
    ஆளதாக என்றாவணம் காட்டி
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த
    நித்திலத்திரள் தொத்தினை, முத்திக்கு
ஒன்றினான் தனை, உம்பர் பிரானை
    உயரும் வல்லரணம் கெடச் சீறும்
குன்ற வில்லியை, மெல்லியலுடனே
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(6)
காற்றுத் தீப்புனலாகி நின்றானைக்
    கடவுளைக், கொடு மால் விடையானை
நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை
    நிரம்பு பல்கலையின் பொருளாலே
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப்
    போக்குவான் உயிர் நீக்கிடத், தாளால்
கூற்றைத் தீங்குசெய் குரை கழலானைக்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(7)
அன்று அயன்சிரம் அரிந்துஅதில் பலிகொண்டு
    அமரருக்கருள் வெளிப்படுத்தானைத்
துன்று பைங்கழலில் சிலம்பார்த்த
    சோதியைச், சுடர்போல் ஒளியானை
மின்தயங்கிய இடைமட மங்கை
    மேவும் ஈசனை, வாசமா முடிமேல்
கொன்றையஞ் சடைக் குழகனை, அழகார்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(8)
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்
    ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன்
தாளம் ஈந்தவன், பாடலுக்கிரங்கும்
    தன்மையாளனை, என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்றாடும்
    அங்கணன் தனை, எண்கணம் இறைஞ்சும்
கோளிலிப் பெருங்கோயில் உளானைக்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(9)
அரக்கன் ஆற்றலை அழித்துஅவன் பாட்டுக்கு
    அன்றிரங்கிய வென்றியினானைப்
பரக்கும் பாரளித்து, உண்டுகந்தவர்கள்
    பரவியும் பணிதற்கு அரியானைச்
சிரக்கண் வாய்செவி மூக்குயர் காயம்
    ஆகித் தீவினை தீர்த்த எம்மானைக்
குரக்கினம் குதிகொண்டு கள்வயல் சூழ்
    கோலக்காவினில் கண்டு கொண்டேனே
(10)
கோடரம் பயில் சடையுடைக் கரும்பைக்
    கோலக்காவுள் எம்மானை, மெய்ம்மானப்
பாடரங்குடி அடியவர் விரும்பப்
    பயிலும் நாவல்ஆரூரன் வன்தொண்டன்
நாடிரங்கி முன்அறியும் அந்நெறியால்
    நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்
காடரங்கென நடம்நவின்றான் பால்
    கதியும் எய்துவர், பதியவர்க்கதுவே

 

திருநாரையூர் – அப்பர் தேவாரம் (2):

<– திருநாரையூர்

(1)
சொல்லானைப் பொருளானைச் சுருதியானைச்
    சுடராழி நெடுமாலுக்கருள் செய்தானை
அல்லானைப் பகலானை, அரியான் தன்னை
    அடியார்கட்கெளியானை, அரண் மூன்றெய்த
வில்லானைச், சரம் விசயற்கருள் செய்தானை
    வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பியேத்தும்
நல்லானைத், தீயாடு நம்பன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(2)
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப்
    பாரொடுநீர் சுடர்படர் காற்றாயினானை
மஞ்சுண்ட வானாகி, வானம் தன்னில்
    மதியாகி, மதிசடைமேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் தன்னை
    நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க ஓங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக்கமுதீந்தானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(3)
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை
    முடியாதே முதல்நடுவும் முடிவானானைத்
தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னைத்
    திசைமுகன் தன் சிரமொன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடல்ஏறொன்றுடையான் தன்னை
    அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற
நாவானை, நாவினில் நல்லுரை ஆனானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(4)
செம்பொன்னை நன்பவளம் திகழும் முத்தைச்
    செழுமணியைத் தொழுமவர் தம் சித்தத்தானை
வம்பவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி
    மகிழ்ந்தானை, மதிற்கச்சி மன்னுகின்ற
கம்பனை, எங்கயிலாய மலையான் தன்னைக்
    கழுகினொடு காகுத்தன் கருதியேத்தும்
நம்பனை, எம்பெருமானை, நாதன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(5)
புரையுடைய கரியுரிவைப் போர்வையானைப்
    புரிசடைமேல் புனலடைத்த புனிதன் தன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணியானை
    வெண்ணீறு செம்மேனி விரவினானை
வரையுடைய மகள் தவஞ்செய் மணாளன் தன்னை
    வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநல் கொடியுடைய நாதன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(6)
பிறவாதும் இறவாதும் பெருகினானைப்
    பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை
    மலையானைக் கடலானை வனத்துளானை
உறவானைப் பகையானை உயிரானானை
    உள்ளானைப் புறத்தானை ஓசையானை
நறவாரும் பூங்கொன்றை சூடினானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(7)
தக்கனது வேள்விகெடச் சாடினானைத்
    தலைகலனாப் பலியேற்ற தலைவன் தன்னைக்
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானைக்
    கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
    அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன் தன்னை
நக்கனை அக்கரையானை நள்ளாற்றானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(8)
அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் தன்னை
    அந்தகனுக்கு அந்தகனை, அளக்கலாகா
எரிபுரியும் இலிங்க புராணத்துளானை
    எண்ணாகிப் பண்ணார் எழுத்தானானைத்
திரிபுரம் செற்றொரு மூவர்க்கருள் செய்தானைச்
    சிலந்திக்கும் அரசளித்த செல்வன் தன்னை
நரிவிரவு காட்டகத்தில் ஆடலானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(9)
ஆலாலம் மிடற்றணியா அடக்கினானை
    ஆலதன்கீழ் அறம் நால்வர்க்கருள் செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமுமாகிப்
    பைங்கரும்பாய் அங்கருந்தும் சுவையானானை
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
    வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கிறைவன் ஆயினானை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே
(10)
மீளாத ஆளென்னை உடையான் தன்னை
    வெளிசெய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்குயிரும் வைத்து
    வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதி வரையெடுத்த தூர்த்தன்
    தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் தன்னை
    நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page