தில்லை – அப்பர் தேவாரம் (1):

(1)
கருநட்ட கண்டனை, அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச், செந்தீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத், தில்லைக்கிறையைச், சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை, வானவர் கோனென்று வாழ்த்துவனே
(2)
ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனமில்லை
கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்தன் திருக்குறிப்பே
(3)
கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பதென்னே
நல்மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளிக் குன்றது போலப் பொலிந்திலங்கி
என்மனமே ஒன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே
(4)
குனித்த புருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே
(5)
வாய்த்தது நந்தமக்கீதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசுபதம்அருள் செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரம் தீவளைத்தான், தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நந்தங் கூழைமையே
(6)
பூத்தன பொற்சடை பொன்போன் மிளிரப், புரிகணங்கள்
ஆர்த்தன, கொட்டி அரித்தன பல்குறள் பூதகணம்
தேத்தென என்றிசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனில் கூத்துவல்லார் உளரோ எந்தன் கோல்வளைக்கே
(7)
முடிகொண்ட மத்தமும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிப்பும்
துடிகொண்ட கையும், துதைந்த வெண்ணீறும், சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும், பாய்புலித் தோலும், என் பாவிநெஞ்சில்
குடிகொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே
(8)
படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சென் நாவில் கொண்டேன்
இடைக்கலம் அல்லேன், எழுபிறப்பும் உனக்காட் செய்கின்றேன்
துடைக்கினும் போகேன், தொழுது வணங்கித் தூநீறணிந்துன்
அடைக்கலம் கண்டாய், அணிதில்லைச் சிற்றம்பலத்தரனே
(9)
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து, புரிசடைகண்
மின்னொத்திலங்கப், பலி தேர்ந்துழலும் விடங்கர் வேடச்
சின்னத்தினான், மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்அத்தன் ஆடல் கண்டின்புற்றதால் இவ்விருநிலமே
(10)
சாட எடுத்தது தக்கன்தன் வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை, நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டதே

 

தில்லை – அப்பர் தேவாரம் (2):

(1)
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினால் பத்தி செய்கேன் என்னைநீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா, தில்லை அம்பலத்தாடுகின்ற
அத்தா, உன்ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே
(2)
கருத்தனாய்ப் பாட மாட்டேன், காம்பன தோளி பங்கா
ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுரு உடைய சோதீ
திருத்தமாம் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்த நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே
(3)
கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில்
நாட்டினேன் நிந்தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டினீர் வாளை பாயும் மல்கு சிற்றம்பலத்தே
கூட்டமாம் குவிமுலையாள் கூடநீ ஆடுமாறே
(4)
சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை அடிமை செய்ய
எந்தைநீ அருளிச் செய்யா யாதுநான் செய்வதென்னே
செந்தியார் வேள்விஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடியிணை அலசும் கொல்லோ
(5)
கண்டவா திரிந்து நாளுன் கருத்தினால் நிந்தன் பாதம்
கொண்டிருந்தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பினாலே
வண்டு பண்பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண் திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே
(6)
பார்த்திருந்தடியனேனான் பரவுவன் பாடியாடி
மூர்த்தியே என்பன் உன்னை, மூவரின் முதல்வன் என்பன்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய், தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தாஉன் கூத்துக் காண்பான், கூடநான் வந்தவாறே
(7)
பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய
ஐயநீ அருளிச் செய்யா ஆதியே ஆதி மூர்த்தீ
வையகந்தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பையநுன் ஆடல் காண்பான் பரம நான் வந்தவாறே
(8)
மனத்தினார் திகைத்து நாளும் மாண்பலா நெறிகள் மேலே
கனைப்பரால் என் செய்கேனோ கறையணி கண்டத்தானே
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அனைத்துநின் இலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே
(9)
நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ வானவர் தலைவனேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அஞ்சொலாள் காண நின்று அழகநீ ஆடுமாறே
(10)
மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும்
விண்ணுண்ட திருவுருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும் பரமநீ ஆடுமாறே

