திருவெண்காடு:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
1. உண்டாய் நஞ்சை
2. கண்காட்டு நுதலானும்
3. மந்திர மறையவை
அப்பர் தேவாரம்:
தூண்டு சுடர்மேனி
பண்காட்டி
சுந்தரர் தேவாரம்:
படங்கொள் நாகம்

 

திருப்பாச்சிலாச்சிராமம் – சுந்தரர் தேவாரம்:

<– திருப்பாச்சிலாச்சிராமம்

(1)
வைத்தனன் தனக்கே தலையும் என்நாவும்
    நெஞ்சமும் வஞ்சமொன்றின்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை
    உரைத்தக்கால் உவமனே ஒக்கும்
பைத்தபாம்பு ஆர்த்தோர் கோவணத்தோடு
    பாச்சிலாச்சிராமத்தெம் பரமர்
பித்தரே ஒத்தோர் நச்சிலராகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(2)
அன்னையே என்னேன், அத்தனே என்னேன்
    அடிகளே அமையும் என்றிருந்தேன்
என்னையும் ஒருவன் உளனென்று கருதி
    இறையிறை திருவருள் காட்டார்
அன்னமாம் பொய்கை சூழ்தரு !பாச்சி
    லாச்சிராமத்துறை அடிகள்
பின்னையே அடியார்க்கருள் செய்வதாகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(3)
உற்றபோதல்லால் உறுதியை உணரேன்
    உள்ளமே அமையும் என்றிருந்தேன்
செற்றவர் புரமூன்று எரியெழச் செற்ற
    செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க்கருள் செய் பாச்சிலாச்சிராமத்து
    அடிகள்தாம் யாது சொன்னாலும்
பெற்ற போதுகந்து பெறாவிடில் இகழில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(4)
நாச்சில பேசி, நமர் பிறரென்று
    நன்று தீதென்கிலர், மற்றோர்
பூச்சிலை நெஞ்சே, பொன்விளை கழனிப்
    புள்ளினம் சிலம்புமாம் பொய்கைப்
பாச்சிலாச்சிராமத்தடிகள் என்றிவர்தாம்
    பலரையும் ஆட்கொள்வர், பரிந்தோர்
பேச்சிலர், ஒன்றைத் தரவிலராகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(5)
வரிந்தவெஞ் சிலையால் அந்தரத்தெயிலை
    வாட்டிய வகையினரேனும்
புரிந்த அந்நாளே புகழ்தக்க அடிமை
    போகும் நாள் வீழும் நாளாகிப்
பரிந்தவர்க்கருள் செய் பாச்சிலாச்சிராமத்து
    அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(6)
செடித்தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்
    தீவினை செற்றிடும் என்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன்
    ஆவதும் அறிவர்எம் அடிகள்
படைத்தலைச் சூலம் பற்றிய கையர்
    பாச்சிலாச்சிராமத்தெம் பரமர்
பிடித்த வெண்ணீறே பூசுவதானால்
    இவரலாது இல்லையோ பிரானார்
(7)
கையது கபாலம், காடுறை வாழ்க்கை
    கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரிநூல், மிளிரும்புன் சடைமேல்
    வெண்திங்கள் சூடிய விகிர்தர்
பையரவல்குல் பாவையராடும்
    பாச்சிலாச்சிராமத்தெம் பரமர்
மெய்யரே ஒத்தோர் பொய் செய்வதாகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(8)
நிணம்படு முடலை நிலைமை என்றோரேன்
    நெஞ்சமே தஞ்சமென்றிருந்தேன்
கணம் படிந்தேத்திக் கங்குலும் பகலும்
    கருத்தினால் கை தொழுதெழுவேன்
பணம்படும் அரவம் பற்றிய கையர்
    பாச்சிலாச்சிராமத்தெம் பரமர்
பிணம்படு காட்டில் ஆடுவதாகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(9)
குழைத்து வந்தோடிக் கூடுதி நெஞ்சே
    குற்றேவல் நாள்தொறும் செய்வான்
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும்
    எம்பெருமான் என்றெப்போதும்
அழைத்தவர்க்கருள் செய் பாச்சிலாச்சிராமத்து
    அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிழைத்தது பொறுத்தொன்று ஈகிலராகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(10)
துணிப்படும் உடையும் சுண்ண வெண்ணீறும்
    தோற்றமும் சிந்தித்துக் காணில்
மணிப்படு கண்டனை வாயினால் கூறி
    மனத்தினால் தொண்டனேன் நினைவேன்
பணிப்படும் அரவம் பற்றிய கையர்
    பாச்சிலாச்சிராமத்தெம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(11)
ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்
    அடியவர்க்கடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும்
    ஒண்மலர்ச் சேவடி காட்டாய்
அருமையாம் புகழார்க்கருள் செயும் !பாச்சி
    லாச்சிராமத்தெந்தம் அடிகள்
பெருமைகள் பேசிச் சிறுமைகள் செய்யில்
    இவரலாது இல்லையோ பிரானார்
(12)
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல
    எம்பெருமான் என்றெப்போதும்
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து
    அடிகளை அடிதொழப் பன்னாள்
வாயினால் கூறி மனத்தினால் நினைவான்
    வளவயல் நாவல் ஆரூரன்
பேசின பேச்சைப் பொறுத்திலராகில்
    இவரலாது இல்லையோ பிரானார்

