பந்தணைநல்லூர் – சம்பந்தர் தேவாரம்:

<– பந்தணைநல்லூர்

(1)
இடறினார் கூற்றைப், பொடிசெய்தார் மதிலை, இவைசொல்லி உலகெழுந்தேத்தக்
கடறினாராவர் காற்றுளாராவர் காதலித்துறை தரு கோயில்
கொடிறனார், யாதும் குறைவிலார், தாம்போய்க் கோவணம் கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(2)
கழியுளார் எனவும், கடலுளார் எனவும், காட்டுளார் நாட்டுளார் எனவும்
வழியுளார் எனவும், மலையுளார் எனவும், மண்ணுளார் விண்ணுளார் எனவும்
சுழியுளார் எனவும் சுவடுதாம் அறியார், தொண்டர்வாய் வந்தனம் சொல்லும்
பழியுளார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(3)
காட்டினார் எனவும், நாட்டினார் எனவும், கடுந்தொழில் காலனைக் காலால்
வீட்டினார் எனவும், சாந்த வெண்ணீறு பூசியோர் வெண்மதி சடைமேல்
சூட்டினார் எனவும் சுவடுதாம் அறியார், சொல்லுள சொல்லும் நால்வேதப்
பாட்டினார் போலும், பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(4)
முருகினார் பொழில்சூழ் உலகினார்ஏத்த, மொய்த்தபல் கணங்களின் துயர்கண்டு
உருகினாராகி, உறுதி போந்துள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினார் எல்லாம் கைதொழுதேத்தக், கடலுள் நஞ்சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தணை நல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(5)
பொன்னினார் கொன்றை இருவடங்கிடந்து, பொறிகிளர் பூணநூல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவ மேவு, வெண்ணீறு மெய்பூசித்
துன்னினார் நால்வர்க்கறம் அமர்ந்தருளித், தொன்மையார், தோற்றமும் கேடும்
பன்னினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(6)
ஒண்பொனார்அனைய அண்ணல் வாழ்கெனவும், உமையவள் கணவன் வாழ்கெனவும்
அண்பினார் பிரியார், அல்லுநன் பகலும் அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லர் என்றேத்த, அல்லவர் தீயர் என்றேத்தும்
பண்பினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(7)
எற்றினார் ஏதுமிடை கொள்வாரில்லை இருநிலம் வானுலகெல்லை
தெற்றினார் தங்கள் காரணமாகச் செருமலைந்து, அடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(8)
ஒலிசெய்த குழலின் முழவமதியம்ப, ஓசையால் ஆடலறாத
கலிசெய்த பூதம் கையினால் இடவே காலினால் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர், புலியின் உரிகொள்வர், ஏனை வாழ்வு நன்றானுமோர் தலையில்
பலிகொள்வர் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(9)
சேற்றினார் பொய்கைத் தாமரையானும், செங்கண்மால் இவரிரு கூறாத்
தோற்றினார், தோற்றத் தொன்மையை அறியார், துணைமையும் பெருமையும் தம்மில்
சாற்றினார், சாற்றி ஆற்றலோம் என்னச் சரண்கொடுத்துஅவர் செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தணைநல்லூர் நின்றஎம் பசுபதியாரே
(10)
(11)
கல்லிசை பூணக் கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசையாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம்பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலையேந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல்லிய பாடல் பத்தும் வல்லவர் மேல் தொல்வினை சூழகிலாவே

 

திருப்புன்கூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்புன்கூர்

(1)
முந்தி நின்ற வினைகள் அவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தமில்லா அடிகள் அவர் போலும்
கந்தமல்கு கமழ்புன் சடையாரே
(2)
மூவராய முதல்வர் முறையாலே
தேவரெல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
ஆவரென்னும் அடிகள் அவர் போலும்
ஏவினல்லார் எயில் மூன்றெரித்தாரே
(3)
பங்கயம் கண் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்
கங்கைதங்கு சடையார் அவர்போலும்
எங்கள்உச்சி உறையும் இறையாரே
(4)
கரையுலாவு கதிர்மா மணிமுத்தம்
திரையுலாவு வயல்சூழ் திருப்புன்கூர்
உரையில் நல்ல பெருமான் அவர்போலும்
விரையில் நல்ல மலர்ச் சேவடியாரே
(5)
பவள வண்ணப் பரிசார் திருமேனி
திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
அழகரென்னும் அடிகள் அவர் போலும்
புகழ நின்ற புரிபுன் சடையாரே
(6)
தெரிந்திலங்கு கழுநீர் வயற்செந்நெல்
திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
பொருந்தி நின்ற அடிகள் அவர்போலும்
விரிந்திலங்கு சடைவெண் பிறையாரே
(7)
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
ஆரநின்ற அடிகள் அவர் போலும்
கூர நின்ற எயில் மூன்றெரித்தாரே
(8)
மலையதனார் உடைய மதில் மூன்றும்
சிலையதனால் எரித்தார் திருப்புன்கூர்த்
தலைவர், வல்ல அரக்கன் தருக்கினை
மலையதனால் அடர்த்து மகிழ்ந்தாரே
(9)
நாடவல்ல மலரான் மாலுமாய்த்
தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்
ஆடவல்ல அடிகள் அவர் போலும்
பாடலாடல் பயிலும் பரமரே
(10)
குண்டு முற்றிக் கூறையின்றியே
பிண்டமுண்ணும் பிராந்தர் சொல் கொளேல்
வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
கண்டு தொழுமின் கபாலி வேடமே
(11)
மாட மல்கு மதில்சூழ் காழிமன்
சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
நாடவல்ல ஞானசம்பந்தன்
பாடல் பத்தும் பரவி வாழ்மினே

