திருஆனைக்கா:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
1. மழையார் மிடறா
2. வானைக்காவில் வெண்மதி
3. மண்ணது உண்டரி
அப்பர் தேவாரம்:
1. கோனைக் காவி
2. முன்னானைத் தோல்
3. எத்தாயர் எத்தந்தை
சுந்தரர் தேவாரம்:
மறைகளாயின நான்கும்

 

திருநின்றியூர் – அப்பர் தேவாரம்:

<– திருநின்றியூர்

(1)
கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப்
படுங்கண் ஒன்றிலராய்ப் பலிதேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கையர் ஆட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத்திட்ட கருத்தரே
(2)
வீதி வேல்நெடும் கண்ணியர் வெள்வளை
நீதியே கொளற்பாலது நின்றியூர்
வேதமோதி விளங்கு வெண் தோட்டராய்க்
காதில் வெண்குழை வைத்த எம்கள்வரே
(3)
புற்றினால் அரவம் புலித்தோல் மிசைச்
சுற்றினார், சுண்ணப் போர்வை கொணடார், சுடர்
நெற்றிக் கண்ணுடையார் அமர் நின்றியூர்
பற்றினாரைப் பற்றா வினை பாவமே
(4)
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர்
உறையும் ஈசனை உள்குமென் உள்ளமே
(5)
சுனையுள் நீலஞ்சுளியும் நெடுங்கணாள்
இனையன் என்றென்றும் ஏசுவதென் கொலோ
நினையும் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே
(6)
உரைப்பக் கேண்மின் நும் உச்சியுளான் தனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர்
உரைப்பொன் கற்றையர் ஆர்இவரோ எனில்
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே
(7)
கன்றியூர் முகில் போலும் கருங்களிறு
இன்றி ஏறலனால் இது என்கொலோ
நின்றியூர் பதியாக நிலாயவன்
வென்றி ஏறுடை எங்கள் விகிர்தனே
(8)
நிலையிலா வெள்ளை மாலையன், நீண்டதோர்
கொலை விலால் எயிலெய்த கொடியவன்
நிலையினார் வயல் சூழ்திரு நின்றியூர்
உரையினால் தொழுவார் வினை யோயுமே
(9)
அஞ்சியாகிலும் அன்பு பட்டாகிலும்
நெஞ்சம் வாழி நினை நின்றியூரைநீ
இஞ்சி மாமதில் எய்து இமையோர் தொழக்
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே
(10)
எளியனா மொழியா இலங்கைக்கிறை
களியினால் கயிலாயம் எடுத்தவன்
நெளியவூன்ற வல்லான்அமர் நின்றியூர்
அளியினால் தொழுவார் வினை அல்குமே

 

திருநின்றியூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருநின்றியூர்

(1)
சூலம்படை, சுண்ணப் பொடி, சாந்தம் சுடுநீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது, பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக், கடிகமழும்
நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரில் நிலையோர்க்கே
(2)
அச்சம்இலர் பாவம்இலர் கேடும்இலர், அடியார்
நிச்சம்உறு நோயும்இலர், தாமும், நின்றியூரில்
நச்சம் மிடறுடையார் நறுங்கொன்றை நயந்தாளும்
பச்சம்உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே
(3)
பறையின்ஒலி, சங்கின்ஒலி, பாங்காரவும்ஆர
அறையும்ஒலி எங்கும்அவை அறிவார்அவர் தன்மை
நிறையும்புனல் சடைமேலுடை அடிகள் நின்றியூரில்
உறையும்இறை அல்லதெனதுள்ளம் உணராதே
(4)
பூண்டவ்வரை மார்பில் புரிநூலன், விரி கொன்றை
ஈண்ட அதனோடும் ஒருபாலம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்த திருநின்றியது தன்னில்
ஆண்டகழல் தொழல் அல்லதறியார்அவர் அறிவே
(5)
குழலின்இசை வண்டின்இசை கண்டுகுயில் கூவும்
நிழலின்எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
அழலின் வலன் அங்கையதேந்தி அனலாடும்
கழலின்ஒலி ஆடும்புரி கடவுள் களைகண்ணே
(6)
மூரல் முறுவல் வெண்ணகை உடையாளொரு பாகம்
சாரல் மதி அதனோடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன் மலி அழகார்பொழில் மிடையும் !திருநின்றி
யூரன் கழல் அல்லாதெனதுள்ளம் உணராதே
(7)
பற்றியொரு தலை கையினில் ஏந்திப்பலி தேரும்
பெற்றிஅதுவாகித்திரி தேவர் பெருமானார்
சுற்றியொரு வேங்கை அதளோடும், பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார் நின்றியூரில் நிலையாரே
(8)
(9)
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்அது உண்டான்
அல்லரென ஆவரென நின்றும் அறிவரிய
நெல்லின்பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலையார்எம்
செல்வர்அடி அல்லாதென சிந்தை உணராதே
(10)
நெறியில்வரு பேராவகை நினையா நினைவொன்றை
அறிவில் சமண் ஆதர்உரை கேட்டும் அயராதே
நெறியில் அவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
மறியேந்திய கையான்அடி வாழ்த்தும்அது வாழ்த்தே
(11)
குன்றம்அது எடுத்தான்உடல் தோளும் நெரிவாக
நின்றங்கொரு விரலால்உற வைத்தான் நின்றியூரை
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே

 

திருவலஞ்சுழியும் கொட்டையூரும்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: கொட்டையூர் அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
கருமணிபோல் கண்டத்தழகன் கண்டாய்
    கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
    பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
    மாதேவன் கண்டாய், வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமரும் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(2)
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
    கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
    அண்ட கபாலத்தப்பாலான் கண்டாய்
மலைப்பண்டம் கொண்டு வருநீர்ப் பொன்னி
    வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கம் சோலைசூழ் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(3)
செந்தாமரைப் போதணிந்தான் கண்டாய்
    சிவன் கண்டாய், தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
    பாலோடு நெய்தயிர் தேனாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
    வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(4)
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
    புள் பாகற்காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கேறு ஊர்ந்தான் கண்டாய்
    எண்திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளும் காவிரி வாய்
    வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(5)
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
    அருமறைகள் ஆறங்கம் ஆனான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
    சதாசிவன் காண், சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொள் மயில்தழை கொண்டு வருநீர்ப் பொன்னி
    வலஞ்சுழியான் கண்டாய், மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(6)
சண்டனை நல்அண்டர் தொழச்செய்தான் கண்டாய்
    சதாசிவன் கண்டாய், சங்கரன் தான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்தும் கழலான் கண்டாய்
    சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
    மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(7)
அணவரியான் கண்டாய், அமலன் கண்டாய்
    அவிநாசி கண்டாய், அண்டத்தான் கண்டாய்
பணமணி மாநாகம் உடையான் கண்டாய்
    பண்டரங்கன் கண்டாய், பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
    மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் அடியார்வாழ் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(8)
விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
    வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனில் புள்ளிஅதள் உடையான் கண்டாய்
    அழலாடி கண்டாய், அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
    வஞ்ச மனத்தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழில்புடைசூழ் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(9)
தளங்கிளரும் தாமரையா தனத்தான் கண்டாய்
    தசரதன்தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
    எட்டெட்டு இருங்கலையும் ஆனான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
    மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளங்குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(10)
விண்டார் புரமூன்றெரித்தான் கண்டாய்
    விலங்கலில் வல்லரக்கனுடல் அடர்த்தான் கண்டாய்
தண் தாமரையானும் மாலும் தேடத்
    தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்
    மாதேவன் கண்டாய், மறையோடங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
    கோடீச்சரத்துறையும் கோமான் தானே

 

திருப்பைஞ்ஞீலி – அப்பர் தேவாரம்:

<– திருப்பைஞ்ஞீலி

(1)
உடையர் கோவணம் ஒன்றும் குறைவிலர்
படைகொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
சடையில் கங்கை தரித்த சதுரரை
அடைய வல்லவர்க்கில்லை அவலமே
(2)
மத்த மாமலர் சூடிய மைந்தனார்
சித்தராய்த் திரிவார் வினை தீர்ப்பரால்
பத்தர் தாம் தொழுதேத்து பைஞ்ஞீலியெம்
அத்தனைத் தொழ வல்லவர் நல்லரே
(3)
விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக்
கழுது துஞ்சிருள் காட்டகத்தாடலான்
பழுதொன்றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத்
தொழுது செல்பவர் தம்வினை தூளியே
(4)
ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே
நின்ற சூழல் அறிவரியான் இடம்
சென்று பாரிடம் ஏத்து பைஞ்ஞீலியுள்
என்றும் மேவி இருந்த அடிகளே
(5)
வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார்
தாழச் செஞ்சடை மேல்பிறை வைத்தவர்
தாழைத் தண்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார்
யாழின் பாட்டை உகந்த அடிகளே
(6)
குண்டு பட்டுக் குறியறியாச் சமண்
மிண்டரோடு படுத்துய்யப் போந்துநான்
கண்டம் கார்வயல் சூழ்ந்த பைஞ்ஞீலியெம்
அண்ட வாணன் அடியடைந்துய்ந்தனே
(7)
வரிப்பை ஆடரவாட்டி, மதகரி
உரிப்பை மூடிய உத்தமனார் உறை
திருப்பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய்
இருப்பர் வானவரோடு இனிதாகவே
(8)
கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல்
பாடல் வண்டிசை கேட்கும் பைஞ்ஞீலியார்
பேடும் ஆணும் பிறர் அறியாததோர்
ஆடு நாகம் அசைத்த அடிகளே
(9)
காருலா மலர்க் கொன்றையந்தாரினான்
வாருலா முலைமங்கை ஓர் பங்கினன்
தேருலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலிஎம்
ஆர்கிலா அமுதை அடைந்துய்ம்மினே
(10)
தருக்கிச் சென்று தடவரை பற்றலும்
நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே
அரக்கன் பாட அருளும் எம்மான் இடம்
இருக்கை ஞீலி என்பார்க்கிடரில்லையே

 

திருவைகாவூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
கோழை மிடறாக, கவிகோளும் இலவாக, இசை கூடும்வகையால்
ஏழையடியார் அவர்கள் யாவைசொன சொல் மகிழும் ஈசன்இடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும் வைகாவிலே
(2)
அண்டமுறு மேரு வரை, அங்கி கணை, நாண்அரவதாக, எழிலார்
விண்டவர்தம் முப்புரமெரித்த விகிர்தன்அவன் விரும்பும் இடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்கு விளையாடு, வயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாட அழகார்குயில் மிழற்று பொழில் வைகாவிலே
(3)
ஊனமிலராகி உயர் நற்றவ, மெய் கற்றவை உணர்ந்த அடியார்
ஞானமிக நின்றுதொழ, நாளும்அருள் செய்யவல நாதன்இடமாம்
ஆனவயல் சூழ்தரு மல் சூழியருகே, பொழில்கள்தோறும் அழகார்
வானமதியோடு மழை நீள்முகில்கள் வந்தணவும் வைகாவிலே
(4)
இன்னஉரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது, நீதிபலவும்
தன்னஉருவாம் என மிகுத்த தவநீதியொடு தான்அமர்விடம்
முன்னைவினை போய் வகையினால் முழுதுணர்ந்து முயல்கின்ற முனிவர்
மன்ன இருபோது மருவித்தொழுது சேரும்வயல் வைகாவிலே
(5)
வேதமொடு வேள்வி பலவாயின மிகுத்து, விதியாறு சமயம்
ஓதியும் உணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள் செய்ஒருவன் இடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கஅழகார்
மாதவி மணங்கமழ வண்டுபல பாடுபொழில் வைகாவிலே
(6)
நஞ்சமுது செய்த மணிகண்டன், நமையாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையிடைப் புனல்கரந்த சிவலோகன் அமர்கின்ற இடமாம்
அஞ்சுடரொர் ஆறுபதம் ஏழினிசை எண்ணரிய வண்ணம்உளவாய்
மஞ்சரொடு மாதர்பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே
(7)
நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்ல வகையால்
தோளினொடு கைகுளிரவே தொழும்அவர்க்கருள்செய் சோதி இடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளை குதிகொள்ள மதுநாற மலர்விரியும் வயல் வைகாவிலே
(8)
கைஇருபதோடு மெய்கலங்கிட இலங்கலை எடுத்த கடியோன்
ஐயிரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன் தன்இடமாம்
கையில் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதிப் பலவிதம்
வையகமெலாம் மருவி நின்று தொழுதேத்தும் எழில் வைகாவிலே
(9)
அந்தமுதல்ஆதி பெருமான், அமரர் கோனை, அயன் மாலும்இவர்கள்
எந்தை பெருமான் இறைவன் என்றுதொழ நின்றருள் செய் ஈசன்இடமாம்
சிந்தைசெய்து பாடுமடியார் பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்திஅணையும் பதிநல் வைகாவிலே
(10)
ஈசன், எமை ஆளுடைய எந்தை பெருமான், இறைவன் என்றுதனையே
பேசுதல் செயா அமணர் புத்தரவர் சித்தம் அணையா அவன்இடம்
தேசமதெலாம் மருவி நின்று பரவித்திகழ நின்ற புகழோன்
வாச மலரான பல தூவிஅணையும் பதிநல் வைகாவிலே
(11)
முற்றுநமை ஆளுடைய முக்கண் முதல்வன் திருவைகாவில் அதனைச்
செற்றமலினார் சிரபுரத் தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய்
உற்றதமிழ் மாலை ஈரைந்தும் இவை வல்லவர் உருத்திரரெனப்
பெற்று அமரலோகம் மிக வாழ்வர், பிரியார்அவர் பெரும் புகழொடே

