சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருகின்றது, இது அவசியமும் கூட.
எனினும் தேவாரத் திருப்பதிகங்களை மூலப் பிரதியிலிருந்து பாராயணம் புரிவதென்பது சாத்தியமில்லாத ஒன்று. ஓரளவு பிரயத்தனத்துடன் ஒரு 10% பாடல்களை வேண்டுமானால் பாராயணம் புரிந்து விடலாம், மீதமுள்ளவைகளை அவ்வளவு எளிதாக அணுகிவிட இயலாது.
இன்னபிற வலைத்தளங்களில், சொற்களை அதீதமாகப் பதம் பிரித்த நிலையில் காணக் கிடைக்கின்றன, கண்ணார் என்பதை ‘கண் ஆர்’ என்பது வரையிலும் பிரிக்கப் பெற்றிருப்பதால், பாராயணம் புரிவதிலுள்ள சந்தம் தடைபட்டு விடுகின்றது.
மேலும் பாராயணம் புரிகையில், ‘எங்கிருந்து எது வரையிலும் ஒருசேர இணைத்துப் படிக்க வேண்டும்’ என்பதற்கான நிறுத்தற் குறிகள் மிகவும் அவசியம், இல்லையெனில் பொருள் முற்றிலுமாய் மாறுபட்டு விடும்.
தற்பொழுதுள்ள வலைத்தளங்களில் பன்முறையில் அல்லது திருமுறை எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே தொகுக்கப் பெற்றிருப்பதால், ஒரு தலத்திற்கு யாத்திரை மேற்கொள்ளுகையில் அத்தலம் தொடர்பான பதிகங்கள் ஒவ்வொன்றையும் தேடுவதென்பது பகீரதப் பிரயத்தனமாகி விடுகின்றது.
தற்பொழுது கிடைக்கப் பெறும் தேவார நூல்களிலும் பதங்கள் ஓரளவிற்கே பிரிக்கப் பெற்றுள்ளது, எவ்வித நிறுத்தற் குறிகளும் காணப் பெறுவதில்லை. மேலும் ஆலயங்களுக்குச் செல்லுகையில் 7 திருமுறை நூல்களையும் உடன் எடுத்துச் செல்வதென்பது எண்ணிறந்த சிரமங்களை ஏற்படுத்தும். மேலும் ஒரு தலத்திற்கான திருப்பதிகங்கள் அந்த நூல்களில் ஆங்காங்கே விரவி இருப்பதால், அவைகளை ஒருசேரத் தேடியெடுப்பது என்பது நடவாத ஒன்று.
*
மேற்குறித்துள்ள காரணங்களால், திருவருளின் துணை கொண்டு, தேவாரத் திருப்பதிகங்களுக்கென புதியதொரு வலைத்தளம் உருவாக்கும் முயற்சியில் சுமார் ஈடுபட்டு அத்திருப்பணி இப்பொழுது நிறைவு பெற்றுள்ளது. இனி இவ்வலைத்தளம் குறித்த விவரங்களைக் காண்போம்,
1. தொண்டைநாடு; நடுநாடு துவங்கி ஈழ நாடு வரையிலான 10 பிரிவுகளையும் தனித்தனியே அமைத்து, அப்பிரிவுகள் ஒவ்வொன்றிற்குள்ளும் தலங்கள் மாவட்ட வாரியாக தொகுக்கப் பெற்றுள்ளது.
2. ஒவ்வொரு தலத்திற்கான பக்கத்திலும் அந்தந்த தலத்திற்கான அனைத்துத் தேவாரப் பதிகங்களையும், அவற்றினை அருளிச் செய்துள்ள தேவார மூவரின் தலைப்புகளின் கீழ் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது.
3. ஒவ்வொரு திருப்பதிகப் பாடலையும், சமயச் சான்றோர்கள் முன்னமே அருளியிருந்த உரை மற்றும் பொருளின் அடைப்படையில், பொருளுணர்ந்து, தக்கதொரு நிறுத்தற் குறிகளோடு, முறையாக (தேவையான அளவு – அதீதமாக இல்லாமல்), அயற்சியின்றி பாராயணம் புரிவதற்கு ஏற்ற வகையில் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது.
4. ‘ஒரு தலத்திற்கு தேவார மூவரும் எவ்வளவு திருப்பதிகங்கள் அருளியுள்ளனர்’ என்பதைத் முன்னமே தெளிவாக அறிந்து கொள்வது, தலயாத்திரை குறித்த திட்டமிடலுக்கு மிகவும் துணை செய்யும். குறிப்பாக சீகாழி; திருவாரூர்; திருவீழிமிழலை; திருவிடைமருதூர்; திருவதிகை; திருப்பூந்துருத்தி; காஞ்சிபுரம்; திருவையாறு உள்ளிட்ட திருத்தலங்களுக்கு எண்ணிறந்த திருப்பதிகங்கள் உள்ளன (சீகாழிக்கு மட்டுமே 71 திருப்பதிகங்கள்).
திருமுறைப் பாராயணம் சிவபரம்பொருளின் பரிபூரணத் திருவருளையும், அதன் வாயிலாக வினை நீக்கத்தையும் பெற்றுத் தரவல்ல சக்தி வாய்ந்த வழிமுறை. ஆதலின் அதனைப் பயன்பாட்டிற்கு எளிதாக்கிக் கொள்வது மிகமிக அவசியமாகின்றது.
அவ்வகையில் இவ்வலைத்தளத்தில் 7 திருமுறைகளையும் சேர்த்து, மொத்தம் 779 திருப்பதிகங்கள் தொகுக்கப் பெற்றுள்ளது (சுமார் 400 மணி நேரம் இத்திருப்பணிக்கென்று பிரத்தேயேகமாக ஒதுக்க வேண்டியிருந்தது).
–
திருமுறையே சைவநெறிக் கருவூலம்; தென்தமிழின் தேன்பாகாகும்
திருமுறையே கயிலையின்கண் சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த எழுதிய அருள்தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்