 

திருக்கழிப்பாலை – அப்பர் தேவாரம் (5):

<– திருக்கழிப்பாலை

(1)
நெய்தற் குருகுதன் பிள்ளை என்றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடல்புல்கு தென்கழிப்பாலை அதனுறைவாய்
பைதல் பிறையொடு பாம்புடன் வைத்த பரிசறியோம்
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே
(2)
பருமா மணியும் பவளமுத்தும் பரந்துந்தி வரை
பொருமால் கரைமேல் திரை கொணர்ந்தெற்றப் பொலிந்திலங்கும்
கருமா மிடறுடைக் கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை
பெருமான் அவனென்னை ஆளுடையான் இப்பெருநிலத்தே
(3)
நாட்பட்டிருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிரார் தடத்துத்
தாள்பட்ட தாமரைப் பொய்கையம் தண்கழிப்பாலை அண்ணற்கு
ஆட்பட்டு ஒழிந்தமன்றே வல்லமாய் இவ்வகலிடத்தே

 

திருப்புன்கூரும் திருநீடூரும் – அப்பர் தேவாரம்:

<– திருநீடூர்

<– திருப்புன்கூர்

(1)
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்
    பேணாதார் அவர்தம்மைப் பேணாதானைத்
துறவாதே கட்டறுத்த சோதியானைத்
    தூநெறிக்கும் தூநெறியாய் நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையும் தானேயாகித்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிறமாம் ஒளியானை நீடூரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(2)
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னைப்
    பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை
நன்றாங்கறிந்தவர்க்கும் தானேயாகி
    நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னைச்
சென்றோங்கி விண்ணளவும் தீயானானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நின்றாய நீடூர் நிலாவினானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(3)
இல்லானை, எவ்விடத்தும் உள்ளான் தன்னை
    இனிய நினையாதார்க்கு இன்னாதானை
வல்லானை வல்லடைந்தார்க்கருளும் வண்ணம்
    மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நெல்லால் விளைகழனி நீடூரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(4)
கலைஞானம் கல்லாமே கற்பித்தானைக்
    கடுநரகம் சாராமே காப்பான் தன்னைப்
பலவாய வேடங்கள் தானேயாகிப்
    பணிவார்கட்கு அங்கங்கே பற்றானானைச்
சிலையால் புரமெரித்த தீயாடியைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிலையார் மணிமாட நீடுரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(5)
நோக்காதே எவ்வளவும் நோக்கினானை
    நுணுகாதே யாதொன்றும் நுணுகினானை
ஆக்காதே யாதொன்றும் ஆக்கினானை
    அணுகாதார் அவர்தம்மை அணுகாதானைத்
தேக்காதே தெண்கடல் நஞ்சுண்டான் தன்னைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீக்காத பேரொளிசேர் நீடூரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(6)
பூணலாப் பூணானைப், பூசாச் சாந்தம்
    உடையானை, முடைநாறும் புன்கலத்தில்
ஊணலா ஊணானை, ஒருவர் காணா
    உத்தமனை, ஒளிதிகழும் மேனியானைச்
சேணுலாம் செழும்பவளக் குன்றொப்பானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீணுலா மலர்க்கழனி நீடுரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(7)
உரையார் பொருளுக்குலப்பிலானை
    ஒழியாமே எவ்வுருவும் ஆனான் தன்னைப்
புரையாய்க் கனமாய் ஆழ்ந்து ஆழாதானைப்
    புதியனவுமாய் மிகவும் பழையான் தன்னைத்
திரையார் புனல்சேர் மகுடத்தானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிரையார் மணிமாட நீடூரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(8)
கூரரவத்தணையானும் குளிர்தண் பொய்கை
    மலரவனும் கூடிச் சென்றறிய மாட்டார்
ஆரொருவர் அவர்தன்மை அறிவார், தேவர்
    அறிவோம் என்பார்க்கெல்லாம் அறியலாகாச்
சீரரவக் கழலானை, நிழலார் சோலைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நீரரவத் தண்கழனி நீடூரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(9)
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்
    கால்நிமிர்த்து நின்றுண்ணும் கையர் சொன்ன
பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்
    புள்ளுவரால் அகப்படாதுய்யப் போந்தேன்
செய்யெலாம் செழுங்கமலப் பழனவேலித்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே
(10)
இகழுமாறெங்ஙனே ஏழை நெஞ்சே
    இகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை
நகழ மால்வரைக் கீழிட்ட அரக்கர் கோனை
    நலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத்
திகழுமா மதகரியின் உரி போர்த்தானைத்
    திருப்புன்கூர் மேவிய சிவலோகனை
நிகழுமா வல்லானை நீடூரானை
    நீதனேன் என்னேநான் நினையாவாறே

