திருவெண்காடு – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருவெண்காடு

(1)
கண்காட்டும் நுதலானும், கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும், பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும், பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே
(2)
பேயடையா பிரிவெய்தும், பிள்ளையினோடுள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர், ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
(3)
மண்ணொடுநீர் அனல் காலோடு ஆகாய மதிஇரவி
எண்ணில்வரும் இயமானன், இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே
(4)
விடமுண்ட மிடற்றண்ணல், வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டும் காட்சியதே
(5)
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநல் மறையவன் தன்
மேலடர் வெங்காலன் உயிர்விண்ட பினை நமன்தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே
(6)
தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையின்உடன்
ஒண்மதிய நுதல்உமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலஓதப், பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே
(7)
சக்கரம் மாற்கீந்தானும், சலந்தரனைப் பிளந்தானும்
அக்கு அரைமேல் அசைத்தானும், அடைந்தயிராவதம் பணிய
மிக்கதனுக்கருள் சுரக்கும், வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண்உடை இறையவனே
(8)
பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரநெரித்தன்றருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண்டு இசைமுரலும் வெண்காடே
(9)
கள்ளார் செங்கமலத்தான், கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவம்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே
(10)
போதியர்கள் பிண்டியர்கள், மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிறிமின், அறிவுடையீர் இதுகேள்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதும்ஒரு தீதிலர் என்று உணருமினே
(11)
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன்உறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடியபத்து இவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே

 

திருவெண்காடு – சம்பந்தர் தேவாரம் (1):

<– திருவெண்காடு

(1)
உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்று உள்கித்
தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ணம் அறுப்பான் எந்தையூர் போலும்
வெண்தாமரை மேல்  கருவண்டு யாழ்செய் வெண்காடே
(2)
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியும் அடியார் தங்கள்மேல்
ஏதம் தீர இருந்தான் வாழும்ஊர் போலும்
வேதத்தொலியால் கிளிசொல் பயிலும் வெண்காடே
(3)
தண் முத்தரும்பத் தடமூன்றுடையான் தனை உன்னிக்
கண் முத்தரும்பக் கழல்சேவடி கைதொழுவார்கள்
உண் முத்தரும்ப உவகை தருவான் ஊர்போலும்
வெண் முத்தருவிப் புனல் வந்தலைக்கும் வெண்காடே
(4)
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா உள்குவார்கள் உள்ளத்தே
கரையா வண்ணம் கண்டான் மேவும்ஊர் போலும்
விரையார் கமலத்தன்ன மருவும் வெண்காடே
(5)
பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
உள்ளத்துள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள்
தள்ளிப்போக அருளும் தலைவன்ஊர் போலும்
வெள்ளைச் சுரிசம் குலவித் திரியும் வெண்காடே
(6)
ஒளிகொள் மேனி உடையாய் உம்பராளீ என்று
அளியராகி அழுதுற்றூறும் அடியார்கட்கு
எளியான், அமரர்க்கரியான் வாழுமூர் போலும்
வெளிய உருவத்துஆனை வணங்கும் வெண்காடே
(7)
கோள்வித்தனைய கூற்றம் தன்னைக் குறிப்பினால்
மாள்வித்து, அவனை மகிழ்ந்தங்கேத்த மாணிக்காய்
ஆள்வித்தமரர்உலகம் அளிப்பான் ஊர் போலும்
வேள்விப் புகையால் வானம் இருள்கூர் வெண்காடே
(8)
வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ்சூடி என்று முப்போதும்
இளையாதேத்த இருந்தான் எந்தையூர் போலும்
விளையார் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே
(9)
கரியானோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் என்பார்கட்கு
உரியான், அமரர்க்கரியான் வாழுமூர் போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே
(10)
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்தேத்த
ஆடும் அரவம் அசைத்த பெருமான், அறிவின்றி
மூடமுடைய சமண் சாக்கியர்கள் உணராத
வேடமுடைய பெருமான் பதியாம் வெண்காடே
(11)
விடையார் கொடியான் மேவியுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடம் கலந்து தோன்றும் காழியான்
நடையார் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ்வல்லார்க்கு
அடையா வினைகள், அமரலோகம் ஆள்வாரே

