திருஆப்பாடி:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்த விண்ணும்
உடலகத்துயிரும் பாரும் ஒள்ளழலாகி நின்று
தடமலர்க் கந்தமாலை தண்மதி பகலுமாகி
மடலவிழ் கொன்றைசூடி மன்னும் ஆப்பாடியாரே
(2)
ஆதியும் அறிவுமாகி அறிவினுள் செறிவுமாகிச்
சோதியுள் சுடருமாகித் தூநெறிக்கொருவனாகிப்
பாதியில் பெண்ணுமாகிப் பரவுவார் பாங்கராகி
வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே
(3)
எண்ணுடை இருக்குமாகி, இருக்கினுள் பொருளுமாகிப்
பண்ணொடு பாடல்தன்னைப் பரவுவார் பாங்கராகிக்
கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்
பெண்ணொரு பாகமாகிப் பேணும்ஆப்பாடியாரே
(4)
அண்டமார் அமரர் கோமான், ஆதிஎம் அண்ணல் பாதம்
கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தைக்
கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் கண்டு
சண்டியார்க்கருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே
(5)
சிந்தையும் தெளிவுமாகித், தெளிவினுள் சிவமுமாகி
வந்தநற் பயனுமாகி, வாள்நுதல் பாகமாகி
மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரைமேல் மன்னி
அந்தமோடளவிலாத அடிகள் ஆப்பாடியாரே
(6)
வன்னி வாளரவு மத்த மதியமும் ஆறும் சூடி
மின்னிய உருவாம் சோதி மெய்ப்பொருள் பயனுமாகிக்
கன்னியோர் பாகமாகிக் கருதுவார் கருத்துமாகி
இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே
(7)
உள்ளுமாய்ப் புறமுமாகி உருவுமாய் அருவுமாகி
வெள்ளமாய்க் கரையுமாகி விரிகதிர் ஞாயிறாகிக்
கள்ளமாய்க் கள்ளத்துள்ளார் கருத்துமாய் அருத்தமாகி
அள்ளுவார்க்கள்ளல் செய்திட்டிருந்த ஆப்பாடியாரே
(8)
மயக்கமாய்த் தெளிவுமாகி மால்வரை வளியுமாகித்
தியக்கமாய் ஒருக்கமாகிச் சிந்தையுள் ஒன்றி நின்று
இயக்கமாய் இறுதியாகி எண்திசைக்கிறைவராகி
அயக்கமாய் அடக்கமாய ஐவர் ஆப்பாடியாரே
(9)
ஆரழல் உருவமாகி அண்டமேழ் கடந்த எந்தை
பேரொளி உ ருவினானைப் பிரமனும் மாலும் காணாச்
சீரவை பரவியேத்திச் சென்றடி வணங்குவார்க்குப்
பேரருள் அருளிச் செய்வார் பேணும் ஆப்பாடியாரே
(10)
திண்திறல் அரக்கனோடிச் சீகயிலாயம் தன்னை
எண்திறல் இலனுமாகி எடுத்தலும் ஏழைஅஞ்ச
விண்டிறல் நெரிய ஊன்றி மிகக் கடுத்தலறி வீழப்
பண்திறல் கேட்டுகந்த பரமர் ஆப்பாடியாரே

 

திருப்புன்கூர் – சுந்தரர் தேவாரம்:

<– திருப்புன்கூர்

(1)
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத
    அவனைக் காப்பது காரணமாக
வந்த காலன்தன் ஆருயிர்அதனை
    வவ்வினாய்க்குந்தன் வன்மை கண்டுஅடியேன்
எந்தை நீஎனை நமன்தமர் நலியில்
    இவன் மற்றென் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்
    செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(2)
வையக முற்று மாமழை மறந்து
    வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை என்ன
    ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளம் தவிர்த்துப்
    பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டுநின் திருவடி அடைந்தேன்
    செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(3)
ஏத நன்னிலம் ஈரறு வேலி
    ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோதனங்களின் பால் கறந்தாட்டக்
    கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற
தாதை தாளற எறிந்த சண்டிக்குன்
    சடைமிசை மலர் அருள்செயக் கண்டு
பூதவாளி நின் பொன்னடி அடைந்தேன்
    பூம்பொழில் திருப்புன்கூர் உளானே
(4)
நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
    நாவினுக்கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி
    கண்ணப்பன் கணம்புல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
    கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்திரள் மணிக்கமலங்கள் மலரும்
    பொய்கைசூழ் திருப்புன்கூர் உளானே
(5)
கோல மால்வரை மத்தென நாட்டிக்
    கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த
ஆலநஞ்சு கண்டவர் மிக இரிய
    அமரர்கட்கருள் புரிவது கருதி
நீலமார் கடல் விடந்தனை உண்டு
    கண்டத்தே வைத்த பித்தநீ செய்த
சீலம் கண்டுநின் திருவடி அடைந்தேன்
    செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(6)
இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன்
    இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கமில் புலி வானரம் நாகம்
    வசுக்கள் வானவர் தானவரெல்லாம்
அயர்ப்பொன்றின்றி நின் திருவடியதனை
    அர்ச்சித்தார் பெறும் ஆரருள் கண்டு
திகைப்பொன்றின்றி நின் திருவடி அடைந்தேன்
    செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(7)
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப்
    பொழில் கொளால் நிழற் கீழறம் புரிந்து
பார்த்தனுக்கன்று பாசுபதம் !கொடுத்
    தருளினாய், பண்டு பகீரதன் வேண்ட
ஆர்த்து வந்திழியும் புனல் கங்கை
    நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே நிந்தன் திருவடி அடைந்தேன்
    செழும் பொழில் திருப்புன்கூர் உளானே
(8)
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில்
    இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்றேவிய பின்னை
    ஒருவன் நீகரிகாடு அரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
    மணிமுழா முழக்க அருள் செய்த
தேவதேவ நின் திருவடி அடைந்தேன்
    செழும்பொழில் திருப்புன்கூர் உளானே
(9)
அறிவினால் மிக்க அறுவகைச் சமயத்து
    அவ்வவர்க்கங்கே ஆரருள் புரிந்து
எறியு மாகடல் இலங்கையர் கோனைத்
    துலங்க மால்வரைக் கீழ் அடர்த்திட்டுக்
குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்
    கோல வாளொடு நாளது கொடுத்த
செறிவு கண்டுநின் திருவடி அடைந்தேன்
    செழும் பொழில் திருப்புன்கூர் உளானே
(10)
கம்ப மால்களிற்றின் உரியானைக்
    காமற் காய்ந்ததோர் கண்ணுடையானைச்
செம்பொனே ஒக்கும் திருவுருவானைச்
    செழும் பொழில் திருப்புன்கூர் உளானை
உம்பராளியை, உமையவள் கோனை
    ஊரன் வன்தொண்டன் உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு
    ஐந்தும் வல்லவர் அருவினை இலரே

