சீகாழி – சம்பந்தர் தேவாரம் (7):

(1)
அரனை உள்குவீர், பிரமன்ஊருள் எம்
பரனையே மனம் பரவி உய்ம்மினே
(2)
காண உள்குவீர், வேணு நற்புரத்
தாணுவின்கழல் பேணி உய்ம்மினே
(3)
நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்
ஆதி பாதமே ஓதிஉய்ம்மினே
(4)
அங்க மாதுசேர் பங்கம் ஆயவன்
வெங்குரு மன்னும் எங்கள் ஈசனே
(5)
வாணிலாச் சடைத் தோணி வண்புரத்து
ஆணி நற்பொனைக் காணுமின்களே
(6)
பாந்தளார் சடைப் பூந்தராய் மன்னும்
ஏந்து கொங்கையாள் வேந்தன் என்பரே
(7)
கரிய கண்டனைச் சிரபுரத்துள்எம்
அரசை நாள்தொறும் பரவி உய்ம்மினே
(8)
நறவமார் பொழில் புறவ நற்பதி
இறைவன் நாமமே மறவல் நெஞ்சமே
(9)
தென்றில் அரக்கனைக் குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா நின்று நினைமினே
(10)
அயனும் மாலுமாய் முயலும் காழியான்
பெயல்வை எய்தி நின்றியலும் உள்ளமே
(11)
தேரர் அமணரைச் சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல் நினைந்தோரும் உள்ளமே
(12)
தொழு மனத்தவர் கழுமலத்துறை
பழுதில் சம்பந்தன் மொழிகள் பத்துமே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (8):

(1)
கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார் அல்லோம் நாமே
(2)
கொன்றை சூடி நின்ற தேவை
அன்றியொன்று நன்றிலோமே
(3)
கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்
சொல்லாதாரோடல்லோம் நாமே
(4)
கூற்றுதைத்த நீற்றினானைப்
போற்றுவார்கள் தோற்றினாரே
(5)
காட்டுளாடும் பாட்டுளானை
நாட்டுளாரும் தேட்டுளாரே
(6)
தக்கன் வேள்விப் பொக்கம் தீர்த்த
மிக்க தேவர் பக்கத்தோமே
(7)
பெண்ஆணாய விண்ணோர் கோவை
நண்ணாதாரை  எண்ணோ நாமே
(8)
தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை
ஆத்தமாக ஏத்தினோமே
(9)
பூவினானும் தாவினானும்
நாவினாலும் நோவினாரே
(10)
மொட்டமணர் கட்டர் தேரர்
பிட்டர் சொல்லை விட்டுளோமே
(11)
அந்தண் காழிப் பந்தன் சொல்லைச்
சிந்தை செய்வோர் உய்ந்துளோரே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (9):

<– சீகாழி

ஓருருவாயினை மான்ஆங்காரத்து
ஈரியல்பாய், ஒரு விண்முதல் பூதலம்
ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்
படைத்தளித்தழிப்ப மும்மூர்த்திகளாயினை
இருவரோடொருவனாகி நின்றனை
ஓரால்நீழல் ஒண்கழல் இரண்டும்
முப்பொழுதேத்திய நால்வர்க்கு ஒளிநெறி
காட்டினை, நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி அரவமோடொரு மதி சூடினை
ஒருதாள் ஈரயில் மூவிலைச் சூலம்
நாற்கால் மான்மறி ஐந்தலை அரவம்
ஏந்தினை, காய்ந்த நால்வாய் மும்மதத்து
இருகோட்டொரு கரி ஈடழித்துரித்தனை
ஒருதனு இருகால் வளைய வாங்கி
முப்புரத்தோடு நானிலம் அஞ்சக்
கொன்று தலத்துற அவுணரை அறுத்தனை
ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம்
முக்குணம் இருவளி ஒருங்கிய வானோர்
ஏத்த நின்றனை, ஒருங்கிய மனத்தோடு
இருபிறப்போர்ந்து முப்பொழுது குறைமுடித்து
நான்மறை ஓதி ஐவகை வேள்வி
அமைத்து ஆறங்க முதலெழுத்தோதி
வரன்முறை பயின்று எழுவான்தனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை
இகலியமைந்துணர் புகலி அமர்ந்தனை
பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை
பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த
தோணிபுரத்துறைந்தனை, தொலையா இருநிதி
வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்துறைந்தனை
ஒருமலை எடுத்த இருதிறல் அரக்கன்
விறல் கெடுத்தருளினை, புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்
பண்பொடு நின்றனை, சண்பை அமர்ந்தனை
ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்
ஊழியும் உணராக் காழி அமர்ந்தனை
எச்சன் ஏழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்
மறைமுதல் நான்கும்
மூன்று காலமும் தோன்ற நின்றனை
இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்
அனைய தன்மையை ஆதலின் நின்னை
நினைய வல்லவர் இல்லை நீள்நிலத்தே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (10):

