திருஆனைக்கா – அப்பர் தேவாரம் (2):

<– திருஆனைக்கா

(1)
முன்னானைத், தோல்போர்த்த மூர்த்தி தன்னை
    மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன்ஆனையாப் பண்ணி ஏறினானைச்
    சார்தற்கரியானை, தாதை தன்னை
என்ஆனைக் கன்றினை, என் ஈசன் தன்னை
    எறிநீர்த் திரையுகளும் காவிரிசூழ்
தென்னானைக், காவானைத், தேனைப் பாலைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(2)
மருந்தானை, மந்திரிப்பார் மனத்துளானை
    வளர்மதியஞ் சடையானை, மகிழ்ந்தென் உள்ளத்து
இருந்தானை, இறப்பிலியைப், பிறப்பிலானை
    இமையவர்தம் பெருமானை, உமையாள் அஞ்சக்
கருந்தான மதகளிற்றின் உரி போர்த்தானைக்
    கனமழுவாள் படையானைப், பலிகொண்டு ஊரூர்
திரிந்தானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(3)
முற்றாத வெண்திங்கள் கண்ணியானை
    முந்நீர் நஞ்சுண்டு இமையோர்க்கமுதம் நல்கும்
உற்றானைப், பல்லுயிர்க்கும் துணையானானை
    ஓங்காரத்துட்பொருளை, உலகமெல்லாம்
பெற்றானைப், பின்னிறக்கம் செய்வான் தன்னைப்
    பிரானென்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(4)
காராரும் கறைமிடற்றெம் பெருமான் தன்னைக்
    காதில்வெண் குழையானைக், கமழ் பூங்கொன்றைத்
தாரானைப், புலியதளின் ஆடையானைத்
    தானன்றி வேறொன்றுமில்லா ஞானப்
பேரானை, மணியார மார்பினானைப்
    பிஞ்ஞகனைத், தெய்வ நான்மறைகள் பூண்ட
தேரானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(5)
பொய்யேதும் இல்லாத மெய்யன் தன்னைப்
    புண்ணியனை, நண்ணாதார் புரம்நீறாக
எய்தானைச், செய்தவத்தின் மிக்கான் தன்னை
    ஏறமரும் பெருமானை, இடமான் ஏந்தும்
கையானைக், கங்காள வேடத்தானைக்
    கட்டங்கக் கொடியானைக், கனல்போல் மேனிச்
செய்யானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(6)
கலையானைப், பரசுதர பாணியானைக்
    கனவயிரத் திரளானை, மணி மாணிக்க
மலையானை, என்தலையின் உச்சியானை
    வார்தரு புன்சடையானை, மயானம் மன்னும்
நிலையானை, வரியரவு நாணாக் கோத்து
    நினையாதார் புரமெரிய வளைத்த மேருச்
சிலையானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(7)
ஆதியனை, எறிமணியின் ஓசையானை
    அண்டத்தார்க்கறிவொண்ணாது அப்பால் மிக்க
சோதியனைத், தூமறையின் பொருளான் தன்னைச்
    சுரும்பமரும் மலர்க்கொன்றை தொன்னூல் பூண்ட
வேதியனை, அறமுரைத்த பட்டன் தன்னை
    விளங்குமலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(8)
மகிழ்ந்தானைக் கச்சி ஏகம்பன் தன்னை
    மறவாது கழல்நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானைப்
    பூதகணப் படையானைப், புறங்காட்டாடல்
உகந்தானைப், பிச்சையே இச்சிப்பானை
    ஒண்பவளத் திரளை, என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(9)
நசையானை, நால் வேதத்தப்பாலானை
    நல்குரவு தீப்பிணிநோய் காப்பான் தன்னை
இசையானை, எண்ணிறந்த குணத்தான் தன்னை
    இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்
மிசையானை, விரிகடலும் மண்ணும் விண்ணும்
    மிகுதீயும் புனலெறி காற்றாகி எட்டுத்
திசையானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே
(10)
பார்த்தானைக் காமனுடல் பொடியாய் வீழப்
    பண்டயன்மால் இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானைச், செந்தழல்போல் உருவினானைத்
    தேவர்கள் தம் பெருமானைத், திறமுன்னாதே
ஆர்த்தோடி மலையெடுத்த இலங்கை வேந்தன்
    ஆண்மையெலாம்கெடுத்துஅவன்தன் இடர் அப்போதே
தீர்த்தானைத், திருவானைக்கா உளானைச்
    செழுநீர்த் திரளைச் சென்றாடினேனே

