திருச்சாய்க்காடு – அப்பர் தேவாரம் (2):

<– திருச்சாய்க்காடு

(1)
வானத்திளமதியும் பாம்பும் தம்மில்
    வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனைத் திளைத்துண்டு வண்டு பாடும்
    தில்லை நடமாடும் தேவர் போலும்
ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்
    நன்மையும் தீமையுமானார் போலும்
தேனொத்த அடியார்க்கினியார் போலும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(2)
விண்ணோர் பரவ நஞ்சுண்டார் போலும்
    வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்
    அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்
பண்ணார் களிவண்டு பாடியாடும்
    பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண்ணார் புகார் முத்தலைக்கும் தெண்ணீர்த்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(3)
கானிரிய வேழம் உரித்தார் போலும்
    காவிரிப் பூம்பட்டினத்துள்ளார் போலும்
வானிரிய வருபுரம் மூன்றெரித்தார் போலும்
    வடகயிலை மலையதுதம் இருக்கை போலும்
ஊனிரியத் தலைகலனா உடையார் போலும்
    உயர்தோணி புரத்துறையும் ஒருவர் போலும்
தேனிரிய மீன்பாயும் தெண்ணீர்ப் பொய்கைத்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(4)
ஊனுற்ற வெண்தலைசேர் கையர் போலும்
    ஊழி பல கண்டிருந்தார் போலும்
மானுற்ற கரதலம் ஒன்றுடையார் போலும்
    மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆடல் அமர்ந்தார் போலும்
    காமனையும் கண்ணழலால் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(5)
கார்மல்கு கொன்றையந்தாரார் போலும்
    காலனையும் ஓருதையால் கண்டார் போலும்
பார்மல்கி ஏத்தப் படுவார் போலும்
    பருப்பதத்தே பல்லூழி நின்றார் போலும்
ஊர்மல்கு பிச்சைக்குழன்றார் போலும்
    ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்
சீர்மல்கு பாடல் உகந்தார் போலும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(6)
மாவாய் பிளந்துகந்த மாலும், செய்ய
    மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும்
    முதுகுன்ற மூதூர் உடையார் போலும்
கோவாய முனி தன்மேல் வந்த கூற்றைக்
    குரைகழலால் அன்று குமைத்தார் போலும்
தேவாதி தேவர்க்கரியார் போலும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(7)
கடுவெளியோடோரைந்தும் ஆனார் போலும்
    காரோணத்தென்றும் இருப்பார் போலும்
இடிகுரல்வாய்ப் பூதப் படையார் போலும்
    ஏகம்பம் மேவி இருந்தார் போலும்
படியொருவர் இல்லாப் படியார் போலும்
    பாண்டிக்கொடுமுடியும் தம்மூர் போலும்
செடிபடு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(8)
விலையிலா ஆரஞ்சேர் மார்பர் போலும்
    வெண்ணீறு மெய்க்கணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை மணாளர் போலும்
    மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரமூன்றும் தொலைத்தார் போலும்
    சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும்
சிலையினார் செங்கண் அரவர் போலும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(9)
அல்லல் அடியார்க்கறுப்பார் போலும்
    அமருலகம் தம்மடைந்தார்க்குக் காட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும்
    நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகை நகையாள் பாகர் போலும்
    முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடும் தேவர் போலும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே
(10)
உறைப்புடைய இராவணன் பொன்மலையைக் கையால்
    ஊக்கம் செய்தெடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறைப்பெருந்தோள் இருபதும் பொன்முடிகள் பத்தும்
    நிலஞ்சேர விரல் வைத்த நிமலர் போலும்
பிறைப்பிளவு சடைக்கணிந்த பெம்மான் போலும்
    பெண்ஆண் உருவாகி நின்றார் போலும்
சிறப்புடைய அடியார்கட்கினியார் போலும்
    திருச்சாய்க்காட்டினிதுறையும் செல்வர் தாமே

 

திருச்சாய்க்காடு – அப்பர் தேவாரம் (1):

<– திருச்சாய்க்காடு

(1)
தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செலலும் அஞ்சிப் பாதமே சரணம்என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே
(2)
வடங்கெழு மலை மத்தாக, வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல்தேவர் அஞ்சி
அடைந்து நும்சரணம் என்ன, அருள் பெரிதுடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே
(3)
அரணிலா வெளிய நாவல் அருநிழலாக ஈசன்
வரணியலாகித் தன்வாய் நூலினால் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித்
தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே
(4)
அரும்பெரும் சிலைக்கை வேடனாய் விறல் பார்த்தற்கன்று
உரம் பெரிதுடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம் பெரிதுடையனாக்கி வாளமர் முகத்தின் மன்னும்
சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே
(5)
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திர மறையதோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே
(6)
ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநல் சண்டிக்கீந்தார் சாய்க்காடு மேவினாரே
(7)
மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரரேத்த ஆயிர முகமதாகி
வையக நெளியப்பாய் வான் வந்திழி கங்கை என்னும்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே
(8)
குவப்பெரும் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெரும் செருப்பால் நீக்கித் தூயவாய்க் கலசமாட்ட
உவப்பெரும் குருதி சோர ஒருகணை இடந்தங்கப்பத்
தவப்பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே
(9)
நக்குலா மலர்பன்னூறு கொண்டுநல் ஞானத்தோடு
மிக்கபூசனைகள் செய்வான், மென்மலரொன்று காணாது
ஒக்குமென் மலர்க்கண் என்றங்கொரு கணைஇடந்தும் அப்பச்
சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே
(10)
புயங்கள் ஐஞ்ஞான்கும் பத்துமாயகொண்டு அரக்கன் ஓடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலியஞ்ச
வியன்பெற எய்திவீழ விரல் சிறிதூன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே

 

திருச்சாய்க்காடு – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருச்சாய்க்காடு

(1)
மண்புகார் வான்புகுவர், மனம்இளையார் பசியாலும்
கண்புகார் பிணியறியார், கற்றாரும் கேட்டாரும்
விண்புகார் எனவேண்டா, வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன் தாள் சார்ந்தாரே
(2)
போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும், பூம்புகார்ச்
சாய்க்காடே பதியாக உடையானும், விடையானும்
வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த
பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே
(3)
நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டெம் பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப
நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே
(4)
கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின், பொன்னியன்ற
தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமரும் தாழ்பொழில்வாய்
மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே
(5)
கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோள் கொடியிடையைப்
பாங்கென்ன வைத்துகந்தான், படர்சடைமேல் பால்மதியம்
தாங்கினான், பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழல்கீழ்
ஓங்கினார் ஓங்கினார் எனஉரைக்கும் உலகமே
(6)
சாந்தாக நீறணிந்தான், சாய்க்காட்டான், காமனைமுன்
தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான், திருமுடிமேல்
ஓய்ந்தார மதிசூடி, ஒளிதிகழும் மலைமகள் தோள்
தோய்ந்தாகம் பாகமா உடையானும் விடையானே
(7)
மங்குல்தோய் மணிமாட மதிதவழு நெடுவீதிச்
சங்கெலாம் கரைபொருது திரைபுலம்பும் சாய்க்காட்டான்
கொங்குலா வரிவண்டின் இசைபாடு மலர்கொன்றைத்
தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே
(8)
தொடலரியது ஒரு கணையால் புரமூன்றும் எரியுண்ணப்
பட அரவத்தெழிலாரம் பூண்டான், பண்டரக்கனையும்
தடவரையால் தடவரைத்தோள் ஊன்றினான் சாய்க்காட்டை
இடவகையா அடைவோம் என்றெண்ணுவார்க்கிடரிலையே
(9)
வையநீர் ஏற்றானும், மலர்உறையும் நான்முகனும்
ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை
தையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்
தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே
(10)
குறங்காட்டு நால்விரலில் கோவணத்துக் கோலோவிப்போய்
அறங்காட்டும் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றும்
திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்
புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே
(11)
நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்
அம்பந்தும் வரிக்கழலும் அரவம்செய் பூங்காழிச்
சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்
எம் பந்தம் எனக்கருதி ஏத்துவார்க்கிடர் கெடுமே

 

திருச்சாய்க்காடு – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருச்சாய்க்காடு

(1)
நித்தலும் நியமம் செய்து நீர்மலர் தூவிச்
சித்தமொன்ற வல்லார்க்கருளும் சிவன் கோயில்
மத்த யானையின் கோடும் வண்பீலியும் வாரித்
தத்துநீர்ப் பொன்னி சாகர மேவு சாய்க்காடே
(2)
பண்தலைக் கொண்டு பூதங்கள் பாட நின்றாடும்
வெண்தலைக் கருங்காடுறை வேதியன் கோயில்
கொண்டலைத் திகழ் பேரி முழங்கக் குலாவித்
தண்டலைத் தடமா மயிலாடு சாய்க்காடே
(3)
நாறு கூவிள நாகிள வெண்மதி அத்தோடு
ஆறு சூடும் அமரர் பிரான்உறை கோயில்
ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலைத்
தாறு தண்கதலிப் புதர்மேவு சாய்க்காடே
(4)
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்
புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்
இரங்கல் ஓசையும் மீட்டிய சரக்கொடும் ஈண்டித்
தரங்க நீள்கழித் தண்கரை வைகு சாய்க்காடே
(5)
ஏழைமார் கடைதோறும் இடுபலிக்கென்று
கூழை வாளரவாட்டும் பிரான்உறை கோயில்
மாழை ஒண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூம்
தாழை வெண்மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே
(6)
துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்
அங்கொர் நீழல்அளித்த எம்மான்உறை கோயில்
வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியும்
சங்கும் வாரித் தடங்கடல்உந்து சாய்க்காடே
(7)
வேத நாவினர், வெண் பளிங்கின் குழைக் காதர்
ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்
மாதர் வண்டுதன் காதல் வண்டாடிய புன்னைத்
தாது கண்டு பொழில் மறைந்தூடு சாய்க்காடே
(8)
இருக்கு நீள்வரை பற்றி அடர்த்தன்றெடுத்த
அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்
மருக்குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்
தருக்குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே
(9)
மாலினோடு அயன் காண்டற்கரியவர், வாய்ந்த
வேலையார் விடமுண்டவர் மேவிய கோயில்
சேலினேர் விழியார் மயிலாலச் செருந்தி
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே
(10)
ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க்கென்றும்
ஆத்தமாக அறிவரிதாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே
(11)
ஏனையோர் புகழ்ந்தேத்திய எந்தை சாய்க்காட்டை
ஞானசம்பந்தன் காழியர்கோன் நவில் பத்தும்
ஊனமின்றி உரைசெய வல்லவர் தாம்போய்
வானநாடு இனிதாள்வர் இம்மானிலத்தோரே