<– சீகாழி

(1)
வரமதே கொளாதுரமதே செயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்து
அரன்நாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே
(2)
சேணுலாமதில் வேணு மண்ணுளோர் காண மன்றலார் வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவர் ஆணிஒத்தவரே
(3)
அகலமார்தரைப் புகலு நான்மறைக்கிகலியோர்கள் வாழ் புகலிமாநகர்ப்
பகல்செய்வோன் எதிர்ச் சகலசேகரன் அகிலநாயகனே
(4)
துங்கமாகரி பங்கமாஅடும் செங்கையான்திகழ் வெங்குருத் திகழ்
அங்கணான்அடி தங்கையால்தொழத் தங்குமோ வினையே
(5)
காணிஒண்பொருள் கற்றவர்க்கீகை உடைமையோரவர் காதல்செய்யுநற்
தோணி வண்புரத் தாணிஎன்பவர் தூமதியினரே
(6)
ஏந்தராஎதிர் வாய்ந்த நுண்ணிடைப் பூந்தண்ஓதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேல் சேர்ந்திரா வினையே
(7)
சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன் துஞ்சவெஞ்சினக் காளியைத் தரும்
சிரபுரத்துளான் என்ன வல்லவர் சித்திபெற்றவரே
(8)
உறவுமாகி அற்றவர்களுக்குமா நெதிகொடுத்துநீள் புவிஇலங்குசீர்ப்
புறவமா நகர்க்கிறைவனே எனத் தெறகிலா வினையே
(9)
பண்புசேர்இலங்கைக்கு நாதனன் முடிகள் பத்தையும் கெடநெரித்தவன்
சண்பைஆதியைத் தொழுமவர்களைச் சாதியா வினையே
(10)
ஆழிஅங்கையில் கொண்ட மாலயன் அறிவொணாததோர் வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுள்நாமமே கற்றல் நற்தவமே
(11)
விச்சைஒன்றிலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சை மாநகர்க்கன்பு செய்பவர் குணங்கள் கூறுமினே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (11):

<– சீகாழி

(1)
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்றதாகிய நம்பன் தானே
(2)
புள்ளினம் புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்னெறி
மூலமாய முதலவன் தானே
(3)
வேந்தராய் உலகாள விருப்புறின்
பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல்
நீதியால் நினைந்தேத்தி உள்கிடச்
சாதியா வினையான தானே
(4)
பூசுரர் தொழுதேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்துவார் சடைஎம் இறையே
(5)
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல் வினைஓட வீடுசெய்
எந்தையாய எம்ஈசன் தானே
(6)
பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம், நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே
(7)
புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றி வாழும் பரமனைப் பாடிடப்
பாவமாயின தீரப் பணித்திடும்
சேவதேறிய செல்வன் தானே
(8)
போதகத்துரி போர்த்தவன் பூந்தராய்
காதலித்தான், கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞகனே
(9)
மத்தம் ஆன இருவர் மருவொணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆளதாக அடைந்துய்ம்மின், நும்வினை
மாளுமாறருள் செய்யும் தானே
(10)
பொருத்தமில் சமண் சாக்கியப் பொய்கடிந்து
இருத்தல் செய்தபிரான், இமையோர்தொழப்
பூந்தராய் நகர் கோயில் கொண்டு, கை
ஏந்து மான்மறி எம்இறையே
(11)
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
அந்தம்இல் எம் அடிகளை !ஞானசம்
பந்தன் மாலை கொண்டேத்தி வாழும், நும்
பந்தமார் வினை பாறிடுமே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (12):