 

திருஆனைக்கா – அப்பர் தேவாரம் (3):

<– திருஆனைக்கா

(1)
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
    எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால் வந்துதவுவார் ஒருவரில்லை
    சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
    திருவானைக்கா உடைய செல்வா, எந்தன்
அத்தா, உன்பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(2)
ஊனாகி உயிராகி, அதனுள் நின்ற
    உணர்வாகிப், பிறஅனைத்தும் நீயாய் நின்றாய்
நானேதும் அறியாமே என்னுள் வந்து
    நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்
தேனாரும் கொன்றையனே நின்றியூராய்
    திருவானைக்காவில் உறை சிவனே, ஞானம்
ஆனாய், உன்பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(3)
ஒப்பாய் இவ்வுலகத்தோடு ஒட்டி வாழ்வான்
    ஒன்றலாத் தவத்தாரோடுடனே நின்று
துப்பாரும் குறையடிசில் துற்றி நற்றுன்
    திறம்மறந்து திரிவேனைக் காத்து நீவந்து
எப்பாலும் நுன்னுணர்வே ஆக்கியென்னை
    ஆண்டவனே, எழில்ஆனைக்காவா, வானோர்
அப்பா, உன்பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(4)
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்சக் கள்வா
    நிறைமதியம் சடைவைத்தாய், அடையாதுன் பால்
முனைத்தவர்கள் புரமூன்றும் எரியச் செற்றாய்
    முன்னானைத் தோல்போர்த்த முதல்வா என்றும்
கனைத்துவரும் எருதேறும் காள கண்டா
    கயிலாய மலையா நின் கழலே சேர்ந்தேன்
அனைத்துலகும் ஆள்வானே ஆனைக்காவா
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(5)
இம்மாயப் பிறப்பென்னும் கடலாம் !துன்பத்
    திடைச் சுழிப்பட்டிளைப்பேனை இளையா வண்ணம்
கைம்மான மனத்துதவிக் கருணை செய்து
    காதல்அருளவை வைத்தாய், காண நில்லாய்
வெம்மான மதகரியின் உரிவை போர்த்த
    வேதியனே, தென்ஆனைக்காவுள் மேய
அம்மான்நின் பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(6)
உரையாரும் புகழானே ஒற்றியூராய்
    கச்சிஏகம்பனே காரோணத்தாய்
விரையாரும் மலர்தூவி வணங்குவார்பால்
    மிக்கானே, அக்கரவம் ஆரம் பூண்டாய்
திரையாரும் புனல்பொன்னித் தீர்த்தம் மல்கு
    திருவானைக்காவில் உறை தேனே, வானோர்
அரையா, உன்பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(7)
மையாரும் மணிமிடற்றாய் மாதோர் கூறாய்
    மான்மறியும் மாமழுவும் அனலும் ஏந்தும்
கையானே, காலனுடல் மாளச் செற்ற
    கங்காளா, முன்கோளும் விளைவும் ஆனாய்
செய்யானே, திருமேனி அரியாய், தேவர்
    குலக்கொழுந்தே, தென்ஆனைக்காவுள் மேய
ஐயா உன்பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(8)
இலையாரும் சூலத்தாய் எண்தோளானே
    எவ்விடத்தும் நீயல்லாதில்லை என்று
தலையாரக் கும்பிடுவார் தன்மையானே
    தழல்மடுத்த மாமேருக் கையில் வைத்த
சிலையானே, திருவானைக்காவுள் மேய
    தீயாடீ, சிறுநோயால் நலிவுண்டுள்ளம்
அலையாதே நின்னடியே அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(9)
விண்ணாரும் புனல்பொதி செஞ்சடையாய், வேத
    நெறியானே, எறிகடலின் நஞ்சமுண்டாய்
எண்ணாரும் புகழானே, உன்னை எம்மான்
    என்றென்றே நாவினில் எப்பொழுதும் உன்னிக்
கண்ணாரக் கண்டிருக்கக் களித்தெப்போதும்
    கடிபொழில்சூழ் தென்ஆனைக்காவுள் மேய
அண்ணா நின்பொற்பாதம் அடையப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
(10)
கொடியேயும் வெள்ளேற்றாய், கூளி பாடக்
    குறள்பூதம்  கூத்தாட நீயும்ஆடி
வடிவேயும் மங்கைதனை வைத்த மைந்தா
    மதில் ஆனைக்கா உளாய், மாகாளத்தாய்
படியேயும் கடல்இலங்கைக் கோமான் தன்னைப்
    பருமுடியும் திரள்தோளும் அடர்த்துகந்த
அடியே வந்தடைந்தடிமையாகப் பெற்றால்
    அல்லகண்டம் கொண்டடியேன் என் செய்கேனே

