தில்லை – அப்பர் தேவாரம் (8):

(1)
மங்குல் மதிதவழும் மாட வீதி
    மயிலாப்பில் உள்ளார், மருகல் உள்ளார்
கொங்கில் கொடுமுடியார், குற்றாலத்தார்
    குடமூக்கில் உள்ளார், போய்க் கொள்ளம்பூதூர்த்
தங்குமிடம் அறியார், சால நாளார்
    தருமபுரத்துள்ளார், தக்களூரார்
பொங்கு வெண்ணீறணிந்து பூதம் சூழப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(2)
நாகம் அரைக்கசைத்த நம்பர் இந்நாள்
    நனிபள்ளி உள்ளார், போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுதெலாம் பாசூர்த் தங்கிப்
    பரிதி நியமத்தார் பன்னிருநாள்
வேதமும் வேள்விப் புகையும் ஓவா
    விரிநீர் மிழலை எழுநாள் தங்கிப்
போகமும் பொய்யாப் பொருளுமானார்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(3)
துறங்காட்டி எல்லாம் விரித்தார் போலும்
    தூமதியும் பாம்பும் உடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும்
    மந்திரமும் தந்திரமும் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன்றால நீழல்
    அறமருளிச் செய்த அரனார் இந்நாள்
புறங்காட்டு எரியாடிப் பூதம் சூழப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(4)
வாரேறு வனமுலையாள் பாகமாக
    மழுவாள் கையேந்தி மயானத்தாடிச்
சீரேறு தண்வயல்சூழ் ஓத வேலித்
    திருவாஞ்சியத்தார், திருநள்ளாற்றார்
காரேறு கண்டத்தார், காமற் காய்ந்த
    கண்விளங்கு நெற்றியார், கடல் நஞ்சுண்டார்
போரேறு தாமேறிப் பூதம் சூழப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(5)
காரார் கமழ்கொன்றைக் கண்ணி சூடிக்
    கபாலம் கையேந்திக் கணங்கள் பாட
ஊரார் இடுபிச்சை கொண்டுழல்லும்
    உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்
சீரார் கழல்வணங்கும் தேவ தேவர்
    திருவாரூர்த் திருமூலட்டான மேயார்
போரார் விடையேறிப் பூதம் சூழப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(6)
காதார் குழையினர் கட்டங்கத்தர்
    கயிலாய மாமலையார் காரோணத்தார்
மூதாயர் மூதாதை இல்லார் போலும்
    முதலும் இறுதியும் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று
    வன் மதவேள் தன்னுடலம் காய்ந்தார் இந்நாள்
போதார் சடைதாழப் பூதம் சூழப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(7)
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும்
    இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும்
    பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
    மறைக்காட்டுறையும் மழுவாள் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதம் சூழப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(8)
குலாவெண் தலைமாலை என்பு பூண்டு
    குளிர்கொன்றைத் தாரணிந்து கொல்லேறேறிக்
கலாவெங் களிற்றுரிவைப் போர்வை மூடிக்
    கையோடனலேந்திக் காடுறைவார்
நிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்
    நிறைவயல்சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலால்வெண் தலையேந்திப் பூதம் சூழப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(9)
சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
    சங்கரரைக் கண்டீரோ கண்டோம் இந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறிப்
    படுதலையில் என்கொலோ ஏந்திக் கொண்டு
வந்திங்கென் வெள்வளையும் தாமும் எல்லா
    மணிஆரூர் நின்றந்தி கொள்ளக் கொள்ளப்
பொன்றீ மணிவிளக்குப் பூதம் பற்றப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(10)
பாதங்கள் நல்லார் பரவியேத்தப்
    பத்திமையால் பணிசெய்யும் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
    எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம்
வேதங்கள் ஓதிஓர் வீணையேந்தி
    விடையொன்று தாமேறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
    புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே
(11)
பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன்றார்த்துப்
    பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்
    தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் இந்நாள்
விட்டிலங்கு சூலமே வெண்ணூல் உண்டே
    ஓதுவதும் வேதமே வீணையுண்டே
கட்டங்கங் கையதே சென்று காணீர்
    கறைசேர் மிடற்றெம் கபாலியார்க்கே

 

தில்லை – சுந்தரர் தேவாரம்:

(1)
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ
வாழுநாளும்
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கிலிடும் போது
தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலும்
கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(2)
பேராது காமத்தில் சென்றார் போலன்றியே
பிரியாது உள்கிச்
சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழும்
திருவினாரை
ஓராது தருமனார் தமர் செக்கிலிடும் போது
தடுத்தாட் கொள்வான்
பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(3)
நரியார்தம் கள்ளத்தால் பக்கான பரிசொழிந்து
நாளும் உள்கித்
திரியாத அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழும்
சிந்தையாரைத்
தரியாது தருமனார் தமர் செக்கிலிடும் போது
தடுத்தாட் கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(4)
கருமையார் தருமனார் தமர் நம்மைக் கட்டியகட்டு
அறுப்பிப்பானை
அருமையாம் தன்னுலகம் தருவானை, மண்ணுலகம்
காவல் பூண்ட
உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை
மறுக்கஞ்செய்யும்
பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(5)
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக்
கண்ணியானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்துகந்து
உலவா இன்பம்
தருவானைத், தருமனார் தமர் செக்கிலிடும் போது
தடுத்தாட் கொள்வான்
பெருமானார் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(6)
உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய்
ஊன் கணோட்டம்
எத்தாலும் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே
நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன், படர்சடையன், பரஞ்சோதி
பாவம் தீர்க்கும்
பித்தாடி, புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(7)
முட்டாத முச்சந்தி மூவாயிரவர்க்கும்
மூர்த்தி என்னப்
பட்டானைப், பத்தராய்ப் பாவிப்பார் பாவமும்
வினையும் போக
விட்டானை, மலைஎடுத்த இராவணனைத் தலைபத்தும்
நெரியக் காலால்
தொட்டானைப், புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(8)
கற்றானும் குழையுமாறு அன்றியே கருதுமா
கருதகிற்றார்க்கு
எற்றாலும் குறைவில்லை என்பர்காண் உள்ளமே
நம்மை நாளும்
செற்றாட்டித் தருமனார் தமர் செக்கிலிடும் போது
தடுத்தாட் கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(9)
நாடுடைய நாதன்பால் நன்றென்றும் செய்மனமே
நம்மை நாளும்
தாடுடைய தருமனார் தமர் செக்கிலிடும் போது
தடுத்தாட் கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும்
மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப்
பெற்றாமன்றே
(10)
பாரூரும் அரவல்குல் உமைநங்கைஅவள் பங்கன்
பைங்கண் ஏற்றன்
ஊரூரன் தருமனார் தமர் செக்கிலிடும்போது
தடுத்தாட் கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில்
அணி காஞ்சிவாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே
பெற்றாமன்றே

 

வாழ்கொளிபுத்தூர் – சம்பந்தர் தேவாரம் (1)