 

திருவையாறு:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
1, புலனைந்தும்
2. கலையார்
3. பணிந்தவர்
4. திருத்திகழ்
5. கோடல் கோங்கம்
அப்பர் தேவாரம்:
1. மாதர்ப் பிறை
2. ஆரார் திரிபுரங்கள்
3. ஓசை ஒலியெலாம்
4. சிந்தை வாய்தல்உளான்
5. சிந்தை வண்ணத்தராய்
6. கங்கையைச் சடையுள்
7. குண்டனாய்ச் சமணரோடே
8. தானலாதுலகம் இல்லை
9. குறுவித்த
10. சிந்திப்பரியன
11. அந்திவட்டத் திங்கள்
12. விடகிலேன் அடிநாயேன்
சுந்தரர் தேவாரம்:
பரவும் பரிசொன்றறியேன்

 

திருநெய்த்தானம்:

<-- சோழ நாடு (காவிரி வடகரை)

சம்பந்தர் தேவாரம்:
மையாடிய கண்டன்
அப்பர் தேவாரம்:
1. காலனை வீழ
2. பாரிடம் சாடிய
3. கொல்லியான் குளிர்
4. வகையெலாம் உடையாயும்
5. மெய்த்தானத்து அகம் படியுள்

 

திருஈங்கோய்மலை:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
வானத்துயர் தண்மதிதோய் சடைமேல் மத்த மலர்சூடித்
தேனொத்தன மென்மொழி மான்விழியாள் தேவி பாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடும் கடவுள், உலகேத்த
ஏனத்திரள் வந்திழியும் சாரல் ஈங்கோய் மலையாரே
(2)
சூலப்படை ஒன்றேந்தி, இரவில் சுடுகாடு இடமாகக்
கோலச்சடைகள் தாழக், குழல்யாழ் மொந்தை கொட்டவே
பாலொத்தனைய மொழியாள் காண ஆடும் பரமனார்
ஏலத்தொடு நல்இலவம் கமழும் ஈங்கோய் மலையாரே
(3)
கண்கொள் நுதலார், கறைகொள் மிடற்றார், கரியின் உரி தோலார்
விண்கொள் மதிசேர் சடையார், விடையார் கொடியார், வெண்ணீறு
பெண்கொள் திருமார்பதனில் பூசும் பெம்மான், எமையாள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய் மலையாரே
(4)
மறையின் இசையார், நெறிமென் கூந்தல் மலையான் மகளோடும்
குறை வெண்பிறையும் புனலும் நிலவும் குளிர்புன் சடைதாழப்
பறையும் குழலும் கழலும்ஆர்ப்ப படுகாட்டெரியாடும்
இறைவர், சிறை வண்டறை பூஞ்சாரல் ஈங்கோய் மலையாரே
(5)
நொந்த சுடலைப்பொடி நீறணிவார், நுதல்சேர் கண்ணினார்
கந்தமலர்கள் பலவும் நிலவு கமழ்புன் சடைதாழப்
பந்தண் விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்
எந்தம் அடிகள் கடிகொள் சாரல் ஈங்கோய் மலையாரே
(6)
நீறார் அகலமுடையார், நிரையார் கொன்றை அரவோடும்
ஆறார் சடையார், அயில் வெங்கணையால் அவுணர் புரமூன்றும்
சீறா எரிசெய் தேவர் பெருமான், செங்கண் அடல் வெள்ளை
ஏறார் கொடியார், உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
(7)
வினையாயின தீர்த்தருளே புரியும் விகிர்தன், விரிகொன்றை
நனையார் முடிமேல் மதியம் சூடு நம்பான், நலமல்கு
தனையார் கமலமலர் மேலுறைவான் தலையோடனலேந்தும்
எனைஆளுடையான் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
(8)
பரக்கும்பெருமை இலங்கைஎன்னும் பதியில் பொலிவாய
அரக்கர்க்கிறைவன் முடியும் தோளும் அணியார் விரல்தன்னால்
நெருக்கிஅடர்த்து நிமலாபோற்றி என்று நின்றேத்த
இரக்கம் புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய் மலையாரே
(9)
வரியார் புலியின் உரிதோலுடையான், மலையான் மகளோடும்
பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான், திருமேனி
அரியோடுஅயனும் அறியா வண்ணம் அளவில் பெருமையோடு
எரியாய் நிமிர்ந்த எங்கள் பெருமான் ஈங்கோய் மலையாரே
(10)
பிண்டிஏன்று பெயரா நிற்கும் பிணங்கு சமணரும்
மண்டை கலனாக் கொண்டு திரியும் மதியில் தேரரும்
உண்டி வயிறார் உரைகள் கொள்ளாது, உமையோடுடனாகி
இண்டைச் சடையான் இமையோர் பெருமான் ஈங்கோய் மலையாரே
(11)
விழவார் ஒலியும், முழவும்ஓவா வேணுபுரம் தன்னுள்
அழலார் வண்ணத்தடிகள் அருள்சேர் அணிகொள் சம்பந்தன்
எழிலார் சுனையும் பொழிலும் புடைசூழ் ஈங்கோய் மலைஈசன்
கழல்சேர் பாடல் பத்தும் வல்லார் கவலை களைவாரே