 

பெரும்புலியூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
 

(சம்பந்தர் தேவாரம்):

(1)
மண்ணுமோர் பாகமுடையார், மாலுமோர் பாகமுடையார்
விண்ணுமோர் பாகமுடையார், வேதமுடைய விமலர்
கண்ணுமோர் பாகமுடையார், கங்கை சடையில் கரந்தார்
பெண்ணுமோர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே
(2)
துன்னு கடல் பவளஞ்சேர் தூயன நீண்ட திண்தோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினாள் ஒரு கங்கைக்
கன்னிகளின் புனையோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(3)
கள்ள மதித்த கபாலம் கைதனிலே மிக ஏந்தித்
துள்ள மிதித்து நின்றாடும் தொழிலர், எழில்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேல் மிளிர்கின்ற
பிள்ளைமதிப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(4)
ஆடல் இலையமுடையார், அருமறை தாங்கி ஆறங்கம்
பாடல் இலையமுடையார், பன்மை ஒருமை செய்து, அஞ்சும்
ஊடலில் ஐயமுடையார், யோகெனும் பேரொளி தாங்கிப்
பீடல் இலையமுடையார் பெரும்புலியூர் பிரியாரே
(5)
தோடுடையார் குழைக் காதில், சுடுபொடியார், அனலாடக்
காடுடையார், எரி வீசும் கையுடையார், கடல் சூழ்ந்த
நாடுடையார், பொருளின்ப நல்லவை நாளும் நயந்த
பீடுடையார், பெருமானார், பெரும்புலியூர் பிரியாரே
(6)
கற்றதுறப் பணி செய்து காண்டும் என்பாரவர் தங்கண்
முற்றிதறிதும் என்பார்கள் முதலியர், வேத புராணர்
மற்றிதறிதும் என்பார்கள் மனத்திடையார், பணி செய்யப்
பெற்றி பெரிதும் உகப்பார் பெரும்புலியூர் பிரியாரே
(7)
மறையுடையார், ஒலி பாடல் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடையார் குறை தீர்ப்பார், குழகர், அழகர், நம் செல்வர்
கறையுடையார் திகழ் கண்டம், கங்கை சடையில் கரந்தார்
பிறையுடையார் சென்னி தன்மேல் பெரும்புலியூர் பிரியாரே
(8)
உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் வீடெளிதாகித்
துறவியும் கூட்டமும் காட்டித், துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியம் சிந்தனை மாற்றி வாழவல்லார் தமக்கென்றும்
பிறவியறுக்கும் பிரானார் பெரும்புலியூர் பிரியாரே
(9)
சீருடையார், அடியார்கள் சேடர் ஒப்பார், சடை சேரும்
நீருடையார், பொடிப் பூசு நினைப்புடையார், விரி கொன்றைத்
தாருடையார், விடையூர்வார், தலைவர், ஐந்நூற்றுப் பத்தாய
பேருடையார், பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(10)
உரிமையுடை அடியார்கள் உள்ளுற உள்க வல்லார்கட்கு
அருமை உடையன காட்டியருள் செயும் ஆதிமுதல்வர்
கருமையுடை நெடுமாலும் கடிமலர் அண்ணலும் காணாப்
பெருமையுடைப் பெருமானார் பெரும்புலியூர் பிரியாரே
(11)
பிறைவளரும் முடிச் சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை
நறைவளரும் பொழில்காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
மறைவளரும் தமிழ்மாலை வல்லவர்தம் துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சினராகி நீடுலகத்திருப்பாரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page