 

தில்லை – அப்பர் தேவாரம் (3):

(1)
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும்இப்பூமிசை
என்னம் பாலிக்குமாறு கண்டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே
(2)
அரும்பற்றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற்றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற்றப் புலியூர்எம் பிரானையே
(3)
அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டுநீர்
எரிச்சுற்றக் கிடந்தார் என்றயலவர்
சிரிச்சுற்றுப் பல பேசப்படா முனம்
திருச்சிற்றம்பலம் சென்றடைந்துய்ம்மினே
(4)
அல்லல் என்செயும், அருவினை என்செயும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செயும்
தில்லை மாநகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லையில்லதோர் அடிமை பூண்டேனுக்கே
(5)
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான்நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான்நிலாவி இருக்கவும் வைப்பரே
(6)
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலத்துறை
சிட்டன் சேவடி கைதொழச் செல்லும்அச்
சிட்டர் பால்அணுகான் செறுகாலனே
(7)
ஒருத்தனார் உலகங்கட்கொரு சுடர்
திருத்தனார், தில்லைச் சிற்றம்பலவனார்
விருத்தனார், இளையார், விடமுண்டஎம்
அருத்தனார், அடியாரை அறிவரே
(8)
விண் நிறைந்ததோர் வெவ்வழலின்உரு
எண்நிறைந்த இருவர்க்கறிவொணாக்
கண்நிறைந்த கடிபொழில் அம்பலத்து
உள்நிறைந்து நின்றாடும் ஒருவனே
(9)
வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லை வட்டந்திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்தோடுதல் உண்மையே
(10)
நாடி நாரணன் நான்முகன் என்றிவர்
தேடியும் திரிந்தும் காணவல்லரோ
மாட மாளிகைசூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதமென் நெஞ்சுள் இருக்கவே
(11)
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன், திருமலை
அதிர ஆர்த்தெடுத்தான் முடி பத்திற
மிதிகொள் சேவடி சென்றடைந்துய்ம்மினே

 

தில்லை – அப்பர் தேவாரம் (4):

(1)
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ
(2)
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை, முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக், கொடியேன் மறந்து உய்வனோ
(3)
கட்டும் பாம்பும் கபாலங்கை மான்மறி
இட்டமாயிடு காட்டு எரியாடுவான்
சிட்டர் வாழ்தில்லை அம்பலக் கூத்தனை
எட்டனைப் பொழுதும் மறந்து உய்வனோ
(4)
மாணி பால் கறந்தாட்டி வழிபட
நீள்உலகெலாம் ஆளக் கொடுத்தஎன்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ
(5)
பித்தனைப், பெரும் காடரங்கா உடை
முத்தனை, முளை வெண்மதி சூடியைச்
சித்தனைச், செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை, அடியேன் மறந்து உய்வனோ
(6)
நீதியை, நிறைவை, மறை நான்குடன்
ஓதியை, ஒருவர்க்கும் அறிவொணாச்
சோதியைச், சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ
(7)
மைகொள் கண்டன், எண்தோளன், முக்கண்ணினன்
பைகொள் பாம்பரை ஆர்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்பலத்தெங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ
(8)
முழுதும் வானுலகத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ
(9)
காருலா மலர்க் கொன்றையந்தாரனை
வாருலாமுலை மங்கை மணாளனைத்
தேருலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ
(10)
ஓங்கு மால்வரை ஏந்தலுற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கிலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ

 

தில்லை – அப்பர் தேவாரம் (5):

