திருவொற்றியூர் – அப்பர் தேவாரம் (1):

<– திருவொற்றியூர்

 

(1)
செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று, செருவெண் கொம்பொன்று
இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச், சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமால் ஒற்றியூரனுக்கே
(2)
சொல்லக் கருதியதொன்றுண்டு கேட்கில், தொண்டாய் அடைந்தார்
அல்லல் படக்கண்டு பின்னென் கொடுத்தி, அலைகொள் முந்நீர்
மல்லல் திரைச்சங்க நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லைத் திரை கொணர்ந்தெற்று ஒற்றியூர் உறை உத்தமனே
(3)
பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவம் அணிதரு கொன்றை இளம்திங்கள் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்கம் அணிந்து குலாயசென்னி
உரவு திரை கொணர்ந்தெற்று ஓற்றியூர்உறை உத்தமனே
(4)
தானகம் காடரங்காக உடையது, தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலையில் பலி கொள்வதும் தான்
தேனக நாறும் திருவொற்றியூர் உறைவார் அவர்தாம்
தானகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே
(5)
வேலைக் கடல்நஞ்சம் உண்டு, வெள்ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்குறைவிடமாவது, வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றியூரை எப்போதும் தொழுமின்களே
(6)
புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கையென்னும்
சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும் சேர்விடமாம்
பெற்றுடையான், பெரும் பேச்சுடையான், பிரியாது எனையாள்
விற்றுடையான், ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே
(7)
இன்று அரைக்கண் உடையார் எங்குமில்லை, இமயமென்னும்
குன்றரைக்கண் நல்குலமகள் பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணும் கொடுத்து, உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே
(8)
சுற்றிவண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்திலங்கு
பெற்றி கண்டால் மற்றி யாவரும் கொள்வர், பிறரிடைநீ
ஒற்றி கொண்டாய், ஒற்றியூரையும் கைவிட்டுறும் என்றெண்ணி
விற்றி கண்டாய், மற்றிது ஒப்பதில்லிடம் வேதியனே
(9)
சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீஎன்ன செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று கண்குழித்துத்
தெற்றித்திருப்பதல்லால் என்ன செய்யும்இத் தீவினையே
(10)
அங்கள் கடுக்கைக்கு முல்லைப் புறவ முறுவல் செய்யும்
பைங்கண் தலைக்குச் சுடலைக், களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை, அரவுக்குப் புற்றுக், கலைநிரம்பாத்
திங்கட்கு வானம் திருவொற்றியூரர் திருமுடியே
(11)
தருக்கின வாளரக்கன் முடி பத்திறப் பாதம் தன்னால்
ஒருக்கினவாறடியேனைப் பிறப்பறுத்தாள வல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பருக்கினவாறென் செய்கேன் ஒற்றியூருறை பண்டங்கனே

Leave a Comment

தேவாரத் திருப்பதிகங்களுக்கான பாராயண வலைத்தளம்:

You cannot copy content of this page