சீகாழி – சுந்தரர் தேவாரம்:

(1)
சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
    தன்னருள் தந்தஎம் தலைவனை, மலையின்
மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
    வருபுனல் சடையிடை வைத்த எம்மானை
ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
    எண்வகை ஒருவனை, எங்கள் பிரானைக்
காதில்வெண் குழையனைக், கடல்கொள மிதந்த
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(2)
மற்றொரு துணைஇனி மறுமைக்கும் காணேன்
    வருந்தலுற்றேன், மறவா வரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன்
    துணையென்று நான் தொழப்பட்ட ஒண்சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா
    முறைமுறை பலபல நெறிகளும் காட்டிக்
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(3)
திருத்தினை நகருறை சேந்தன்அப்பன், என்
    செய்வினை அறுத்திடும் செம்பொனை, அம்பொன்
ஒருத்தனை அல்லதிங்காரையும் உணரேன்
    உணர்வு பெற்றேன் உய்யும் காரணம் தன்னால்
விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி
    விழித்தெங்கும் காணமாட்டாது விட்டிருந்தேன்
கருத்தனை, நிருத்தம்செய் காலனை, வேலைக்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(4)
மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை
    வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன்
பிழைத்தொரு கால் இனிப்போய்ப் பிறவாமைப்
    பெருமை பெற்றேன், பெற்றதார் பெறுகிற்பார்
குழைக்கரும் கண்டனைக் கண்டு கொள்வானே
    பாடுகின்றேன், சென்று கூடவும் வல்லேன்
கழைக்கரும்பும் கதலிப்பல சோலைக்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(5)
குண்டலங்குழைதிகழ் காதனே என்றும்
    கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்
வண்டலம்பும் மலர்க் கொன்றையன் என்றும்
    வாய் வெருவித் தொழுதேன் விதியாலே
பண்டைநம் பலமனமும் களைந்து ஒன்றாய்ப்
    பசுபதி பதி வினவிப் பலநாளும்
கண்டலம் கழிக்கரை ஓதம் வந்துலவும்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(6)
வரும்பெரு வல்வினை என்றிருந்தெண்ணி
    வருந்தலுற்றேன், மறவா மனம் பெற்றேன்
விரும்பிஎன் மனத்திடை மெய் குளிர்ப்பெய்தி
    வேண்டி நின்றேன் தொழுதேன் விதியாலே
அரும்பினை அலரினை அமுதினைத் தேனை
    ஐயனை, அறவன்என் பிறவிவேர் அறுக்கும்
கரும்பினைப், பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(7)
அயலவர் பரவவும் அடியவர் தொழவும்
    அன்பர்கள் சாயலுள் அடையல் உற்றிருந்தேன்
முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை
    படுமென மொழிந்தவர் வழி முழுதெண்ணிப்
புயலினைத் திருவினைப் பொன்னினதொளியை
    மின்னினதுருவினை என்னிடைப் பொருளைக்
கயலினம் சேலொடு வயல்விளையாடும்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(8)
நினைதரு பாவங்கள் நாசங்களாக
    நினைந்துமுன் தொழுதெழப்பட்ட ஒண்சுடரை
மனைதரு மலைமகள் கணவனை, வானோர்
    மாமணி மாணிக்கத்தை, மறைப் பொருளைப்
புனைதரு புகழினை, எங்களதொளியை
    இருவரும் ஒருவனென்றுணர்வரியவனைக்
கனைதரு கருங்கடல் ஓதம் வந்துலவும்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(9)
மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப
    வஞ்சனை செய்தவர் பொய்கையுள் மாயத்
துறையுறக் குளித்துளதாக வைத்துய்த்த
    துன்மையெனும் தகவின்மையை ஓரேன்
பிறையுடைச் சடையனை, எங்கள் பிரானைப்
    பேரருளாளனைக், காரிருள் போன்ற
கறையணி மிடறுடை அடிகளை, அடியேன்
    கழுமல வளநகர்க் கண்டு கொண்டேனே
(10)
செழுமலர்க் கொன்றையும் கூவிள மலரும்
    விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டு
அழுமலர்க் கண்ணிணை அடியவர்க்கல்லால்
    அறிவரிது அவன் திருவடியிணை இரண்டும்
கழுமல வளநகர்க் கண்டுகொண்டு ஊரன்
    சடையன்தன் காதலன் பாடிய பத்தும்
தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத்
    துன்பமும் இடும்பையும் சூழகிலாவே

 

திருப்பாற்றுறை:

<– சோழ நாடு (காவிரி வடகரை)

(குறிப்பு: திருஞானசம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)

(சம்பந்தர் தேவாரம்):

