(1)
விரையார் கொன்றையினாய், விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழாய், உமைநங்கையொர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மியூர் உறையும்
அரையா உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(2)
இடியார் ஏறுடையாய், இமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோடரவம் மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மியூர் உறையும்
அடிகேள் உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(3)
கையார் வெண்மழுவா, கனல்போல் திருமேனியனே
மையார் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே
செய்யார் செங்கயல் பாய் திருவான்மியூர் உறையும்
ஐயா உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(4)
பொன்போலும் சடைமேல் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போலும் புரிநூல், விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாம் திகழும் திருவான்மி தன்னில்
அன்பா உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(5)
கண்ணாரும் நுதலாய், கதிர் சூழொளி மேனியின் மேல்
எண்ணார் வெண்பொடி நீறணிவாய், எழில் வார்பொழில் சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மியூர் உறையும்
அண்ணா உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(6)
நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள், மறையோன் தலை ஒன்றினையும்
சேதீ, சேதமில்லாத் திருவான்மிர் உறையும்
ஆதீ உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(7)
வானார் மாமதிசேர் சடையாய், வரை போலவரும்
கானார் ஆனையின் தோலுரித்தாய், கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மியூர் உறையும்
ஆனா உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(8)
…
(9)
பொறிவாய் நாகணையானொடு பூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழல் மேல்முடி காண்பரிதாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மியூர் உறையும்
அறிவே உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(10)
குண்டாடும் சமணர் கொடுஞ்சாக்கியர் என்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்தேர் வீதியதார் திருவான்மியூர் உறையும்
அண்டா உன்னையல்லால் அடையாதென் ஆதரவே
(11)
கன்றாரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில்
நன்றான புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை
சென்றார் தம்மிடர் தீர் திருவான்மியூர் அதன்மேல்
குன்றாதேத்த வல்லார் கொடு வல்வினை போயறுமே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...