 

திருமங்கலக்குடி – அப்பர் தேவாரம்:

<– திருமங்கலக்குடி

(1)
தங்கலப்பிய தக்கன் பெருவேள்வி
அங்கலக்கழித்து ஆரருள் செய்தவன்
கொங்கலர்க் குழல் கொம்பனையாளொடு
மங்கலக்குடி மேய மணாளனே
(2)
காவிரியின் வடகரைக் காண்தகு
மாவிரியும் பொழில் மங்கலக்குடித்
தேவரியும் பிரமனும் தேடொணொத்
தூவெரிச் சுடர்ச் சோதியுள் சோதியே
(3)
மங்கலக்குடி ஈசனை, மாகாளி
வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கரதாரி, சதுர்முகன்
அங்கு அகத்தியனும் அர்ச்சித்தாரன்றே
(4)
மஞ்சன் வார்கடல் சூழ் மங்கலக்குடி
நஞ்சமார் அமுதாக நயந்துகொண்டு
அஞ்சுமாடல் அமர்ந்து அடியேனுடை
நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே
(5)
செல்வம் மல்கு திருமங்கலக்குடி
செல்வம் மல்கு சிவ நியமத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறையோர் தொழச்
செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே
(6)
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னுவாரும் உரைக்க வல்லார்களும்
துன்னுவார் நன்னெறி தொடர்வெய்தவே
(7)
மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே
(8)
வண்டு சேர்பொழில் சூழ் மங்கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயகனுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே
(9)
கூசுவார்அலர் குண்டர் குணமிலர்
நேசமேதும் இலாதவர் நீசர்கள்
மாசர் பால் மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க உய்ந்தேனன்றே
(10)
மங்கலக் குடியான் கயிலைம் மலை
அங்கலைத்தெடுக்குற்ற அரக்கர் கோன்
தன் கரத்தொடு தாள்தலை தோள் தகர்ந்து
அங்கலைத்தழுது உய்ந்தனன் தானன்றே

 

திருமங்கலக்குடி – சம்பந்தர் தேவாரம்:

<– திருமங்கலக்குடி

(1)
சீரினார் மணியும் அகில் சந்தும் செறிவரை
வாரி நீர்வரு பொன்னி வட மங்கலக்குடி
நீரின் மாமுனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்
பூரித்தாட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே
(2)
பணங்கொள் ஆடரவல்குல் நல்லார் பயின்றேத்தவே
மணங்கொள் மாமயிலாலும் பொழில் மங்கலக்குடி
இணங்கிலா மறையோர் இமையோர் தொழுதேத்திட
அணங்கினோடிருந்தான் அடியே சரணாகுமே
(3)
கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்
மருங்கெலாம் அணமார் பொழில்சூழ் மங்கலக்குடி
அரும்பு சேர்மலர்க் கொன்றையினான் அடி அன்பொடு
விரும்பியேத்த வல்லார் வினையாயின வீடுமே
(4)
பறையினோடு ஒலி பாடலும் ஆடலும் பாரிடம்
மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்
குறைவிலா நிறைவே, குணமில் குணமே என்று
முறையினால் வணங்கும்அவர் முன்னெறி காண்பரே
(5)
ஆனிலம் கிளர் ஐந்தும் அவிர்முடியாடிஓர்
மானிலங் கையினான், மணமார் மங்கலக்குடி
ஊனில் வெண்தலைக் கையுடையான் உயர் பாதமே
ஞானமாக நின்றேத்த வல்லார் வினை நாசமே
(6)
தேனுமாய் அமுதாகி நின்றான் தெளி சிந்தையுள்
வானுமாய் மதி சூடவல்லான் மங்கலக்குடி
கோனை நாள்தொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்
ஊனமானவை போயறும் உய்யும் வகையதே
(7)
வேள்படுத்திடு கண்ணினன், மேரு வில்லாகவே
வாளரக்கர் புரமெரித்தான் மங்கலக்குடி
ஆளும் ஆதிப்பிரான் அடிகள் அடைந்தேத்தவே
கோளும் நாளவை போயறும் குற்றமில்லார்களே
(8)
பொலியும் மால்வரை புக்கெடுத்தான் புகழ்ந்தேத்திட
வலியும் வாளொடுநாள் கொடுத்தான் மங்கலக்குடிப்
புலியின் ஆடையினான் அடியேத்திடும் புண்ணியர்
மலியும் வானுலகம் புக வல்லவர் காண்மினே
(9)
ஞாலமுன் படைத்தான் அளிர் மாமலர் மேலயன்
மாலும் காணவொணா எரியான், மங்கலக்குடி
ஏலவார் குழலாள்ஒரு பாகம் இடங்கொடு
கோலமாகி நின்றான், குணங்கூறும் குணமதே
(10)
மெய்யின் மாசினர், மேனி விரிதுவர் ஆடையர்
பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
செய்ய மேனிச் செழும்புனல் கங்கை செறிசடை
ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கழகாகுமே
(11)
மந்தமாம் பொழில் சூழ் மங்கலக்குடி மன்னிய
எந்தையை எழிலார் பொழில் காழியர் காவலன்
சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்
முந்தி ஏத்தவல்லார் இமையோர் முதலாவரே

 

திருவையாறு – அப்பர் தேவாரம் (5):

<– திருவையாறு

(1)
சிந்தை வண்ணத்தராய்த் திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய் முழு நீறணி
சந்தி வண்ணத்தராய்த் தழல் போல்வதோர்
அந்தி வண்ணமும்ஆவர் ஐயாறரே
(2)
மூல வண்ணத்தராய் முதலாகிய
கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தராகி நெடும்பளிங்கு
ஆல வண்ணத்தர்ஆவர் ஐயாறரே
(3)
சிந்தை வண்ணமும் தீயதோர் வண்ணமும்
அந்திப் போதழகாகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததொர் வண்ணமும்
அந்தி வண்ணமும்ஆவர் ஐயாறரே
(4)
இருளின் வண்ணமும், ஏழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமும், சோதியின் வண்ணமும்
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும்ஆவர் ஐயாறரே
(5)
இழுக்கின் வண்ணங்களாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்களாகியும் கூடியும்
மழைக்கண் மாமுகிலாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும்ஆவர் ஐயாறரே
(6)
இண்டை வண்ணமும், ஏழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும், சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்களாய்க் கனல் மாமணி
அண்ட வண்ணமும்ஆவர் ஐயாறரே
(7)
விரும்பும் வண்ணமும், வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும்ஆவர் ஐயாறரே
(8)
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
ஆழித் தீயுருவாகிய வண்ணமும்
ஆழி வண்ணமும்ஆவர் ஐயாறரே
(9)
செய் தவன் திருநீறணி வண்ணமும்
எய்த நோக்கரிதாகிய வண்ணமும்
கைது காட்சி அரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமும்ஆவர் ஐயாறரே
(10)
எடுத்த வாளரக்கன் திறல் வண்ணமும்
இடர்கள் போல் பெரிதாகிய வண்ணமும்
கடுத்த கைநரம்பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும்ஆவர் ஐயாறரே