(1)
காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச் செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரார் ஆதி முதல்வரே
(2)
நல்லாரும் அவர், தீயர் எனப்படும்
சொல்லார், நன்மலர் சூடினார்
பல்லார் வெண்தலைச் செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே
(3)
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில் கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா நாள்நாளும் உறைவரே
(4)
பூவும் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லார் எயிலெய்தார்
பாவம்தீர் புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை ஒருவரே
(5)
மாகம் தோய் மதிசூடி மகிழ்ந்தெனது
ஆகம் பொன்னிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே
(6)
போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலம் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே
(7)
வாடல் வெண்தலை சூடினர், மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே
(8)
வெவ்வ மேனியராய் வெள்ளை நீற்றினர்
எவ்வம் செய்தென் எழில் கொண்டார்
பவ்வ நஞ்சடை கண்டர்எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே
(9)
ஏனம் அன்னமும் ஆனவருக்கு, எரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பானலம் மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே
(10)
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே
(11)
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம்பந்தனது இன்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே

 

திருக்கழிப்பாலை – சம்பந்தர் தேவாரம் (2):

<– திருக்கழிப்பாலை

(1)
வெந்த குங்கிலியப் புகை விம்மவே
கந்த நின்றுலவும் கழிப்பாலையார்
அந்தமும் அளவும் அறியாததோர்
சந்தமாலவர் மேவிய சாந்தமே
(2)
வானிலங்க விளங்கும் இளம்பிறை
தானலங்கல் உகந்த தலைவனார்
கானிலங் கவரும் கழிப்பாலையார்
மானலம் மடநோக்கு உடையாளொடே
(3)
கொடிகொள் ஏற்றினர், கூற்றை உதைத்தனர்
பொடிகொள் மார்பினில் பூண்டதொர் ஆமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள்
அடிகள் செய்வன ஆர்க்கறிவொண்ணுமே
(4)
பண்ணலம் பட வண்டறை கொன்றையின்
தண்அலங்கல் உகந்த தலைவனார்
கண்ணலம் கவரும் கழிப்பாலையுள்
அண்ணல்எம் கடவுள் அவனல்லனே
(5)
ஏரினார் உலகத்திமையோரொடும்
பாரினார் உடனே பரவப்படும்
காரினார் பொழில்சூழ் கழிப்பாலைஎம்
சீரினார் கழலே சிந்தை செய்ம்மினே
(6)
துள்ளு மான்மறி அங்கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார் இடு வெண்தலையில் பலி
கள்வனார் உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினையாயின ஓயுமே
(7)
மண்ணினார் மலி செல்வமும் வானமும்
எண்ணி நீர் இனிது ஏத்துமின், பாகமும்
பெண்ணினார், பிறை நெற்றியொடு உற்றமுக்
கண்ணினார் உறையும் கழிப்பாலையே
(8)
இலங்கை மன்னனை ஈரைந்திரட்டி தோள்
துலங்க ஊன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துலவும் கழிப்பாலையை
வலங்கொள்வார் வினையாயின மாயுமே
(9)
ஆட்சியால் அலரானொடு மாலுமாய்த்
தாட்சியால் அறியாது தளர்ந்தனர்
காட்சியால் அறியான் கழிப்பாலையை
மாட்சியால் தொழுவார் வினை மாயுமே
(10)
செய்ய நுண்துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மைஎனோ?, கழிப்பாலைஎம்
ஐயன் சேவடி அடைந்து உய்ம்மினே
(11)
அந்தண் காழி அருமறை !ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ் கழிப்பாலையைச்
சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுலகாடல் முறைமையே

 

திருவையாறு – சுந்தரர் தேவாரம்:

<– திருவையாறு

(1)
பரவும் பரிசொன்றறியேன் நான்
    பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும்
    எய்த நினைய மாட்டேன்நான்
கரவில் அருவி கமுகுண்ணத்
    தெங்கங்குலைக் கீழ்க் கருப்பாலை
அரவந்திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(2)
எங்கே போவேன் ஆயிடினும்
    அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை ஒன்றும் இன்றியே
    தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடைமேல் கரந்தானே
    கலைமான் மறியும் கனல்மழுவும்
தங்கும் திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(3)
மருவிப் பிரிய மாட்டேன் நான்
    வழி நின்றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரல்
    பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பிக் கிளிகடிவார்
    குழல்மேல் மாலை கொண்டோட்டம்
தரவந்திரைக் காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(4)
பழகா நின்று பணிசெய்வார்
    பெற்ற பயனொன்றறிகிலேன்
இகழாதுமக்காட் பட்டோர்க்கு
    வேக படமொன்றரைச் சாத்திக்
குழகா, வாழைக்குலை தெங்கு
    கொணர்ந்து கரைமேல் எறியவே
அழகார் திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(5)
பிழைத்த பிழையொன்றறியேன் நான்
    பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட
    மலையும் நிலனும் கொள்ளாமைக்
கழைக்கொள் பிரசம் கலந்தெங்கும்
    கழனி மண்டிக் கையேறி
அழைக்கும் திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(6)
கார்க்கொள் கொன்றை சடைமேல் !ஒன்
    றுடையாய், விடையாய், கையினால்
மூர்க்கர் புரமூன்றெரி செய்தாய்
    முன்நீ பின்நீ முதல்வன்நீ
வார்கொள் அருவி பலவாரி
    மணியும் முத்தும் பொன்னும்கொண்டு
ஆர்க்கும் திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(7)
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப்
    பற்றி உலகம் பலிதேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயில்எய்த
    செங்கண் விடையாய் தீர்த்தன்நீ
மலைக்கொள் அருவி பலவாரி
    மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
அலைக்கும் திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(8)
போழும் மதியும் புனக்கொன்றை
    புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ
    உன்னைத் தொழுவார் துயர்போக
வாழும் அவர்கள் அங்கங்கே
    வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(9)
கதிர்க்கொள் பசியே ஒத்தேநான்
    கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன்நான்
    எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழைபொழிய
    வெள்ளம் பரந்து நுரைசிதறி
அதிர்க்கும் திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(10)
கூசி அடியார் இருந்தாலும்
    குணமொன்றில்லீர் குறிப்பில்லீர்
தேச வேந்தன் திருமாலும்
    மலர்மேல் அயனும் காண்கிலார்
தேசம் எங்கும் தெளிந்தாடத்
    தெண்ணீர் அருவி கொணர்ந்தெங்கும்
வாசந்திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ
(11)
கூடி அடியார் இருந்தாலும்
    குணமொன்றில்லீர் குறிப்பில்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன்
    உம்மைத் தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன்
    திருவாரூரே சிந்திப்பன்
ஆடுந்திரைக்காவிரிக் கோட்டத்து
    ஐயாறுடைய அடிகேளோ

