இன்னம்பர்:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
எண்திசைக்கும் புகழ்
அப்பர் தேவாரம்:
1. விண்ணவர் மகுட
2. மன்னு மலைமகள்
3. என்னில்ஆரும் எனக்கினி
4. அல்லிமலர் நாற்றத்து

 

திருவியலூர்:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
குரவங்கமழ் நறுமென்குழல் அரிவைஅவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றதன் உரிவை உடலணிவோன்
அரவும் மலைபுனலும் இளமதியும் நகுதலையும்
விரவும்சடை அடிகட்கிடம் விரிநீர் வியலூரே
(2)
ஏறார் தரும் ஒருவன், பலஉருவன், நிலையானான்
ஆறார்தரு சடையன், அனல் உருவன், பரிவுடையான்
மாறார் புரமெரியச் சிலை வளைவித்தவன், மடவாள்
வீறார்தர நின்றான் இடம் விரிநீர் வியலூரே
(3)
செம்மென் சடை அவை தாழ்வுற, மடவார் மனைதோறும்
பெய்ம்மின் பலிஎன நின்றிசை பகர்வார் அவர் இடமாம்
உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உரைமேல்
விம்மும் பொழில் கெழுவும் வயல் விரிநீர் வியலூரே
(4)
அடைவாகிய அடியார் தொழ, அலரோன் தலையதனில்
மடவார்இடு பலி வந்துணல் உடையானவன் இடமாம்
கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி
மிடையார் பொழில் புடைசூழ்தரு விரிநீர் வியலூரே
(5)
எண்ணார்தரு பயனாய், அயன்அவனாய், மிகு கலையாய்ப்
பண்ணார்தரு மறையாய், உயர் பொருளாய், இறை அவனாய்க்
கண்ணார் தரும் உருவாகிய கடவுள் இடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே
(6)
வசைவில்கொடு வருவேடுவன் அவனாய் நிலையறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவான் நிலையவனை
அசையப் பொருதசையா வணம் அவனுக்குயர் படைகள்
விசையற்கருள் செய்தான்இடம் விரிநீர் வியலூரே
(7)
மானார் அரவுடையான், இரவுடையான், பகல் நட்டம்
ஊனார்தரும் உயிரான், உயர் விசையான், விளை பொருள்கள்
தானாகிய தலைவன் என நினைவார்அவர் இடமாம்
மேல்நாடிய விண்ணோர் தொழும் விரிநீர் வியலூரே
(8)
பொருவார் எனக்கெதிர்ஆர் எனப் பொருப்பை எடுத்தான் தன்
கருமால்வரை கரந்தோள்உரம் கதிர்நீள்முடி நெரிந்து
சிரமாயின கதறச்செறி கழல்சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரிநீர் வியலூரே
(9)
வளம் பட்டலர் மலர்மேல்அயன் மாலும்ஒரு வகையால்
அளம்பட்டறிவொண்ணா வகை அழலாகிய அண்ணல்
உளம்பட்டெழு தழல்தூண் அதன் நடுவேயொரு உருவம்
விளம்பட்டருள் செய்தான்இடம் விரிநீர் வியலூரே
(10)
தடுக்காலுடன் மறைப்பார்அவர், தவர்சீவர மூடிப்
பிடக்கேஉரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர்
கடல்சேர்தரு விடமுண்டமுதம் அமரர்க்கருள் செய்த
விடைசேர்தரு கொடியான்இடம் விரிநீர் வியலூரே
(11)
விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன் வியலூரைத்
தளங் கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞான சம்பந்தன்
துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியார் அவரென்றும்
விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும் உடையாரே

 

திருஆனைக்கா – சம்பந்தர் தேவாரம் (3):