(1)
அரியானை, அந்தணர்தம் சிந்தையானை
    அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனைத், தேனைப் பாலைத்
    திகழொளியைத், தேவர்கள் தங்கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(2)
கற்றானைக், கங்கைவார் சடையான் தன்னைக்
    காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
    ஆரூரும் புகுவானை அறிந்தோமன்றே
மற்றாரும் தன்னொப்பார் இல்லாதானை
    வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(3)
கருமானின் உரிஅதளே உடையா வீக்கிக்
    கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித்தாட
    வளர்மதியம் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாள்முகத்தாள் அமர்ந்து காண
    அமரர்கணம் முடிவணங்க ஆடுகின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(4)
அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
    அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா
மருந்து அமரர்க்கருள் புரிந்த மைந்தன் தன்னை
    மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையும் திசைகளெட்டும்
    திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவுமாய
பெருந்தகையைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(5)
அருந்துணையை, அடியார்தம் அல்லல் தீர்க்கும்
    அருமருந்தை, அகல் ஞாலத்தகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்றும் விட்டு
    வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப், போக மாற்றிப்
    பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்கென்றும்
பெருந்துணையைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(6)
கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
    கனவயிரக் குன்றனைய காட்சியானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
    அருமறையோடாறங்கம் ஆயினானைச்
சுரும்பமரும் கடிபொழில்கள்சூழ் தென்ஆரூர்ச்
    சுடர்க்கொழுந்தைத், துளக்கில்லா விளக்கை, மிக்க
பெரும்பொருளைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(7)
வரும்பயனை, எழுநரம்பின் ஓசையானை
    வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயஞ்செய் அவுணர்புரம் எரியக் கோத்த
    அம்மானை, அலைகடல் நஞ்சயின்றான் தன்னைச்
சுரும்பமரும் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
    துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(8)
காரானை ஈருரிவைப் போர்வையானைக்
    காமரு பூங்கச்சி ஏகம்பன் தன்னை
ஆரேனும் அடியவர்கட்கணியான் தன்னை
    அமரர்களுக்கறிவரிய அளவிலானைப்
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
    பயில்கின்ற பரஞ்சுடரைப், பரனை, எண்ணில்
பேரானைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(9)
முற்றாத பால்மதியம் சூடினானை
    மூவுலகும் தானாய முதல்வன் தன்னைச்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்
    திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்
குற்றாலத்தமர்ந்துறையும் குழகன் தன்னைக்
    கூத்தாட வல்லானைக், கோனை, ஞானம்
பெற்றானைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே
(10)
காரொளிய திருமேனிச் செங்கண் மாலும்
    கடிக்கமலத்திருந்தவனும் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
    திகழொளியைச், சிந்தைதனை மயக்கம் தீர்க்கும்
ஏரொளியை, இருநிலனும் விசும்பும் விண்ணும்
    ஏழுலகும் கடந்தண்டத்தப்பால் நின்ற
பேரொளியைப், பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

 

தில்லை – அப்பர் தேவாரம் (6):