 

திருப்பைஞ்ஞீலி – சம்பந்தர் தேவாரம்:

<– திருப்பைஞ்ஞீலி

(1)
ஆரிடம் பாடிலர் அடிகள், காடலால்
ஓரிடம் குறைவிலர், உடையர் கோவணம்
நீரிடம் சடை, விடையூர்தி, நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில் பைஞ்ஞீலியே
(2)
மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை
பருவிலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்
உருவிலான் பெருமையை உளம்கொளா தவத்
திருவிலார் அவர்களைத் தெருட்டலாகுமே
(3)
அஞ்சுரும் பணிமலர் அமுத மாந்தித்தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்
வெஞ்சுரந்தனில் உமை வெருவ வந்ததோர்
குஞ்சரம் படவுரி போர்த்த கொள்கையே
(4)
கோடல்கள் புறவணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டிசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடலர் ஆணலர் பெண்ணும் அல்லதோர்
ஆடலை உகந்தஎம் அடிகள் அல்லரே
(5)
விழியிலா நகுதலை விளங்கிளம் பிறை
சுழியிலார் வருபுனல் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்கலாகுமே
(6)
விடையுடைக் கொடி, வலன்ஏந்தி வெண்மழுப்
படையுடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவலான்
துடியிடைக் கலைஅல்குலாள் ஓர் பாகமாச்
சடையிடைப் புனல்வைத்த சதுரன் அல்லனே
(7)
தூயவன், தூய வெண்ணீறு மேனிமேல்
பாயவன், பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன், வேய்புரை தோளி பாகமா
ஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ
(8)
தொத்தின தோள்முடி உடையவன் தலை
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்
முத்தினை முறுவல் செய்தாள்ஓர் பாகமாப்
பொத்தினன் திருந்தடி பொருந்தி வாழ்மினே
(9)
நீருடைப் போதுறைவானும், மாலுமாய்ச்
சீருடைக் கழலடி சென்னி காண்கிலர்
பாருடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவிய
தாருடைக் கொன்றையந்தலைவர் தன்மையே
(10)
பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்
சாலியாதவர்களைச் சாதியாததோர்
கோலியா அருவரை கூட்டிஎய்த !பைஞ்
ஞீலியான் கழலடி நினைந்து வாழ்மினே
(11)
கண்புனல் விளைவயல் காழிக் கற்பகம்
நண்புணர் அருமறை ஞான சம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page