 

திருக்கோடிகா – சம்பந்தர் தேவாரம்:

<– திருக்கோடிகா

(1)
இன்றுநன்று நாளைநன்று என்றுநின்ற இச்சையால்
பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்
மின்தயங்கு சோதியான், வெண்மதி விரிபுனல்
கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே
(2)
அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித்திராது நீர்
நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோ
வில்லையன்ன வாள்நுதல் வெள்வளைஒர் பாகமாம்
கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடிகாவு சேர்மினே
(3)
துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்
தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்
அக்கணிந்தரை மிசை ஆறணிந்த சென்னிமேல்
கொக்கிறகணிந்தவன் கோடிகாவு சேர்மினே
(4)
பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகை
உண்டுமக்குரைப்பனான் ஒல்லை நீர் எழுமினோ
மண்டுகங்கை செஞ்சடை வைத்து மாதொர் பாகமாக்
கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே
(5)
முன்னை நீர்செய் பாவத்தால்  மூர்த்தி பாதம் சிந்தியாது
இன்னநீர் இடும்பையின் மூழ்கிறீர் எழும்மினோ
பொன்னை வென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்
கொல்நவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே
(6)
ஏவமிக்க சிந்தையோடின்பம் எய்தலாமெனப்
பாவம்எத்தனையும் நீர் செய்தொரு பயனிலைக்
காவல்மிக்க மாநகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே
(7)
ஏணழிந்த வாழ்க்கையை இன்பம்என்றிருந்து நீர்
மாணழிந்த மூப்பினால் வருந்தன் முன்னம் வம்மினோ
பூணல்வெள் எலும்பினான் பொன்திகழ் சடைமுடிக்
கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே
(8)
மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்
பற்றிவாழ்மின் சேவடி பணிந்து வந்தெழுமினோ
வெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்
குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே
(9)
மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணம் சொல்லுவன்
செங்கண்மால் திசைமுகன் சென்றளந்தும் காண்கிலா
வெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்பும்ஊர்
கொங்குலாம் வளம்பொழில் கோடிகாவு சேர்மினே
(10)
தட்டொடு தழைமயில் பீலிகொள் சமணரும்
பட்டுடை விரி துகிலினார்கள் சொல் பயனிலை
விட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே
(11)
கொந்தணி குளிர்பொழில் கோடிகாவு மேவிய
செந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடை
அந்தணர் புகலியுள் ஆயகேள்வி !ஞானசம்
பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே

 

திருக்கோடிகா – அப்பர் தேவாரம் (3):