 

திருப்பாச்சிலாச்சிராமம் – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பாச்சிலாச்சிராமம்

(1)
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச், சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடம்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர் கோலமெலாம் செய்து பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல்செய்வதோ இவர் மாண்பே
(2)
கலைபுனை மானுரி தோலுடைஆடை, கனல் சுடரால் இவர் கண்கள்
தலையணி சென்னியர், தாரணி மார்பர், தம்அடிகள் இவரென்ன
அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
இலைபுனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர்ஈடே
(3)
வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சிருள் மாலை வேண்டுவர், பூண்பது வெண்ணூல்
நஞ்சடை கண்டர், நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மை நயந்து
மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே
(4)
கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக் கனதரு தூமதிக்கண்ணி
புனமலர்மாலை அணிந்தழகாய புனிதர் கொலாம் இவரென்ன
வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
மனமலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே
(5)
மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்தாடி, வளர்சடை மேல் புனல் வைத்து
மோந்தை முழாக்குழல், தாளமொர் வீணை, முதிரவோர் வாய்மூரி பாடி
ஆந்தைவிழிச் சிறு பூதத்தர் பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
சாந்தணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே
(6)
நீறுமெய் பூசி, நிறைசடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்றுநோக்கி
ஆறது சூடி, ஆடரவாட்டி, ஐவிரல் கோவணஆடை
பாறரு மேனியர், பூதத்தர், பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
ஏறது ஏறியர், ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே
(7)
பொங்கிள நாகமொர் ஏகவடத்தோடு, ஆமை வெண்ணூல் புனை கொன்றை
கொங்கிள மாலை புனைந்தழகாய குழகர் கொலாம் இவரென்ன
அங்கிள மங்கையோர் பங்கினர், பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
சங்கொளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ இவர் சார்வே
(8)
ஏவலத்தால் விசயற்கருள் செய்து, இராவணனை ஈடழித்து
மூவரிலும் முதலாய் நடுவாய மூர்த்தியை அன்றி மொழியாள்
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
தேவர்கள் தேவரோ சேயிழை வாடச் சிதை செய்வதோ இவர் சார்வே
(9)
மேலது நான்முகன் எய்தியதில்லை, கீழது சேவடி தன்னை
நீலது வண்ணனும் எய்தியதில்லை எனஇவர் நின்றதும் அல்லால்
ஆலது மாமதிதோய் பொழில் பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
பாலது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே
(10)
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர்அவர், இருபோதும்
ஊணொடு கூடிய உட்கு நகையால் உரைகள்அவை கொள வேண்டா
ஆணொடு பெண் வடிவாயினர், பாச்சிலாச்சிராமத்துறைகின்ற
பூணெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே
(11)
அகமலி அன்பொடு தொண்டர் வணங்க ஆச்சிராமத்துறைகின்ற
புகைமலி மாலை புனைந்தழகாய புனிதர் கொலாம் இவரென்ன
நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலி தண்தமிழ் கொண்டு இவையேத்தச் சாரகிலா வினைதானே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page