 

திருப்பழனம் – அப்பர் தேவாரம் (4):

<– திருப்பழனம்

(1)
அலையார் கடல்நஞ்சம் உண்டார் தாமே
    அமரர்களுக்கருள் செய்யும் ஆதி தாமே
கொலையாய கூற்றம் உதைத்தார் தாமே
    கொல்வேங்கைத் தோலொன்றசைத்தார் தாமே
சிலையால் புரமூன்றெரித்தார் தாமே
    தீநோய் களைந்தென்னை ஆண்டார் தாமே
பலி தேர்ந்தழகாய பண்பர் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(2)
வெள்ளம் ஒருசடைமேல் ஏற்றார் தாமே
    மேலார்கண் மேலார்கண் மேலார் தாமே
கள்ளம் கடிந்தென்னை ஆண்டார் தாமே
    கருத்துடைய பூதப் படையார் தாமே
உள்ளத்துவகை தருவார் தாமே
    உறுநோய் சிறுபிணிகள் தீர்ப்பார் தாமே
பள்ளப் பரவை நஞ்சுண்டார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(3)
இரவும் பகலுமாய் நின்றார் தாமே
    எப்போதும் என் நெஞ்சத்துள்ளார் தாமே
அரவம் அரையில் அசைத்தார் தாமே
    அனலாடி அங்கை மறித்தார் தாமே
குரவங் கமழும் குற்றாலர் தாமே
    கோலங்கள் மேன்மேல் உகப்பார் தாமே
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(4)
மாறில் மதில்மூன்றும் எய்தார் தாமே
    வரியரவம் கச்சாக வார்த்தார் தாமே
நீறுசேர் திருமேனி நிமலர் தாமே
    நெற்றி நெருப்புக்கண் வைத்தார் தாமே
ஏறுகொடுஞ் சூலக்கையர் தாமே
    என்பாபரணம் அணிந்தார் தாமே
பாறுண் தலையில் பலியார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(5)
சீரால் வணங்கப் படுவார் தாமே
    திசைக்கெல்லாம் தேவாகி நின்றார் தாமே
ஆரா அமுதமும் ஆனார் தாமே
    அளவில் பெருமை உடையார் தாமே
நீறார் நியமம் உடையார் தாமே
    நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே
பாரார் பரவப் படுவார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(6)
காலனுயிர் வௌவ வல்லார் தாமே
    கடிதோடும் வெள்ளை விடையார் தாமே
கோலம் பலவும் உகப்பார் தாமே
    கோணாகம் நாணாகப் பூண்டார் தாமே
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே
    நீள்வரையின் உச்சி இருப்பார் தாமே
பால விருத்தரும் ஆனார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(7)
ஏய்ந்த உமைநங்கை பங்கர் தாமே
    ஏழூழிக்கப்புறமாய் நின்றார் தாமே
ஆய்ந்து மலர்தூவ நின்றார் தாமே
    அளவில் பெருமை உடையார் தாமே
தேய்ந்த பிறைசடைமேல் வைத்தார் தாமே
    தீவாய் அரவதனை ஆர்த்தார் தாமே
பாய்ந்த படர்கங்கை ஏற்றார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(8)
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே
    உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே
பேராதென் சிந்தை இருந்தார் தாமே
    பிறர்க்கென்றும் காட்சிக்கரியார் தாமே
ஊராரு மூவுலகத்துள்ளார் தாமே
    உலகை நடுங்காமல் காப்பார் தாமே
பாரார் முழவத்திடையார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(9)
நீண்டவர்க்கோர் நெருப்புருவம் ஆனார் தாமே
    நேரிழையை ஒருபாகம் வைத்தார் தாமே
பூண்டரவைப் புலித்தோல்மேல் ஆர்த்தார் தாமே
    பொன்னிறத்த வெள்ளச் சடையார் தாமே
ஆண்டுலகு ஏழனைத்தினையும் வைத்தார் தாமே
    அங்கங்கே சிவமாகி நின்றார் தாமே
பாண்டவரில் பார்த்தனுக்குப் பரிந்தார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே
(10)
விடையேறி வேண்டுலகத்திருப்பார் தாமே
    விரிகதிரோன் சோற்றுத் துறையார் தாமே
புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே
    பூந்துருத்தி நெய்த்தானம் மேயார் தாமே
அடைவே புனல்சூழ் ஐயாற்றார் தாமே
    அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே
படையாப் பல்பூதம் உடையார் தாமே
    பழன நகரெம் பிரானார் தாமே