<– திருக்கோடிகா

(1)
கண்டலஞ்சேர் நெற்றிஇளம் காளை கண்டாய்
    கல்மதில்சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
    மதிற்கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
    மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெம் கூத்தன் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும்  குழகன் தானே
(2)
வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
    மறைக்காட்டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
    பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரம் செற்றான் கண்டாய்
    திருவாரூர்த் திருமூலட்டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
(3)
அலையார்ந்த புனல்கங்கைச் சடையான் கண்டாய்
    அடியார்கட்காரமுதம் ஆனான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
    வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
    ஏழுலகுமாய் நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
(4)
மற்றாரும் தன்னொப்பார் இல்லான் கண்டாய்
    மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றாடரவணிந்த புனிதன் கண்டாய்
    பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்
    ஐயாறகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தன் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
(5)
வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
    மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடை ஒன்றூர்வான் கண்டாய்
    புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடை ஒன்றுடையான் கண்டாய்
    நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேல் படையான் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
(6)
கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
    கண்அப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்
    பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
    அமரர்கணம் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
(7)
உழையாடு கரதலம் ஒன்றுடையான் கண்டாய்
    ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்
    காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடும் எண்புயத்த இறைவன் கண்டாய்
    என்நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடும் கூத்தன் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே
(8)
படமாடு பன்னகக் கச்சசைத்தான் கண்டாய்
    பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகும் திரிவான் கண்டாய்
    நான்மறையின் பொருள் கண்டாய், நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
    கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடமாடி இடமாகக் கொண்டான் கண்டாய்
    கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே

 

திருக்கோடிகா – அப்பர் தேவாரம் (2):

<– திருக்கோடிகா

(1)
சங்குலா முன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்குலா மதவேழம் வெகுண்டவன்
கொங்குலாம் பொழில் கோடிகாவா என
எங்கிலாததோர் இன்பம் வந்தெய்துமே
(2)
வாடி வாழ்வது என்னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை உள்கிநீர் நாள்தொறும்
கோடிகாவனைக் கூறீரேல் கூறினேன்
பாடி காவலில் பட்டுக் கழிதிரே
(3)
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்றங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனமொன்றில்லையே
(4)
நாவளம் பெறுமாறு மனன் நன்னுதல்
ஆமளஞ் சொலி அன்பு செயின்அலால்
கோமளஞ் சடைக் கோடிகாவா என
ஏவள்இன்றெனை ஏசும் அவ்வேழையே
(5)
வீறு தான் பெறுவார் சிலராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல்
கூறுவேன் கோடிகா உளாய் என்றுமால்
ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ
(6)
நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி ஏசறவும் தெரியாததோர்
கோடிகாவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலில் பட்டுக் கழியுமே
(7)
(8)
(9)
(10)
வரங்களால் வரையை எடுத்தான் தனை
அரங்க ஊன்றி அருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழில் கோடிகாவா என
இரங்குவேன் மனத்தேதங்கள் தீரவே

 

திருக்கோடிகா – அப்பர் தேவாரம் (1):

<– திருக்கோடிகா

(1)
நெற்றிமேல் கண்ணினானே, நீறுமெய் பூசினானே
கற்றைப்புன் சடையினானே, கடல்விடம் பருகினானே
செற்றவர் புரங்கள் மூன்றும் செவ்வழல் செலுத்தினானே
குற்றமில் குணத்தினானே, கோடிகா உடைய கோவே
(2)
கடிகமழ் கொன்றையானே, கபாலங்கை ஏந்தினானே
வடிவுடை மங்கை தன்னை மார்பிலோர் பாகத்தானே
அடியிணை பரவ நாளும் அடியவர்க்கருள் செய்வானே
கொடியணி விழவதோவாக் கோடிகா உடைய கோவே
(3)
நீறுமெய் பூசினானே, நிழல்திகழ் மழுவினானே
ஏறுகந்தேறினானே, இருங்கடல் அமுதொப்பானே
ஆறுமோர் நான்குவேதம் அறம் உரைத்தருளினானே
கூறுமோர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே
(4)
காலனைக் காலால் செற்றன்று அருள்புரி கருணையானே
நீலமார் கண்டத்தானே, நீள்முடி அமரர் கோவே
ஞாலமாம் பெருமையானே, நளிரிளம் திங்கள் சூடும்
கோலமார் சடையினானே கோடிகா உடைய கோவே
(5)
பூணரவு ஆரத்தானே, புலியுரி அரையினானே
காணில் வெண் கோவணம்மும், கையிலோர் கபாலமேந்தி
ஊணுமோர் பிச்சையானே, உமையொரு பாகத்தானே
கோணல்வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே
(6)
கேழல்வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பினானே
ஏழையேன் ஏழையேனான் என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன்
கூழைஏறுடைய செல்வா கோடிகா உடைய கோவே
(7)
அழலுமிழ் அங்கையானே, அரிவையோர் பாகத்தானே
தழலுமிழ் அரவம்ஆர்த்துத், தலைதனில் பலிகொள்வானே
நிழலுமிழ் சோலை சூழ, நீள்வரி வண்டினங்கள்
குழலுமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே
(8)
ஏவடு சிலையினானே, புரமவை எரிசெய்தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே
ஆவடுதுறையுளானே, ஐவரால் ஆட்டப்பட்டேன்
கோவடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே
(9)
ஏற்றநீர்க் கங்கையானே, இருநிலம் தாவினானும்
நாற்றமா மலர்மேல்ஏறு நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கழலுரு ஆயினானே
கூற்றுக்கும் கூற்றதானாய் கோடிகா உடைய கோவே
(10)
பழகநான் அடிமை செய்வேன், பசுபதீ பாவ நாசா
மழகளி யானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே, அரக்கன் திண்தோள் அருவரை நெரிய ஊன்றும்
குழகனே, கோலமார்பா, கோடிகா உடைய கோவே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page