<– வாழ்கொளிபுத்தூர்

 (1)
பொடியுடை மார்பினர், போர் விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடை ஊர்திரிந்து ஐயம் கொண்டு, பலபலகூறி
வடிவுடை வாள்நெடுங்கண் உமை பாகமாயவன் வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றான் அடி காண்போம்
(2)
அரைகெழு கோவண ஆடையின் மேலோர் ஆடரவம் அசைத்து, ஐயம்
புரைகெழு வெண்தலைஏந்திப், போர் விடையேறிப் புகழ
வரைகெழு மங்கையது ஆகமொர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்
விரைகமழ் மாமலர்தூவி விரிசடையான் அடி சேர்வோம்
(3)
பூணெடு நாகம் அசைத்து, அனலாடிப், புன்தலை அங்கையில்ஏந்தி
ஊணிடு பிச்சை, ஊர் ஐயம் உண்டி, என்று பலகூறி
வாள்நெடுங்கண் உமைமங்கையொர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்
தாள்நெடு மாமலரிட்டுத் தலைவன் தாள்நிழல் சார்வோம்
(4)
தாரிடு கொன்றை ஓர்வெண்மதி கங்கை தாழ்சடை மேலவை சூடி
ஊரிடு பிச்சைகொள் செல்வம் உண்டியென்று பலகூறி
வாரிடு மென்முலை மாதொரு பாகமாயவன் வாழ்கொளி புத்தூர்க்
காரிடு மாமலர்தூவிக் கறைமிடற்றான்அடி காண்போம்
(5)
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக், காதிலொர் வெண்குழையோடு
புனமலர் மாலை புனைந்து, ஊர் புகுதியென்றே பலகூறி
வனமுலை மாமலை மங்கையொர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்
இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான்அடி சேர்வோம்
(6)
அளைவளர் நாகம் அசைத்து, அனலாடி, அலர்மிசை அந்தணன்உச்சிக்
களை தலையில் பலிகொள்ளும் கருத்தனே, கள்வனே என்னா
வளையொலி முன்கை மடந்தையொர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்
தளைஅவிழ் மாமலர்தூவித் தலைவன் தாளிணை சார்வோம்
(7)
அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து, வழிதலை அங்கையிலேந்தி
உடலிடு பிச்சையோடு, ஐயம் உண்டியென்று பலகூறி
மடனெடு மாமலர்க் கண்ணியொர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்
தடமலராயின தூவித் தலைவன் தாள்நிழல் சார்வோம்
(8)
உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர் கடகக் கைஅடர்த்து
அயலிடு பிச்சையோடு ஐயமார் தலையென்று அடி போற்றி
வயல்விரிநீல நெடுங்கணி பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சயவிரி மாமலர்தூவித் தாழ்சடையான்அடி சார்வோம்
(9)
கரியவன் நான்முகன் கைதொழுதேத்தக் காணலும் சாரலும் ஆகா
எரியுருவாகி, ஊரை ஐயமிடு பலிஉண்ணி என்றேத்தி
வரிஅரவல்குல் மடந்தையொர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்
விரிமலராயின தூவி விகிர்தன் சேவடி சேர்வோம்
(10)
குண்டமணர் துவர்க் கூறை கண்மெய்யில் கொள்கையினார் புறங்கூற
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகமாயவன் வாழ்கொளிபுத்தூர்த்
தொண்டர்கள் மாமலர்தூவத் தோன்றி நின்றான்அடி சேர்வோம்
(11)
கல்லுயர் மாக்கடல் நின்றுமுழங்கும் கரைபொரு காழியமூதூர்
நல்லுயர் நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன்
வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்ச்
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர்கெடுதல் எளிதாமே

 

வாழ்கொளிபுத்தூர் – சம்பந்தர் தேவாரம் (2)

<– வாழ்கொளிபுத்தூர்

(1)
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவதுடையார்
ஈகையார் கடை நோக்கி இரப்பதும் பலபல உடையார்
தோகை மாமயிலனைய துடியிடை பாகமும் உடையார்
வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூர் உளாரே
(2)
எண்ணில் ஈரமும் உடையார், எத்தனையோர் இவர்அறங்கள்
கண்ணும் ஆயிரமுடையார்,  கையுமொர் ஆயிரமுடையார்
பெண்ணும் ஆயிரமுடையார்,  பெருமையொர் ஆயிரமுடையார்
வண்ணம் ஆயிரமுடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(3)
நொடியொர் ஆயிரமுடையார், நுண்ணியராம் அவர் நோக்கும்
வடிவும் ஆயிரமுடையார், வண்ணமும் ஆயிரமுடையார்
முடியும் ஆயிரமுடையார், மொய் குழலாளையும் உடையார்
வடிவும் ஆயிரமுடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(4)
பஞ்சி நுண்துகிலன்ன பைங்கழல் சேவடி உடையார்
குஞ்சி மேகலை உடையார், கொந்தணி வேல்வலன் உடையார்
அஞ்சும் வென்றவர்க்கணியார், ஆனையின் ஈருரி உடையார்
வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
(5)
பரவுவாரையும் உடையார், பழித்திகழ்வாரையும் உடையார்
விரவுவாரையும் உடையார், வெண்தலைப் பலி கொள்வதுடையார்
அரவம் பூண்பதும் உடையார், ஆயிரம் பேர்மிக உடையார்
வரமும் ஆயிரம்உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
(6)
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமும் உடையார், கோலமும் பலபல உடையார்
கண்டு கோடலும் அரியார், காட்சியும் அரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(7)
மான வாழ்க்கையதுடையார், மலைந்தவர் மதில் பரிசறுத்தார்
தான வாழ்க்கையதுடையார், தவத்தொடு நாம் புகழ்ந்தேத்த
ஞான வாழ்க்கையதுடையார், நள்ளிருள் மகளிர் நின்றேத்த
வான வாழ்க்கையதுடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(8)
ஏழு மூன்றுமொர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி, விருப்பவர் பலபல உடையார்
கேழல் வெண்பிறையன்ன கெழுமணி மிடறு நின்றிலங்க
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே
(9)
வென்றி மாமலரோனும், விரிகடல் துயின்றவன் தானும்
என்றும் ஏத்துகை உடையார், இமையவர் துதிசெய விரும்பி
முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றில் ஆடலதுடையார் வாழ்கொளி புத்தூர் உளாரே
(10)
மண்டை கொண்டுழல் தேரர், மாசுடை மேனி வன்சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளல்மின், திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச், சுண்ணவெண் பொடிஅணிந்தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே
(11)
நலங்கொள் பூம்பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
வலங்கொள் வெண்மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானை
இலங்கு வெண்பிறையானை ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே

வாழ்கொளிபுத்தூர் – சுந்தரர் தேவாரம்

<– வாழ்கொளிபுத்தூர்

(1)
தலைக்கலன் தலை மேல் தரித்தானைத்
   தன்னை என்னை நினைக்கத் தருவானைக்
கொலைக்கை யானையுரி போர்த்துகந்தானைக்
கூற்றுதைத்த குரைசேர் கழலானை
அலைத்த செங்கண் விடை ஏறவல்லானை
ஆணையால் அடியேன் அடி நாயேன்
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர்
மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(2)
படைக்கண் சூலம் பயில வல்லானைப்
   பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானைக்
கடைக்கண் பிச்சைக்கிச்சை காதலித்தானைக்
   காமன் ஆகந்தனைக் கட்டழித்தானைச்
சடைக்கண் கங்கையைத் தாழ வைத்தானைத்
   தண்ணீர் மண்ணிக் கரையானைத், தக்கானை
மடைக்கண் நீலம்மலர் வாழ்கொளிபுத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(3)
வெந்த நீறு மெய் பூசவல்லானை
   வேதமால் விடை ஏறவல்லானை
அந்தம்ஆதி அறிதற்கரியானை
   ஆறலைத்த சடையானை அம்மானைச்
சிந்தை என் தடுமாற்றறுப்பானைத்
   தேவதேவன் என் சொல் முனியாதே
வந்தென் உள்ளம்புகும் வாழ்கொளிபுத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(4)
தடங்கையால்  மலர்தூய்த் தொழுவாரைத்
   தன்னடிக்கே செல்லுமாறு வல்லானைப்
படங்கொள் நாகம்அரை ஆர்த்துகந்தானைப்
   பல்லின் வெள்ளைத்தலை ஊணுடையானை
நடுங்க ஆனையுரி போர்த்துகந்தானை
   நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை
மடந்தை பாகனை வாழ்கொளிபுத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(5)
வளைக்கை முன்கை மலைமங்கை மணாளன்
   மாரனார்உடல் நீறெழச் செற்றுத்
துளைத்த அங்கத்தொடு தூமலர்க் கொன்றை
   தோலும் நூலும் துதைந்த வரை மார்பன்
திளைக்கும் தெவ்வர் திரிபுர மூன்றும்
   அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை, வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(6)
திருவின் நாயகனாகிய மாலுக்கு
   அருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவினானை ஒன்றா அறிவொண்ணா
   மூர்த்தியை, விசயற்கருள் செய்வான்
செருவில்லேந்தி ஓர் கேழற்பின் சென்று
   செங்கண் வேடனாய், என்னொடும் வந்து
மருவினான் தனை, வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(7)
எந்தையை, எந்தை தந்தை பிரானை
   ஏதமாய இடர் தீர்க்க வல்லானை
முந்தையாகிய மூவரின் மிக்க
   மூர்த்தியை, முதல் காண்பரியானைக்
கந்தின் மிக்க கரியின் மருப்போடு
   காரகில் கவரிம்மயிர் மண்ணி
வந்து வந்திழி வாழ்கொளிபுத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(8)
தேனையாடிய கொன்றையினானைத்
   தேவர் கைதொழும் தேவர் பிரானை
ஊனமாயின தீர்க்க வல்லானை
   ஒற்றை ஏற்றனை, நெற்றிக் கண்ணானைக்
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த
   கள்ளப் பிள்ளைக்கும் காண்பரிதாய
வான நாடனை, வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(9)
காளையாகி வரையெடுத்தான் தன்
   கைகள்இற்றவன் மொய்தலையெல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
   மூர்த்தியை, முதல் காண்பரியானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
   செங்கண் மேதிகள் சேடெறிந்தெங்கும்
வாளைபாய் வயல் வாழ்கொளிபுத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(10)
திருந்த நான்மறை பாட வல்லானைத்
   தேவர்க்கும் தெரிதற்கரியானைப்
பொருந்த மால்விடை ஏற வல்லானைப்
   பூதிப்பை புலித்தோல் உடையானை
இருந்துண் தேரரும் நின்றுணும் சமணும்
   ஏச நின்றவன், ஆருயிர்க்கெல்லாம்
மருந்தனான் தனை வாழ்கொளி புத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே
(11)
மெய்யனை, மெய்யில் நின்றுணர்வானை
   மெய்யிலாதவர் தங்களுக்கெல்லாம்
பொய்யனைப், புரம் மூன்றெரித்தானைப்
   புனிதனைப், புலித்தோல் உடையானைச்
செய்யனை, வெளிய திருநீற்றில்
   திகழுமேனியன், மான்மறி ஏந்தும்
மைகொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர்
   மாணிக்கத்தை மறந்தென் நினைக்கேனே

