(1)
கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக், கரவார்பால்
விரவாடும் பெருமானை, விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
(2)
தேனோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும்பவளம்
தானோக்கும் திருமேனி தழலுருவாம் சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை, வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
(3)
கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே
(4)
அண்டமாய் ஆதியாய், அருமறையொடைம்பூதப்
பிண்டமாய், உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் அலர்தூவிச் சொல்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே
(5)
ஆறேறு சடையானை, ஆயிரம்பேர் அம்மானைப்
பாறேறு படுதலையில் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே
(6)
தேசனைத், தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப், பூவின்கண்
வாசனை மலைநிலம்நீர் தீவளி ஆகாசமாம்
ஈசனை, எம்மானை என் மனத்தே வைத்தேனே
(7)
நல்லானை, நல்லான நான்மறையோடாறங்கம்
வல்லானை, வல்லார்கண் மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச், சொல்லார்ந்த பொருளானைத், துகளேதும்
இல்லானை, எம்மானை என்மனத்தே வைத்தேனே
(8)
விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனை
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல், மதில் மூன்றும்
எரித்தானை, எம்மானை என்மனத்தே வைத்தேனே
(9)
ஆகம்பத்தரவணையான் அயன் அறிதற்கரியானைப்
பாகம் பெண்ஆண் பாகமாய் நின்ற பசுபதியை
மாகம்ப மறையோதும் இறையானை, மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே
(10)
அடுத்தானை உரித்தானை, அருச்சுனற்குப் பாசுபதம்
கொடுத்தானைக், குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப், புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே
தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:
சைவ சமயத்திற்கு அளப்பரிய தொண்டாற்றி வரும் பிரதான வலைத்தளங்களில், தேவாரம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகளின் மூலம் பேணிப் பாதுகாக்கப் பெற்று வருக...