(1)
செஞ்சடைக் கற்றை முற்றத்திளநிலா வெறிக்கும் சென்னி
நஞ்சடை கண்டனாரைக் காணலா நறவநாறு
மஞ்சடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சடை இருள்கிழியத் துளங்கெரி ஆடுமாறே
(2)
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா வெறிக்கும் சென்னி
ஆறனார் ஆறு சூடி ஆயிழையாளோர் பாக
நாறுபூஞ் சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே
நீறுமெய் பூசி நின்று நீண்டெரி ஆடுமாறே
(3)
சடையனார் சாந்த நீற்றர், தனிநிலா வெறிக்கும் சென்னி
உடையனார் உடைதலையில் உண்பதும் பிச்சையேற்றுக்
கடிகொள்பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடிகழல் ஆர்க்க நின்று அனலெரி ஆடுமாறே
(4)
பையரவசைத்த அல்குல் பனிநிலா வெறிக்கும் சென்னி
மையரிக் கண்ணியாளும் மாலுமோர் பாகமாகிச்
செய்யரி தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கையெரி வீசி நின்று கனலெரி ஆடுமாறே
(5)
ஓதினார் வேதம் வாயால் ஒளிநிலா வெறிக்கும் சென்னி
பூதனார் பூதம்சூழப் புலியுரி அதளனார் தாம்
நாதனார் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில்வெண் குழைகள் தாழக் கனலெரி ஆடுமாறே
(6)
ஓருடம்பிருவராகி ஒளிநிலா வெறிக்கும் சென்னிப்
பாரிடம் பாணி செய்யப் பயின்றஎம் பரமமூர்த்தி
காரிடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
பேரிடம் பெருக நின்று பிறங்கெரி ஆடுமாறே
(7)
முதல்தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா வெறிக்கும் சென்னி
மதக் களிற்றுரிவை போர்த்த மைந்தரைக் காணலாகும்
மதர்த்து வண்டறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்ததோர் அரவமாடக் கனலெரி ஆடுமாறே
(8)
மறையனார் மழுவொன்றேந்தி மணிநிலா வெறிக்கும் சென்னி
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
சிறைகொள்நீர்த் தில்லை தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனலெரி ஆடுமாறே
(9)
விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா வெறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்டபுன் சடைகள் தாழக்
கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமா மேனி தன்னோடனலெரி ஆடுமாறே
(10)
பாலனாய் விருத்தனாகிப் பனிநிலா வெறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடையொன்றேறி
ஞாலமாம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலஞ்சேர் கண்டனார்தான் நீண்டெரி ஆடுமாறே
(11)
மதியிலா அரக்கனோடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன்தோள் நெரிய ஊன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
மதியந்தோய் தில்லைதன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயம் போல நின்று அனலெரி ஆடுமாறே

 

தில்லை – அப்பர் தேவாரம் (7):

(1)
பாளையுடைக் கமுகோங்கிப் பன்மாடம் நெருங்கியெங்கும்
வாளையுடைப் புனல் வந்தெறி வாழ்வயல் தில்லை தன்னுள்
ஆளவுடைக் கழல் சிற்றம்பலத்தரன் ஆடல் கண்டால்
பீளையுடைக் கண்களால் பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே
(2)
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய மூர்த்தி, புலிஅதளன்
உருவுடைய மலைமங்கை மணாளன், உலகுக்கெல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே
(3)
தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டெப்பொழுதும்
அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பரியான்
பொடிக் கொண்டணிந்து பொன்னாகிய தில்லைச் சிற்றம்பலவன்
உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே
(4)
வைச்ச பொருள் நமக்காகும் என்றெண்ணி நமச்சிவாய
அச்சமொழிந்தேன், அணிதில்லை அம்பலத்தாடுகின்ற
பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேலசைத்த
கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே
(5)
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
நெய் ஞின்றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞின்ற ஆடல்கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே
(6)
ஊனத்தை நீக்கி உலகறிய என்னை ஆட்கொண்டவன்
தேனொத்த எனக்கினியான் தில்லைச் சிற்றம்பலவன் எங்கோன்
வானத்தவர்உய்ய வன்னஞ்சை உண்ட கண்டத்திலங்கும்
ஏனத்தெயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே
(7)
தெரித்த கணையால் திரிபுர மூன்றும் செந்தீயில்மூழ்க
எரித்த இறைவன், இமையவர் கோமான், இணையடிகள்
தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
சிரித்த முகம்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே
(8)
சுற்றும் அமரர் சுரபதி நின்திருப்பாதம் அல்லால்
பற்றொன்றிலோம் என்றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான்
செற்றங்கநங்கனைத் தீவிழித்தான், தில்லை அம்பலவன்
நெற்றியில் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே
(9)
சித்தத்தெழுந்த செழுங் கமலத்தன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே
(10)
தருக்கு மிகுத்துத்தன் தோள்வலி உன்னித் தடவரையை
வரைக்கைகளால் எடுத்தார்ப்ப, மலைமகள்கோன் சிரித்து
அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை அம்பலவன்
நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page