 

புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) – சம்பந்தர் தேவாரம்:

<– புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

(1)
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடிஎம் பெருமானார் உறையும்இடம்
தள்ளாய சம்பாதி சடாயு என்பார் தாமிருவர்
புள்ளானார்க்கரையன் இடம் புள்ளிருக்குவேளூரே
(2)
தையலாள் ஒருபாகம் சடைமேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி ஈடழித்துப்
பொய் சொல்லாதுயிர் போனான் புள்ளிருக்குவேளூரே
(3)
வாசநலம் செய்திமையோர் நாள்தோறும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையும்இடம்
யோசனை போய்ப் பூக்கொணர்ந்தங்கொரு நாளும் ஒழியாமே
பூசனை செய்தினிதிருந்தான் புள்ளிருக்குவேளூரே
(4)
மாகாயம் பெரியதொரு மானுரிதோல் உடையாடை
ஏகாயம் இட்டுகந்த எரியாடி உறையும்இடம்
ஆகாயம் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே
(5)
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே
(6)
திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே
(7)
அத்தியின் ஈருரிமூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போல் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலம் தவம்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்குவேளூரே
(8)
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாளதுடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்குவேளூரே
(9)
வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகல் ஞாலத்தவரோடும்
போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே
(10)
கடுத்துவரும் கங்கைதனைக் கமழ்சடை ஒன்றாடாமே
தடுத்தவர்எம் பெருமானார் தாம்இனிதாய் உறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச் சென்று இராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே
(11)
செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக்கடிமை செய்த புள்ளிருக்கு வேளூரைக்
கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன் சம்பந்தன்சொல்
மடியாது சொல்ல வல்லார்க்கில்லையாம் மறுபிறப்பே

 

புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்) – அப்பர் தேவாரம் (1):

<– புள்ளிருக்கு வேளூர் (வைத்தீஸ்வரன் கோயில்)

(1)
வெள்ளெருக்கரவம் விரவும் சடைப்
புள்ளிருக்குவேளூர் அரன் பொற்கழல்
உள்ளிருக்கும் உணர்ச்சியில்லாதவர்
நள்ளிருப்பர் நரகக் குழியிலே
(2)
மாற்றம் ஒன்றறியீர், மனை வாழ்க்கை போய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேல் புள்ளிருக்குவேளூர்
சீற்றமாயின தேய்ந்தறும் காண்மினே
(3)
அருமறையனை ஆணொடு பெண்ணனைக்
கருவிடம் மிகஉண்ட எம்கண்டனைப்
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவர் உள்ளம் குளிருமே
(4)
தன்னுருவை ஒருவர்க்கறிவொணா
மின்னுருவனை, மேனி வெண்நீற்றனைப்
பொன்னுருவனைப், புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க்கில்லை இடர்களே
(5)
செங்கண் மால் பிரமற்கும் அறிவொணா
அங்கியின் உருவாகி அழல்வதோர்
பொங்கரவனைப் புள்ளிருக்கு வேளூர்
மங்கைபாகனை வாழ்த்த வரும்இன்பே
(6)
குற்றமில்லியைக் கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழலாக்கியைப்
புற்றரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே
(7)
கையினோடு கால் கட்டி உமரெலாம்
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர்
பொய்யிலா அரன் புள்ளிருக்கு வேளூர்
மையுலாவிய கண்டனை வாழ்த்துமே
(8)
உள்ளமுள்கி உகந்து சிவனென்று
மெள்ள உள்க வினைகெடு மெய்ம்மையே
புள்ளினார் பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே
(9)
(10)
அரக்கனார் தலை பத்தும் அழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பினால் தொழுவார் வினை வீடுமே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page