(1)
இயலிசை எனும் பொருளின் திறமாம்
புயலன மிடறுடைப் புண்ணியனே
கயலன வரிநெடுங் கண்ணியொடும்
அயல்உலகடி தொழ அமர்ந்தவனே
கலனாவது வெண்தலை, கடிபொழில் புகலிதன்னுள்
நிலன் நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே
(2)
நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
இலையுறு மலர்கள் கொண்டேத்துதும் யாம்
மலையினில் அரிவையை வெருவ வன்தோல்
அலைவரு மதகரி உரித்தவனே
இமையோர்கள் நின்தாள் தொழ, எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை, உயர் திருவடி இணையே
(3)
பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்தில்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையே அடியார்தொழ, நெடுமதில் புகலிந்நகர்
தனையேஇட மேவினை, தவநெறி அருள்எமக்கே
(4)
நிழல்திகழ் மழுவினை, யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்பநல்ல
முழவொடும் அருநடம் முயற்றினனே
முடிமேல் மதிசூடினை, முருகமர் பொழிற்புகலி
அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே
(5)
கருமையின் ஒளிர்கடல் நஞ்சம் உண்ட
உரிமையின் உலகுயிர் அளித்த நிந்தன்
பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்
அருமையில் அளப்பரிதாயவனே
அரவேர் இடையாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள் சேர்தர நாள்தொறும் புவிமிசைப் பொலிந்தவனே
(6)
அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதில் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தா, பரமா, நின்னை விண்ணவர் தொழப் புகலித்
தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே
(7)
அடியவர் தொழுதெழ அமரர்ஏத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகலல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியா, புனிதா, புகர்ஏற்றினை, புகலிந்நகர்
நண்ணினாய், கழல்ஏத்திட நண்ணகிலா வினையே
(8)
இரவொடு பகலதாம் எம்மான்உன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென் நடையாளொடும், அதிர்கடல் இலங்கை மன்னை
இனமார்தரு தோளடர்த்திருந்தனை புகலியுளே
(9)
உருகிட உவகை தந்துடலின் உள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனும் பூவுளானும்
பெருகிடும் அருள்எனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாய், இனி நீஎனை ஒண்மலரடி இணைக்கீழ்
வயந்தாங்குற நல்கிடு மதிற் புகலிமனே
(10)
கையினில் உண்பவர், கணிகை நோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடிதொழ விரும்பினனே
வியந்தாய் வெள்ளேற்றினை, விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே
(11)
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவர் அடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை இன்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே

சீகாழி – சம்பந்தர் தேவாரம் (14):

(1)
முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய ஒருத்தர் பழவூர் வினவின், ஞாலம்
துன்னி இமையோர்கள் துதிசெய்து முன்வணங்கும்
சென்னியர் விருப்புறு திருப்புகலியாமே
(2)
வண்திரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை ஆடு பரமன் பதியதென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்திரை கடற்பொலி திருப்புகலியாமே
(3)
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவும் அந்தணன் விருப்பிடமதென்பர்
பூவணவு சோலையிருள் மாலைஎதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலியாமே
(4)
மைதவழு மாமிடறன் மாநடமதாடி
கைவளையினாளொடு கலந்தபதி என்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரர்கள் கூடித்
தெய்வமது இணக்குறு திருப்புகலியாமே
(5)
முன்னம்இரு மூன்றுசமயங்கள் அவையாகிப்
பின்னைஅருள் செய்த பிறையாளன் உறைகோயில்
புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின்ஒளி காட்டச்
செந்நெல் வயலார்தரு திருப்புகலியாமே
(6)
வங்கமலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்தி செய்திருக்குமிடம் என்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலியாமே
(7)
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவையாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தன்இடம் என்பர்
பல்கும் அடியார்கள் படியார இசை பாடிச்
செல்வ மறையோர்உறை திருப்புகலியாமே
(8)
பரப்புறு புகழ்ப் பெருமையாளன், வரை தன்னால்
அரக்கனை அடர்த்தருளும் அண்ணல்இடம் என்பர்
நெருக்குறு கடல்திரைகள் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலியாமே
(9)
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன், இருவர்க்கும்
நேட எரியாகி இரு பாலும் அடிபேணித்
தேட உறையும்நகர் திருப்புகலியாமே
(10)
கற்றமணர் உற்றுலவு தேரர்உரை செய்த
குற்றமொழி கொள்கையதிலாத பெருமான்ஊர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர் புலனைந்தும்
செற்றவர் விருப்புறு திருப்புகலியாமே
(11)
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்த முதலாகி நடுவாய பெருமானைப்
பந்தனுரை செய் தமிழ்கள் பத்தும் இசைகூர
வந்தவனம் ஏத்துமவர் வானம்உடையாரே

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page