 

திருப்பழனம் – அப்பர் தேவாரம் (3):

<– திருப்பழனம்

(1)
அருவனாய், அத்தி ஈருரி போர்த்துமை
உருவனாய், ஒற்றியூர் பதியாகிலும்
பருவரால் வயல் சூழ்ந்த பழனத்தான்
திருவினால் திருவேண்டும் இத்தேவர்க்கே
(2)
வையம் வந்து வணங்கி வலங்கொளும்
ஐயனை அறியார் சிலர் ஆதர்கள்
பைகொள் ஆடரவார்த்த பழனன்பால்
பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே
(3)
வண்ணமாக முறுக்கிய வாசிகை
திண்ணமாகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணுமாகவே பாடும் பழனத்தான்
எண்ணும் நீர் அவன் ஆயிர நாமமே
(4)
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட
வாக்கப் பாம்பினைக் கண்ட துணிமதி
பாக்கப் பாம்பினைப் பற்றும் பழனத்தான்
தார்க்கொள் மாலை சடைக்கணிந்திட்டதே
(5)
நீலமுண்ட மிடற்றினன், நேர்ந்ததோர்
கோலமுண்ட குணத்தால் நிறைந்ததோர்
பாலுமுண்டு பழனன்பால் என்னிடை
மாலும் உண்டிறை எந்தன் மனத்துளே
(6)
மந்தமாக வளர்பிறை சூடியோர்
சந்தமாகத் திருச்சடை சாத்துவான்
பந்தமாயின தீர்க்கும் பழனத்தான்
எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே
(7)
மார்க்கமொன்றறியார் மதியில்லிகள்
பூக்கரத்தில் புரிகிலர் மூடர்கள்
பார்க்க நின்று பரவும் பழனத்தான்
தாள்கள் நின்று தலை வணங்கார்களே
(8)
ஏறினார் இமையோர்கள் பணிகண்டு
தேறுவார் அலர் தீவினையாளர்கள்
பாறினார் பணி வேண்டும் பழனத்தான்
கூறினான் உமையாளொடும் கூடவே
(9)
சுற்றுவார் தொழுவார் சுடர்வண்ணன் மேல்
தெற்றினார் திரியும் புரம் மூன்றெய்தான்
பற்றினார் வினை தீர்க்கும் பழனனை
எற்றினான் மறக்கேன் எம்பிரானையே
(10)
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கிறை
அங்கமான இறுத்தருள் செய்தவன்
பங்கன் என்றும் பழனன் உமையொடும்
தங்கன் தாள் அடியேனுடை உச்சியே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page