 

திருஆனைக்கா – அப்பர் தேவாரம் (1):

<– திருஆனைக்கா

(1)
கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவி உண்ணார் சில தெண்ணர்கள்
ஆனைக்காவில் எம்மானை அணைகிலார்
ஊனைக் காவி உழிதர்வர் ஊமரே
(2)
திருகு சிந்தையைத் தீர்த்துச் செம்மை செய்து
பருகி ஊறலைப் பற்றிப் பதமறிந்து
உருகி நைபவர்க்கூனம் ஒன்றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
(3)
துன்பமின்றித் துயரின்றி என்றும்நீர்
இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்
என்பொன் ஈசன் இறைவன் என்றுள்குவார்க்கு
அன்பனாயிடும் ஆனைக்கா அண்ணலே
(4)
நாவால் நன்று நறுமலர்ச் சேவடி
ஓவாதேத்தி உளத்தடைத்தார் வினை
காவாய் என்றுதம் கை தொழுவார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே
(5)
வஞ்சமின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொல் இன்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கெலாம்
அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே
(6)
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன்றின்றியே தன் அடைந்தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே
(7)
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும்
கழுகரிப்பதன் முன்னம், கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்று
அழுமவர்க்கன்பன் ஆனைக்கா அண்ணலே
(8)
உருளும் போதறிவொண்ணா உலகத்தீர்
தெருளும் சிக்கெனத் தீவினை சேராதே
இருளறுத்து நின்று ஈசன் என்பார்க்கெலாம்
அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே
(9)
நேசமாகி நினை மடநெஞ்சமே
நாசமாய குலநலம் சுற்றங்கள்
பாசமற்றுப் பராபர ஆனந்த
ஆசையுற்றிடும் ஆனைக்கா அண்ணலே
(10)
ஓதமாகடல் சூழ்இலங்கைக்கிறை
கீதம் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதியாயிடும் ஆனைக்கா அண்ணலே

 

திருஅன்னியூர் – அப்பர் தேவாரம்:

<– திருஅன்னியூர்

(1)
பாறலைத்த படுவெண் தலையினன்
நீறலைத்த செம்மேனியன், நேரிழை
கூறலைத்த மெய், கோளரவாட்டிய
ஆறலைத்த சடை அன்னியூரனே
(2)
பண்டொத்த மொழியாளைஓர் பாகமாய்
இண்டைச் செஞ்சடையன், இருள் சேர்ந்ததோர்
கண்டத்தன், கரியின்உரி போர்த்தவன்
அண்டத்தப்புறத்தான் அன்னியூரனே
(3)
பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவையாகத் துடைப்பவர் தம்இடம்
குரவம் நாறும் குழலுமை கூறராய்
அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே
(4)
வேத கீதர், விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர், நீதியினால் அடியார் தமக்கு
ஆதியாகி நின்றார் அன்னியூரரே
(5)
எம்பிரான் இமையோர்கள் தமக்கெலாம்
இன்பராகி இருந்தஎம் ஈசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்கு
அன்பராகி நின்றார் அன்னியூரரே
(6)
வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடும் கருத்தினர்
சிந்தையார் சிவனார், செய்ய தீவண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே
(7)
ஊனையார் தலையில் பலி !கொண்டுழல்
வானை. வானவர் தாங்கள் வணங்கவே
தேனையார் குழலாளைஓர் பாகமா
ஆனை ஈருரியார் அன்னியூரரே
(8)
காலை போய்ப் பலி தேர்வர், கண்ணார் நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ் புறங்காடு அரங்காகவே
ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே
(9)
எரிகொள் மேனியர், என்பணிந்து இன்பராய்த்
திரியும் மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரியராகி நின்றார் அன்னியூரரே
(10)
வஞ்சரக்கன் கரமும் சிரத்தொடும்
அஞ்சும் அஞ்சுமோர் ஆறுநான்குமிறப்
பஞ்சின் மெல்விரலால் அடர்த்தாயிழை
அஞ்சல் அஞ்சலென்றார் அன்னியூரரே

