(குறிப்பு: கொட்டையூர் அப்பர் சுவாமிகளால் மட்டுமே பாடல் பெற்றுள்ள திருத்தலம்)
(அப்பர் தேவாரம்):
(1)
கருமணிபோல் கண்டத்தழகன் கண்டாய்
கல்லால் நிழற்கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக் குன்றன்ன பரமன் கண்டாய்
வருமணிநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய், வரதன் கண்டாய்
குருமணி போல் அழகமரும் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(2)
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப்பாலான் கண்டாய்
மலைப்பண்டம் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கம் சோலைசூழ் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(3)
செந்தாமரைப் போதணிந்தான் கண்டாய்
சிவன்கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய்தயிர் தேனாடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்
கொந்தார் பொழில்புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(4)
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய்
புள்பாகற்காழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடுமுழக்கேறு ஊர்ந்தான் கண்டாய்
எண்திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரைபுரளும் காவிரி வாய்
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
கொடியாடு நெடுமாடக் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(5)
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைகள் ஆறங்கம் ஆனான் கண்டாய்
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்
சதாசிவன் காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொள் மயில்தழை கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய்
கொக்கமரும் வயல்புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(6)
சண்டனை நல்அண்டர்தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்
தொண்டர்பலர் தொழுதேத்தும் கழலான் கண்டாய்
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டுபுனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(7)
அணவரியான் கண்டாய்; அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்
பணமணி மாநாகம் உடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்
மணல்வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணமுடைநல் அடியார்வாழ் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(8)
விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்
வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்
அரையதனில் புள்ளிஅதள் உடையான் கண்டாய்
அழலாடி கண்டாய்; அழகன் கண்டாய்
வருதிரைநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
வஞ்ச மனத்தவர்க்கரிய மைந்தன் கண்டாய்
குரவமரும் பொழில்புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(9)
தளங்கிளரும் தாமரையா தனத்தான் கண்டாய்
தசரதன்தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டெட்டு இருங்கலையும் ஆனான் கண்டாய்
வளங்கிளர்நீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளங்குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
(10)
விண்டார் புரமூன்றெரித்தான் கண்டாய்
விலங்கலில் வல்லரக்கனுடல் அடர்த்தான் கண்டாய்
தண் தாமரையானும் மாலும் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய்; மறையோடங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
கோடீச்சரத்துறையும் கோமான் தானே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...