<– திருஆனைக்கா

(1)
மண்ணது உண்ட அரி மலரோன் காணா
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணது ஓங்கிய கயிலையாரும்
அண்ணல் ஆரூர் ஆதிஆனைக்காவே
(2)
வந்து மால் அயனவர் காண்பரியார்
வெந்த வெண்ணீறணி மயேந்திரரும்
கந்தவார் சடையுடைக் கயிலையாரும்
அந்தண் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(3)
மாலயன் தேடிய மயேந்திரரும்
காலனை உயிர்கொண்ட கயிலையாரும்
வேலையதோங்கும் வெண்ணாவலாரும்
ஆலை ஆரூர்ஆதி ஆனைக்காவே
(4)
கருடனை ஏறரி அயனோர் காணார்
வெருள் விடையேறிய மயேந்திரரும்
கருதரு கண்டத்தெம் கயிலையாரும்
அருளன் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(5)
மதுசூதன் நான்முகன் வணங்கரியார்
மதியது சொல்லிய மயேந்திரரும்
கதிர்முலை புல்கிய கயிலையாரும்
அதியன் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(6)
சக்கரம் வேண்டு மால் பிரமன் காணா
மிக்கவர் கயிலை மயேந்திரரும்
தக்கனைத் தலைஅரி தழலுருவர்
அக்கணியவர் ஆரூர் ஆனைக்காவே
(7)
கண்ணனும் நான்முகன் காண்பரியார்
வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும்
கண்ணப்பர்க்கருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல் ஆரூர்ஆதி ஆனைக்காவே
(8)
கடல் வண்ணன் நான்முகன் காண்பரியார்
தடவரை அரக்கனைத் தலைநெரித்தார்
விடமதுண்ட எம் மயேந்திரரும்
அடல்விடை ஆரூர்ஆதி ஆனைக்காவே
(9)
ஆதிமால் அயனவர் காண்பரியார்
வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும்
காதிலொர் குழையுடைக் கயிலையாரும்
ஆதி ஆரூர்எந்தை ஆனைக்காவே
(10)
அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல்
வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும்
மறிகடலோன் அயன் தேடத் தானும்
அறிவரு கயிலையோன் ஆனைக்காவே
(11)
ஏனமால் அயனவர் காண்பரியார்
கானமார் கயிலைநன் மயேந்திரரும்
ஆனஆரூர் ஆதி ஆனைக்காவை
ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே

 

திருஆனைக்கா – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருஆனைக்கா

(1)
வானைக்காவில் வெண்மதி மல்குபுல்கு வார்சடைத்
தேனைக்காவில் இன்மொழித் தேவிபாகம் ஆயினான்
ஆனைக்காவில் அண்ணலை அபயமாக வாழ்பவர்
ஏனைக்காவல் வேண்டுவார்க்கேதும் ஏதமில்லையே
(2)
சேறுபட்ட தண்வயல் சென்றுசென்று சேணுலா
ஆறுபட்ட நுண்துறை ஆனைக்காவில் அண்ணலார்
நீறுபட்ட மேனியார், நிகரில் பாதம் ஏத்துவார்
வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே
(3)
தாரமாய மாதராள் தானொர் பாகம்ஆயினான்
ஈரமாய புன்சடை ஏற்ற திங்கள் சூடினான்
ஆரமாய மார்புடை ஆனைக்காவில் அண்ணலை
வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே
(4)
விண்ணின்நண்ணு புல்கிய வீரமாய மால்விடைச்
சுண்ண வெண்ணீறாடினான், சூலமேந்து கையினான்
அண்ணல், கண்ணொர் மூன்றினான், ஆனைக்காவு கைதொழ
எண்ணும் வண்ணம் வல்லவர்க்கேதமொன்றும் இல்லையே
(5)
வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள், ஆண்டசீர்
மைகொள் கண்டன், வெய்யதீ மாலையாடு காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று சென்னிஎம்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே
(6)
நாணுமோர்வு சார்வுமுன், நகையும்உட்கு நன்மையும்
பேணுறாத செல்வமும் பேசநின்ற பெற்றியான்
ஆணும்பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார்
காணும்கண்ணு மூன்றுடைக் கறைகொள் மிடறன் அல்லனே
(7)
கூருமாலை நண்பகல் கூடிவல்ல தொண்டர்கள்
பேருமூரும் செல்வமும் பேசநின்ற பெற்றியான்
பாரும்விண்ணும் கைதொழப் பாயும்கங்கை செஞ்சடை
ஆர நீரொடேந்தினான் ஆனைக்காவு சேர்மினே
(8)
பொன்னமல்கு தாமரைப் போதுதாது வண்டினம்
அன்னமல்கு தண்துறை ஆனைக்காவில் அண்ணலைப்
பன்னவல்ல நான்மறை பாடவல்ல தன்மையோர்
முன்னவல்லர் மொய்கழல் துன்னவல்லர் விண்ணையே
(9)
ஊனொடுண்டல் நன்றென, ஊனொடுண்டல் தீதென
ஆனதொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மையான்
வானொடொன்று சூடினான், வாய்மையாக மன்னிநின்று
ஆனொடஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்மினே
(10)
கையிலுண்ணும் கையரும், கடுக்கள்தின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார்
தையல்பாகம் ஆயினான், தழலதுருவத்தான், எங்கள்
ஐயன்மேய பொய்கைசூழ் ஆனைக்காவு சேர்மினே
(11)
ஊழியூழி வையகத்துயிர்கள் தோற்றுவானொடும்
ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே

 

திருஆனைக்கா – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருஆனைக்கா

(1)
மழையார் மிடறா, மழுவாள் உடையாய்
உழையார் கரவா, உமையாள் கணவா
விழவாரும் வெண்நாவலின் மேவியஎம்
அழகா, எனும் ஆயிழையாள் அவளே
(2)
கொலையார் கரியின் உரிமூடியனே
மலையார் சிலையா வளைவித்தவனே
விலையால் எனையாளும் வெண்நாவல் உளாய்
நிலையா அருளாய் எனும் நேரிழையே
(3)
காலால் உயிர் காலனை வீடு செய்தாய்
பாலோடு நெய்யாடிய பால்வணனே
வேலாடு கையாய், எம் வெணாவல்உளாய்
ஆலார் நிழலாய் எனும் ஆயிழையே
(4)
சுறவக் கொடி கொண்டவன் நீறதுவாய்
உற நெற்றிவிழித்த எம்உத்தமனே
விறல் மிக்க கரிக்கு அருள் செய்தவனே
அறமிக்கது என்னும்என் ஆயிழையே
(5)
செங்கண் பெயர்கொண்டவன் செம்பியர்கோன்
அங்கண் கருணை பெரிதாயவனே
வெங்கண் விடையாய், எம் வெண்நாவல்உளாய்
அங்கத்தயர்வாயினள் ஆயிழையே
(6)
குன்றே அமர்வாய், கொலையார் புலியின்
தன் தோலுடையாய், சடையாய் பிறையாய்
வென்றாய் புரமூன்றை, வெண்நாவல் உளாய்
நின்றாய் அருளாய் எனும் நேரிழையே
(7)
(8)
மலை அன்றெடுத்த அரக்கன் முடிதோள்
தொலையவ் விரலூன்றிய தூமழுவா
விலையால் எனையாளும் வெண்நாவல்உளாய்
அலசாமல் நல்காய் எனும் ஆயிழையே
(9)
திருவார்தரு நாரணன் நான்முகனும்
மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்
விரையாரும் வெண்நாவலுள் மேவியஎம்
அரவா எனும் ஆயிழையாள் அவளே
(10)
புத்தர் பலரோடு அமண் பொய்த்தவர்கள்
ஒத்தவ்வுரை சொல் இவை ஓரகிலார்
மெய்த்தேவர் வணங்கும் வெண்நாவல்உளாய்
அத்தா அருளாய் எனும் ஆயிழையே
(11)
வெண்நாவல் அமர்ந்துறை வேதியனைக்
கண்ணார் கமழ் காழியர்தம் தலைவன்
பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்
விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page