 

திருஆனைக்கா – சுந்தரர் தேவாரம்:

<– திருஆனைக்கா

(1)
மறைகளாயின நான்கும், மற்றுள பொருள்களும் எல்லாத்
துறையும், தோத்திரத்திறையும் தொன்மையும் நன்மையுமாய
அறையும் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(2)
வங்கம் மேவிய வேலை நஞ்செழ, வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல் அடராமை உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே
(3)
நீல வண்டறை கொன்றை, நேரிழை மங்கை, ஓர்திங்கள்
சால வாள் அரவங்கள் தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஏலுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
(4)
தந்தை தாய் உலகுக்கோர் தத்துவன், மெய்த் தவத்தோர்க்குப்
பந்தமாயின பெருமான், பரிசுடையவர் திருஅடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(5)
கணை செந்தீ, அரவம்நாண், கல்வளையும் சிலையாகத்
துணை செயும்மதில் மூன்றும் சுட்டவனே உலகுய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(6)
விண்ணின் மாமதி சூடி, விலையிலி கலனணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை பங்கினன், பசுஉகந்தேறி
அண்ணலாகிய ஆனைக்காவுடை ஆதியை நாளும்
எண்ணுமாறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
(7)
தாரமாகிய பொன்னித் தண்துறை ஆடி விழுத்து
நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங்கொண்ட எம்ஆனைக்காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே
(8)
உரவம் உள்ளதொர் உழையின் உரிபுலியதள் உடையானை
விரைகொள் கொன்றையினானை, விரிசடை மேல்பிறையானை
அரவம் வீக்கிய ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் ஏத்துவார் எம்மை ஆளுடையாரே
(9)
வலங்கொள்வார் அவர்தங்கள் வல்வினை தீர்க்கு மருந்து
கலங்கக் காலனைக் காலால், காமனைக் கண்சிவப்பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
(10)
ஆழியாற்கருள் ஆனைக்காவுடை ஆதி பொன்னடியின்
நீழலே சரணாக நின்றருள் கூர நினைந்து
வாழவல்ல வன்தொண்டன் வண்தமிழ் மாலை வல்லார்போய்
ஏழுமா பிறப்பற்று எம்மையும் ஆளுடையாரே

 

திருமழபாடி – சுந்தரர் தேவாரம்:

<– திருமழபாடி

(1)
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே, மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(2)
கீளார் கோவணமும், திருநீறு மெய்பூசி உந்தன்
தாளே வந்தடைந்தேன், தலைவா எனை ஏன்றுகொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா, நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(3)
எம்மான் எம்மனை எந்தனுக்கெள்தனைச் சார்வாகார்
இம்மாயப் பிறவி பிறந்தேஇறந்து எய்த்தொழிந்தேன்
மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(4)
பண்டே நின்னடியேன் அடியார் அடியார்கட்கெல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன், தொடராமைத் துரிசறுத்தேன்
வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(5)
கண்ணாய் ஏழுலகும் கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே
மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(6)
நாளார் வந்தணுகி நலியாமுனம் நிந்தனக்கே
ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ
மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னைஅல்லால் இனியாரை நினைக்கேனே
(7)
சந்தாரும் குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே
மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
(8)
வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாம்
செய்ய மலர்களிடம் மிகு செம்மையுள் நின்றவனே
மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னைஅல்லால் இனி யாரை நினைக்கேனே
(9)
நெறியே, நின்மலனே, நெடுமாலயன் போற்றிசெய்யும்
குறியே, நீர்மையனே, கொடியேர் இடையாள் தலைவா
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனி யாரை நினைக்கேனே
(10)
ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்திருப்பாரே

 

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page