 

பந்தணைநல்லூர் – அப்பர் தேவாரம்:

<– பந்தணைநல்லூர்

(1)
நோதங்கம் இல்லாதார், நாகம் பூண்டார்
    நூல்பூண்டார், நூல்மேலோர் ஆமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்டமாடிப்
    பிறைசூடும் சடைமேலோர் புனலும் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங்கொண்டார்
    அனல்கொண்டார், அந்திவாய் வண்ணம் கொண்டார்
பாதங்க நீறேற்றார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(2)
காடலால் கருதாதார், கடல் நஞ்சுண்டார்
    களிற்றுரிவை மெய் போர்த்தார், கலனதாக
ஓடலால் கருதாதார், ஒற்றியூரார்
    உறுபிணியும் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
பீடுலாந்தனை செய்வார், பிடவ மொந்தை
    குடமுழவம் கொடுகொட்டி குழலும் ஓங்கப்
பாடலார் ஆடலார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(3)
பூதப்படை உடையார், பொங்கு நூலார்
    புலித்தோல் உடையினார், போரேற்றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
    விரிசடைமேல் வெண்திங்கள் கண்ணி சூடி
ஓதத்தொலி கடல்வாய் நஞ்சமுண்டார்
    உம்பரோடம்பொன் உலகம்ஆண்டு
பாதத்தொடு கழலார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(4)
நீருலாம் சடைமுடிமேல் திங்கள் ஏற்றார்
    நெருப்பேற்றார் அங்கையில், நிறையும் ஏற்றார்
ஊரெலாம் பலியேற்றார், அரவம் ஏற்றார்
    ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
வாருலாம் முலைமடவாள் பாகம் ஏற்றார்
    மழுவேற்றார், மான்மறிஒர் கையிலேற்றார்
பாருலாம் புகழேற்றார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(5)
தொண்டர் தொழுதேத்தும் சோதியேற்றார்
    துளங்கா மணிமுடியார், தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார், ஈமம் சூழ்ந்த
    இடுபிணக்காட்டு ஆடலார், ஏமந்தோறும்
அண்டத்துக்கப்புறத்தார், ஆதியானார்
    அருக்கனாய் ஆரழலாய், அடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(6)
கடமன்னு களியானை உரிவை போர்த்தார்
    கானப்பேர் காதலார், காதல் செய்து
மடமன்னும் அடியார்தம் மனத்தின் உள்ளார்
    மானுரிதோல் மிசைத்தோளார், மங்கை காண
நடமன்னி ஆடுவார், நாகம் பூண்டார்
    நான்மறையோடாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(7)
முற்றா மதிச்சடையார், மூவரானார்
    மூவுலகும் ஏத்தும் முதல்வரானார்
கற்றார் பரவும் கழலார், திங்கள்
    கங்கையாள் காதலார், காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார், பால் வெண்ணீற்றார்
    பான்மையால் ஊழி உலகமானார்
பற்றார் மதிலெரித்தார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(8)
கண்ணமரும் நெற்றியார், காட்டார், நாட்டார்
    கனமழுவாள் கொண்டதோர் கையார், சென்னிப்
பெண்ணமரும் சடைமுடியார், பேரொன்றில்லார்
    பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன்றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றையோரும்
    மறையவரும் வந்தெதிரே வணங்கியேத்தப்
பண்ணமரும் பாடலார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(9)
ஏறேறி ஏழுலகும் ஏத்த நின்றார்
    இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார், நீலமுண்டார்
    நெருப்புண்டார், அங்கை அனலுமுண்டார்
ஆறேறு சென்னியார், ஆனஞ்சாடி
    அனலுமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்
பாறேறு வெண்தலையார் பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே
(10)
கல்லூர் கடிமதில்கள் மூன்றும் எய்தார்
    காரோணங் காதலார், காதல் செய்து
நல்லூரார், ஞானத்தார் ஞானமானார்
    நான்மறையோடாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலையின் மேலிருந்து
    வாளரக்கர் கோன் தலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார், பைங்கண் ஏற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூராரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page