 

திருஅன்னியூர் – சம்பந்தர் தேவாரம்:

<– திருஅன்னியூர்

(1)
மன்னியூர் இறை சென்னியார் பிறை
அன்னியூர் அமர் மன்னு சோதியே
(2)
பழகுந்தொண்டர் வம், அழகன் அன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே
(3)
நீதி பேணுவீர் ஆதி அன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி உய்ம்மினே
(4)
பத்தர் ஆயினீர் அத்தர் அன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ முத்தர்ஆவரே
(5)
நிறைவு வேண்டுவீர் அறவன் அன்னியூர்
மறையுளான் கழல் குறவு செய்ம்மினே
(6)
இன்பம் வேண்டுவீர் அன்பன் அன்னியூர்
நன்பொன் என்னுமின் உம்பராகவே
(7)
அந்தணாளர் தம் தந்தை அன்னியூர்
எந்தையே எனப் பந்தம் நீங்குமே
(8)
தூர்த்தனைச் செற்ற தீர்த்தன் அன்னியூர்
ஆத்தமா அடைந்தேத்தி வாழ்மினே
(9)
இருவர் நாடிய அரவன் அன்னியூர்
பரவுவார் விண்ணுக்கொருவர் ஆவரே
(10)
குண்டர் தேரருக்கண்டன் அன்னியூர்த்
தொண்டுளார் வினை விண்டு போகுமே
(11)
பூந்தராய்ப் பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்தன் அன்னியூர் சேர்ந்து வாழ்மினே

 

குரக்குக்கா:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(அப்பர் தேவாரம்):

(1)
மரக்கொக்காம் என வாய்விட்டலறி நீர்
சரக்குக் காவித் திரிந்தயராது, கால்
பரக்கும் காவிரி நீரலைக்கும் கரைக்
குரக்குக்கா அடையக் கெடும் குற்றமே
(2)
கட்டாறே கழி காவிரி பாய்வயல்
கொட்டாறே புனலூறு குரக்குக்கா
முட்டாறா அடியேத்த முயல்பவர்க்கு
இட்டாறா இடரோட எடுக்குமே
(3)
கையனைத்தும் கலந்தெழு காவிரி
செய் அனைத்திலும் சென்றிடும் செம்புனல்
கொய்யனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழுவார்க்கல்லல் இல்லையே
(4)
மிக்கனைத்துத் திசையும் அருவிகள்
புக்குக் காவிரி போந்த புனற்கரைக்
கொக்கினம் பயில் சோலைக் குரக்குக்கா
நக்கனை நவில்வார் வினை நாசமே
(5)
விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி
இட்ட நீர்வயல் எங்கும் பரந்திடக்
கொட்டமா முழவோங்கு குரக்குக்கா
இட்டமாய் இருப்பார்க்கு இடரில்லையே
(6)
மேலை வானவரோடு விரிகடல்
மாலும் நான்முகனாலும் அளப்பொணாக்
கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பாலராய்த் திரிவார்க்கில்லை பாவமே
(7)
ஆல நீழல் அமர்ந்த அழகனார்
காலனை உதை கொண்ட கருத்தனார்
கோல மஞ்ஞைகள்ஆலும் குரக்குக்காப்
பாலருக்கருள் செய்வர் பரிவொடே
(8)
செக்கர் அங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்
அக்கரையர் எம்ஆதி புராணனார்
கொக்கினம் வயல் சேரும் குரக்குக்கா
நக்கனைத் தொழ நம்வினை நாசமே
(9)
உருகிஊன் குழைந்தேத்தி எழுமின்நீர்
கரிய கண்டன் கழலடி தன்னையே
குரவனம் செழுங்கோயில் குரக்குக்கா
இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே
(10)
இரக்கமின்றி மலைஎடுத்தான் முடி
உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம்
குரக்கினம் குதிகொள்ளும் குரக்குக்கா
வரத்தனைப் பெற வானுலகாள்வரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page